15078653_325842307795990_7051506620319823028_n

 

இருள் சூழ்ந்து கிடந்த அந்த தெருவில் வெள்ளை உடையுடன் சில இளைஞர்களுடன் அவர் வேக வேகமாய் நடந்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வீட்டின் முன் நின்று கைக்கூப்பி துண்டறிக்கை கொடுத்து விட்டு சென்ற அவருக்கு சில கதவுகள் மட்டும் தான் திறந்தன. பல கதவுகள் திறக்கப்படாமல் போகவே கதவு இடுக்கில் துண்டறிக்கையை வைத்து விட்டு அவர் நம்பிக்கையுடன் நகர்ந்தது ஏதோ அந்த நேரத்தில் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மனித வாழ்வின் நம்பிக்கை அம்சங்களில் எப்போதும் தளர்வைக் கொண்டிருப்பவன் நான். ஆனால் அவரோ நம்பிக்கையின் உருவாக நடந்து சென்றது எனக்கு ஏதோ ஒரு பாடத்தை அவர் சொல்ல வருவது போன்ற உணர்ச்சி. நீண்ட தூரம் நடந்து வந்ததால் அவருக்கு முச்சிரைத்தது. ஏற்கனவே இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த அவரை காணும் போதெல்லாம் அருகிலிருந்த எங்களுக்கு கவலையாகத்தான் இருந்தது. ஏன் இந்த மனிதன் இப்படி நடக்கிறான்.. யாருக்காக நடக்கிறான். எந்த கனவினை நோக்கி அவன் இப்படி நடக்கிறான்..?

——————————————————

அண்ணன் நல்லதுரை.

கடந்த 7 வருடங்களாக அவருடன் தான் இருக்கிறேன். 2008 ஆம் ஆண்டு ஈழ ஆதரவு போராட்டங்களை வழக்கறிஞர் போராட்டமாக மாற்றிய மாபெரும் கிளர்ச்சியாளர் அவர். தஞ்சையில் இருந்துக் கொண்டு தமிழ்நாட்டையே வழக்கறிஞர்கள் போராட்டத்தால் நகர்த்துக் கொண்டு சென்றதில் அவருக்கு பெரும் பங்கு. அந்த காலத்தில் தான் நானும் அவரும் அண்ணன் தம்பிகளானோம் .பிறகு அண்ணன் சீமானோடு நான் நாம் தமிழரில் இணைந்து இயங்கத் தொடங்கிய காலத்தில் ..தஞ்சையில் நாம் தமிழரை உருவாக்க சீமான் அண்ணன் என்னிடம் சொன்ன போது என் நினைவிற்கு வந்தவர் அண்ணன் நல்லதுரை. நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்த அவரை செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் அண்ணன் சீமானோடு உரையாட அழைத்த போது..நல்லதுரை அண்ணனிடம் இணைந்து இயங்குவதைக் காட்டிலும்.. சீமான் அண்ணனிடம் கேட்க அவரிடம் கேள்விகள் நிறைய இருந்தன. அண்ணன் சீமானும் , நல்லதுரை அண்ணனின் கேள்விகளை உற்சாகமாக எதிர்க்கொள்ளவே..ஆரம்பித்தது ஒரு அற்புதமான உரையாடல்.. முடிவில் நல்லதுரை நாம் தமிழரின் பிரிக்கமுடியா ஒரு அங்கமாக மாறிப்போனார்.

பிறகு பல்வேறு சூழல்கள். போராட்டங்கள், கூட்டங்கள் என நாம் தமிழர் இயக்கத்தினை ஒரு அரசியல் அமைப்பாக மாற்றுவதில் அண்ணன் நல்லதுரையின் பங்கு மகத்தானது. தஞ்சை டெல்டா மாவட்டத்தை சுடுகாடாக்க வந்த திட்டமான மீத்தேன் எரிகாற்று எடுக்கும் திட்டத்தினை முதன் முதலாக அறிந்து போராட்டக் குரல் எழுப்பிய முதல் நபர் அண்ணன் நல்லதுரைதான். அது போல முள்ளிவாய்க்கால் முற்றம் காக்க அய்யா நெடுமாறனோடு திருச்சி சிறையில் 1 வாரத்திற்கு மேலாக சிறை கண்டார். இப்படி போராட்டமே வாழ்க்கையாக கொண்ட ஒரு மாமனிதர், சிந்தனையாளர்தான் தஞ்சை தொகுதியின் எங்களது வேட்பாளர்.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது போல தேர்தல் இல்லை. அது முற்றிலும் பண ஓநாய்கள் விளையாடுகிற…ஒன்றையொன்று கடித்து புசிக்கிற வேட்டைக்களம். அதிகார வெறி பிடித்த ஓநாய்கள் வேட்டையாடுகிற போது சிந்துகிற கறித்துண்டுகளை கவ்விப் பிடிக்கிற நாய்களாக மக்களை மாற்றுகிற வேலையை ஜனநாயகத்தை வீழ்த்தி பணநாயகம் செய்துக் கொண்டு இருந்தது. எங்களிடம் உழைப்பு இருந்தது.வியர்வை இருந்தது. வயிற்றினை பொசுக்கும் பசி இருந்தது. அடிவயிற்றில் இருந்து ஓங்காரமாய் எழும் ஓராயிரம் கேள்விகள் இருந்தன..

ஆனால் அதிகாரத்தை புசிக்க எதையும் இழக்கத்துணிந்திருந்த அவர்களுக்கு முன்னால் இலட்சியத் தாகம் மின்னும் விழிகளோடு நாங்கள் நிற்கையில் ..உள்ளுக்குள் அவர்கள் மிரண்டுதான் போனார்கள். நாங்கள் பேசும் இடங்களில் எல்லாம் கரைவேட்டிகள் தெறித்து ஓடின. அடிமைகளே..துரோகிகளே என்றெல்லாம் எங்கள் குரல்கள் உயருகையில் .. பணம் கொடுத்து மக்களை பிணங்களாக்கி கொண்டிருந்தவர்களின் விரல்கள் நடுங்கத்தான் செய்தன.

ஆனாலும் நாங்கள் தோற்றுத்தான் போனோம்.

கருணாநிதி யோக்கியமானவர் என்றோ, ஜெயலலிதா ஆகச்சிறந்த ஆட்சியாளர் என்றோ மக்கள் ஏமாந்து வாக்களிக்க மாட்டார்கள் என்று நம்பினோம். ஆனாலும் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு அதிகக் காசு கொடுத்தவனுக்கு தங்களை விற்றுக் கொண்டார்கள்.

சாதி பின்னணி, மத அடையாளம்,நட்சத்திர பிரச்சாரம், மலையளவு குவிக்கப்பட்டு செலவழிக்கப்படும் பணம் என எதுவும் இல்லாமல் எளிய பிள்ளைகள் தெருவெங்கும் பிரபாகரன் படத்தை தூக்கிக் கொண்டும், நம்மாழ்வார் படத்தை தூக்கிக் கொண்டும் நடந்தார்கள். சராசரி 22 வயதுடைய தாகம் கொண்ட இளைஞர் கூட்டம் தஞ்சை தெருக்களில் அலைந்த போதுதான். ..எதிரே வெள்ளை சொகுசுக்கார்களில் பணப்பெட்டிகளோடு அவர்களது எதிராக நிற்பவர்கள் திரிந்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த கட்சிகளின் தொண்டர்களே மாபெரும் மகிழுந்துகளில் திரிய..அதே சாலையில் வியர்வை முகத்தோடு எங்கள் வேட்பாளர் நடந்துக் கொண்டிருந்தார். அது ஒரு மாதிரியான சமூக முரண். பணம் கொண்டவர்கள் மட்டுமே அதிகாரத்தை அடைய முடியும் என்பதற்கு எதிரான ஒரு கலகத்தை எளிய இளைஞர்களைக் கொண்டு நடத்துவதற்கான கனவும், உழைப்பும் மட்டுமே எங்களுக்கான தகுதி.

அமைச்சர்களும், மாபெரும் செல்வந்தர்களும் எங்களை அலட்சியப் பார்வையில் கடந்தார்கள். நாங்கள் விழிகளில் நெருப்பை சுமந்து ஏதோ ஒரு கனவில் அலைந்தோம். ஆனால் மக்களை ஏற்கனவே விலை கொடுத்து வாங்கியவர்களுக்கு.. நாங்கள் ஒரு பொருட்டே அல்ல என்பதையும் உணர்ந்திருந்தோம்.

இருந்தும் ஒரு நம்பிக்கை. மக்கள் காசுக்கு விலைக்கு போகாமல்..ஜனநாயக நெறிகள் மீது பற்றுறுதி கொண்டு நிற்பார்கள் என்ற நம்பிக்கை…, ஒரு பக்கம் ஓரமாய் எங்களுக்குள் சுரந்துக் கொண்டுதான் இருந்தது.

இறுதி மூன்று தினங்கள் சீமான் அண்ணனும் எங்களோடு இணைந்தார். மாட்டு வண்டியை மேடையாக்கி பேசிய அரசியல் தலைவர்..பணத்தை வைத்து மக்களை மாட்டு மந்தைகளாக விலை வாங்கியவர்களுக்கு சற்று உறுத்தலாக தான் தெரிந்தார்.

அவரும் நடந்தார். திரிந்தார். வியர்வை உப்பாய் உடலில் பூக்க..அடி வயிற்றுகுரலோடு அன்னைத்தமிழினத்தின் விடுதலைக்கான கத்தி தீர்த்தார்.

தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. 1192 மானத்தமிழர்கள் எங்களை அங்கீகரித்து இருக்கிறார்கள். இலட்சங்கள் வென்று இலட்சியங்கள் தோற்றது போன்ற ஒரு அவல நாடகம் நடந்தேறி முடிந்து விட்டது.

என்ன செய்வது என யோசிக்கும் போதுதான்..

எனக்கு கிட்டு என்கிற எங்கள் தம்பி நினைவுக்கு வந்தான்.

பிரச்சாரத்தில் இருந்த நாளொன்றில் பேசிக் கொண்டே சென்ற எனக்கு பசி அடிவயிற்றை கிள்ளவே.. அண்ணன் நல்லதுரையிடம் இன்னிக்கு முடிச்சிகிடலாமா அண்ணே என்றேன். அண்ணனும் ஆமா..தம்பிகள் ரொம்ப நேரமாக நடக்குறாங்க..என்றார்.

மெதுவாய் அவர் அருகிலிருந்த கிட்டுவிடம் தம்பி முடிச்சிப்போம்.. என்று சொல்லவே அண்ணே..இன்னும் இரண்டு தெரு இருக்கு…வாங்க நடப்போம்..என்று சொல்லிக் கொண்டே அவன் முன்னேறி நடந்துக் கொண்டே சென்றான்.

இதை பார்த்து சற்று அதிர்ந்து நான் அருகில் இருந்த குகன் குமாரை பார்க்கவே அவர் சிரித்துக் கொண்டார். அப்படி தான்னே அலையுறோம்.. என்ற அவரின் கரத்தை நான் மென்மையாக பற்றினேன்.

அண்ணன் நல்லதுரையும் எம்மொழியும் சொல்லாமல் கிட்டு பின்னால் நடந்துக் கொண்டே போய்க் கொண்டே இருந்தார்,

அவர்கள் சென்றுக் கொண்டே இருந்தார்கள்.

இருப்பார்கள்.