யாருடைய பிறப்பிற்காகவும் ,இறப்பிற்காகவும் காத்திருப்பதில்லை உலகம். யாருடைய வருகைக்காகவும், யாருடைய விலகலுக்காகவும் அது நிற்பதில்லை. பூமி சுழன்று கொண்டுதான் இருக்கிறது. எந்த இடமும் வெற்றிடமாக இல்லை. காற்று இல்லாத இடங்களில் கூட இன்மை நிறைந்திருக்கிறது.
நீரை ஒத்திருக்கிறது மனிதனின் மனம். எந்த இடங்களிலும் எந்த சூழ்நிலைகளிலும் அது பொருந்திக்
கொள்கிறது அல்லது பொருந்திக்கொள்ள போராடுகிறது. அவனை அவனாக தோற்கடிக்க வில்லையெனில்… எவனும் எவனையும் தோற்கடிக்க முடியாது.
சுருங்கச் சொன்னால் உலகம் நாம் நினைப்பதைக் காட்டிலும் மகத்தானது . பெரியது. பல வாசல்கள் கொண்ட இந்த உலகத்தில்.. தனக்கு முன்னால் எதிர்படும் ஏதோ ஒரு வாசலில் நுழைந்து இன்னொரு வாசல் வழியாக தொலைந்து போய்க் கொண்டே இருக்கிறான் மனிதன்.
காலநதி ஓட்டத்தில் நடந்தவை அனைத்தும் நினைவுகளே…
அதைத் தவிர சிந்திக்கவோ.. கண்கலங்கவோ..கொண்டாடுவோ..குழம்பவோ..எதுவும் இல்லை . நதியின் ஓட்டம் போல பயணம் நகர்ந்து கொண்டே இருக்கட்டும். எங்கும் தேங்காமல் குப்பையாக .. குட்டையாக.. நிற்காமல்..
போய்க் கொண்டே இரு. just move on.