சன் தொலைக்காட்சியில் சற்று நேரத்திற்கு முன்பாக இசைஞானி இளையராஜாவின் சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
அந்தப் பாடல்களை நாம் எத்தனையோ முறை கேட்டு இருக்கிறோம். அதே பாடல்கள்தான்.. அதே இசைதான். ஆனாலும் முதல் முறை கேட்ட போது எந்த உணர்ச்சியை நாம் பெற்றோமோ.. அதே உணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறை அந்த பாடலை கேட்கும் போதும் வருமே ..அதுதான் இளையராஜா.
எனக்கெல்லாம் இளையராஜா பாடல்களை கேட்கும்போது அந்த பாடலை நான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான் கேட்ட பொழுதுகள் என் நினைவுகளில் நின்றாடுகின்றன..
ஆதி தாய் கிராமத்திற்கு திரும்பிய ஒரு ஊர் சுற்றி போல .. இளையராஜா பாடல்கள் என் நினைவுகளை எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன. அந்தப் பாடல்களின் கரம்பிடித்து ஒரு கை குழந்தை போல நான் நினைவின் வீதிகளில் அலைந்து கொண்டே இருக்கிறேன்.
என் வாழ்க்கையின் விசித்திரப்புள்ளிகளை நான் இளையராஜாவின் இசை கொண்டே கோர்த்து முடிக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்கத்தா விமான நிலையத்தில் சென்னை வரும் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்தபோது அலைபேசியில் ஒரு இளையராஜா பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு நொடியில் என் கண் முன்னால் தெரிந்த அனைத்து காட்சிகளும் மறைந்துவிட்டன. அந்நொடியில் நான் இளமையில் வசித்த மன்னார்குடியில் இருந்தேன். மன்னார்குடியில் நான் வசித்து வந்த ஹவுசிங் யூனிட் வீட்டில் ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு மழை பொழுதொன்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் வீட்டின் சமையலறையில் என் அம்மா சமைத்துக் கொண்டிருந்த உணவின் வாசனையைக் கூட அந்த நொடியில் நான் உணர்ந்தேன். ஒரு நுட்பமான பேரனுபவம் அது. சிறு சிறு அசைவுகளையும் கூட உணர்கிற கடந்த காலத்தை நோக்கிய விசித்திர பயணம் அது.
அந்தப் பாடல் முடிவடைந்த பிறகே நான் கல்கத்தா திரும்பினேன்.
இளையராஜாவின் பாடல்கள் பயணிப்பது என்பது திக்குத் தெரியாத காட்டில் கண் தெரியாத ஒருவன் மாட்டிக்கொண்ட திகைப்பினையும், பொங்கி பிராவகித்து பொத்துக்கொண்டு ஊற்றுகிற அருவி ஒன்றில் தலை நுழைத்து மெய் நனைத்து அடைகிற சிலிர்ப்பினையும் ஒருங்கே அடைகிற அனுபவமாக.. கால நகர்வுகளை கடந்த ஒரு பயணமாகவே நான் கருதுகிறேன்.
அவருடைய இசைக்கு எந்த பாடகரின் உதவியும் அவருக்கு தேவைப்பட்டது இல்லை. சொல்லப்போனால் வரிகள் கூட இரண்டாம் பட்சம் தான். அவர் நம் ஆன்மாவின் மொழி அறிந்து அதன் அலைவரிசைக்கு ஏற்ப ஒருங்கிணையும் வித்தைக்காரர்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில்..
காதுள்ளவன் கேட்கக் கடவன். உணர்வுள்ளவன் உருகக் கடவன். மனது உள்ளவன் மயங்கக் கடவன்..
இளையராஜாவை உணர்பவன் இந்த மூன்றையும் எளிதாக அடையக் கடவன்.