தோளில் சாய்ந்த கதைகள்..
கவிதைகள்
மார்ச் 10, 2017
அந்த வேனிற்கால
தேநீர் பொழுதில்..
கடற்கரை காற்றோடு
உன் தோளில்
சாய பொன்மாலை
பொழுதொன்று
வேண்டும் என்கிறாய்…
என் தோளில் உன்
முகம் புதையும்
நொடிகள் எல்லாமே
என் பொன்மாலைப்
பொழுதுகள் தான்
என்றேன் நான்.
சட்டென நிமிர்ந்து
விழிகள் மிளிர..
சிவந்த
உன் கன்னக்
கதுப்புகளில்
இருந்து
சூரியன் மஞ்சள்
அள்ளி பூசிக்
கொண்ட அப் பொழுதே
பொன் மாலை
பொழுதென்றும்..
சின்ன சிரிப்போடு
நீ தலை குனிந்த போது..
உன் பாதங்களை
தொட்டு தழுவியது..
கட்டற்ற என்
காதலன்பின்
கடலலை ஈரமென்றும். .
நீ உணர்ந்த போது. .
நீ இன்னொரு கடலாகவும் …
அதே பொன்மாலையில்..
உன் ஆழத்தில்
நொடிக்கு நொடி
மெல்ல முழ்குகிற
சூரியனாக நானும்.. .
இடம் மாறிப்
போனோம்…
1,224 total views, 1 views today