இடதுசாரி என்பது சொற்களின் கூட்டுக் கோர்வையல்ல.. உமிழ்வது போல உதிர்த்து விட்டு போவதற்கு.
அது ஒரு வகையான வார்ப்பு. மண்ணின் பூர்வக்குடிகளின் மீதான, மண்ணின் மீதான பற்றுறுதி, வர்க்க-சாதி-மத பேதமற்ற தொல்குடி வாழ்வொன்றின் மீதான மீள் பயணம். எந்த நோக்கமும் அற்று பண்பாட்டு விழுமியங்கள் குறித்து சிறிதும் அக்கறை அற்று ,தேசிய இனங்களுக்கான தனித்த குணாதிசியங்கள் மீதான அறிவற்று, மொழிப்பற்றினை அழித்து, ஒரு இனம் கடந்து வந்த பாதைகளை அழித்து அதன் மீது ஏற்கனவே இருந்ததை விட இழிவான ஒன்றினை இருக்க வைத்து செல்வதல்ல இடதுசாரித்தனம்.
இத்தனை ஆண்டு காலம் ஒரு தேசிய இனம் அடைந்த இழிவுகளுக்கும் , அழிவுகளுக்கும் என்ன காரணம் என உணராமல் …சாதி கடந்து தமிழராய் இணைய ஓர்மைப் புள்ளிகளை கட்டமைக்காமல், மீண்டும் மீண்டும் பிளவுப் புள்ளிகளை பிரதானப்படுத்தி அதன் மீது இடது சாரித்தனத்தை எழுப்ப முடியாது.
சாதி ஊடுருவி ரணமாய் ஆழ காயமுற்று இருக்கும் ஒரு சமூகத்தில் உடனடி தீர்வு சாதி ஒழிப்பல்ல. சாதியை ஒழிக்கிறோம், சாதியை ஒழிக்கிறோம் என்று முழங்கி ஆட்சியை பிடித்தவர்கள் தான் சாதிக்கு இத்தனை சீட்டு, நோட்டு என்றெல்லாம் அரசியல் செய்தார்கள். சுயசாதி மறுப்பு என்பது வரலாற்று-பண்பாட்டு தொடர்ச்சியின் பாற், நவீன உலகின் அரசியலின் பாற் அறிவும் தெளிவும் கொண்டு எழுகிற உளவியல். அதை தான் 2009 -ன் அழிவு நவீன தமிழ்த்தேசியர்களுக்கு வழங்கியது.
வர்க்க-சாதி-மத முரண்களுக்கு அப்பாற்பட்டு ஓர்மைப்புள்ளிகளை கண்டறிந்து அதன் மூலமாக எழுச்சியுற்று தனது சுய உரிமைகளுக்காக போரிடுவதன் மூலம் ஒரு தேசிய இனம் தனது வரலாற்றுப்பாதையில் தனது அடையாளங்களை, தனது நிலம்-மொழி-பண்பாடு அம்சங்களை தக்க வைக்கிறது எனலாம். அதனால் தான் தேசிய இனங்களுக்கான உரிமைகளை மறுக்கிற எந்த தத்துவமும் இடதுசாரி வண்ணம் கொண்டதல்ல.
குறிப்பாக திராவிடம். மொழியை நீக்கிய இடதுசாரித்தனம் எதுவுமில்லை. ஆனால் திராவிட சித்தாந்தம் தமிழ் மொழியின் விழிமியங்களை, இலக்கண-இலக்கியச்செழுமைகளை எள்ளி நகையாடியது. பகடி செய்தது. சைவமும்-வைணமுமாக பிரிந்திருந்ததை எப்படி ஆரியம் திட்டமிட்டு இந்துவாக கட்டமைத்ததோ, அதே போல அதை எதிர்ப்பதாகச் சொல்லி திராவிடமும் பல்வேறு இறை நம்பிக்கைகள், மூத்தோர் வழிபாடு,ஆசிவகம் என்றெல்லாம் சிதறி கிடந்த தமிழ்ச்சமூகத்தை இந்து என கட்டமைத்து அதில் ஆரிய ,சூத்திர சண்டைக்கு களம் அமைத்தது.
இதைதான் என் முன்னோர்களான பேராசான் ஜீவாவும்,சிந்தனை சிற்பி சிங்காரவேலரும் நுட்பமாக புரிந்துக் கொண்டு பல்வேறு தனது ஆக்கங்களில்,வெளிப்பாடுகளில் தனது மொழிப்பற்றினை வெளிப்படுத்தி நின்றிருக்கிறார்கள். அந்த உணர்வுதான் இடதுசாரியான ஜீவாவை கம்பனைப் போற்றி புகழ வைத்தது.
எங்கள் ஜீவாவைப் போல ஒரு இடது சாரியை காட்டுங்கள். அவர்தான் இடது சாரி தமிழ்த்தேசியர்.
இல்லாவிடில் அவரும் அப்போதைய திக,திமுகவில் இணைந்து அமைச்சராகி தலைவர் புகழ் பாடி தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து இருப்பார்.
எனவே இடதுசாரி தமிழ்த்தேசியம் என்கிற புத்தகத்தை எழுதி விட்டு கோபாலபுரத்தில் கால்கடுக்க நின்று..எது செய்தாலும் தலையாட்டி வரும் எங்களது முன்னோர்களையும் நாம் அறிவோம்.
புதிதாக எழுந்து வரும் தமிழ்த்தேசிய இன உணர்வுகளை மடை மாற்ற எண்ணற்றப் பணிகளை பிராயத்தனப்பட்டு செய்து வரும் எங்களது பின்னோர்களையும் நாம் அறிவோம்.
நான் தமிழன் – சாதி,மத மறுப்பாளன் – வர்க்க பேத எதிர்ப்பாளன் என்பதே இடது சாரித்தனம் தான்.
வலது சாரி, இடது சாரி, வரதாச்சாரி என்பது எல்லாம் வெறும் சொற்களே…
கொண்ட தத்துவமும், தத்துவத்தின் படியான பயணமுமே இடதுசாரி யார் என தீர்மானிக்கும்.
அவ்வகையில் தமிழ்த்தேசியத்தில் வலதுசாரி தமிழ்த்தேசியம் என்ற வம்படி சொல்லாடல் ஒன்றே திராவிடத்திற்கு சால்ரா அடித்து எழும்பத்துடிக்கும் தமிழ்த் தேசிய உணர்ச்சிக்கு சாவு மணி அடிக்க அன்றே போடப்பட்ட திட்டம் தானே ஒழிய …
தமிழ்த்தேசியம் என்றாலே – அது இடதுச்சாரித்தனம் தான்.
பேராசான் ஜீவா புகழ் ஓங்குக…
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் ஓங்குக..
செங்கொடி தனில் புலிக் கொடிப் பதித்து தமிழ்த்தேசியம் வெல்க..
மற்றபடி..
சிறை மீண்டு வந்திருக்கிற தோழர்கள் திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன் உள்ளீட்டவர்களுக்கு ஆகியோருக்கு எம் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
-மணி செந்தில்