உண்மையில் எளிமை என்பது என்ன.. அது ஒரு பண்பாடா.. அது ஒரு ஒழுங்கா.. அதுவரை கடைபிடித்து வந்த பழக்கவழக்கங்களின் நீட்சியா.. அது ஒரு அடையாள அரசியலா.. என்றெல்லாம் யோசிக்கும் போது எளிமை பற்றி பல்வேறு கதவுகள் நம் முன்னே திறக்கின்றன.
 
எளிமை பற்றி பல்வேறு சமய மரபுகள் விரிவாக ஆராய்கின்றன. புத்தமும், சமணமும் எளிமையை அடிப்படையாக கொண்டவை. இந்திய தத்துவ மரபில் எளிமைக்கென்று ஒரு தனித்த இடம் இருக்கிறது. ஏறக்குறைய ஜப்பானின் ஜென் மரபு கூட எளிமையை அடிப்படையாக கொண்டதுதான்.
 
ஆனால் எளிமை பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எளிமை என்பது ஒருவித ஆடம்பரம் என்ற விமர்சனம் உண்டு. எளிமை என்றாலே நம் கண்முன்னால் வருவது காந்தியின் தோற்றம்தான். ஆனால் அந்த காந்தியின் எளிமையை பராமரிப்பதற்கு காங்கிரஸ் கட்சி அக்காலத்தில் பல லட்ச ரூபாய் செலவு செய்தது என்ற விமர்சனங்கள் உண்டு. ஏனெனில் அந்த எளிமை குறியீடுதான் அக்காலத்து காங்கிரசின் அரசியல் மூலதனம்.
 
என் தந்தையின் தாய் என் ஆத்தா ராஜாம்பாள் 84 வயது வரை உயிருடன் இருந்து மறைந்து போனார். தன் மகன்கள் நன்கு சம்பாதிக்கும் காலத்திலேயே தான் இளமையில் உணர்ந்த அனுபவித்த , வறுமை நிலையை தன் இறுதிக்காலம் வரை மிக கவனமாக அவர் பாதுகாத்து வந்தார். செருப்பு அணிய மாட்டார். விலை உயர்ந்த புடவை வாங்கிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மறுப்பார். நூல் புடவைகளே அவரது அடையாளம்.காரில் ஏற அவ்வளவு தயங்குவார். நடமாட்டம் இருக்கும் வரை எங்கு சென்றாலும் அவர் வெறுங்காலோடு நடந்தே தான் போவார். அவரைப் பொறுத்தவரை எளிமை என்பது அவரது அன்றாட வாழ்வியல் முறைமை . அவரைப் போலவே என் மாமா வழக்கறிஞர் சீனு ஜெயராமன் அவர்களின் தந்தையார் மறைந்த சீனுவாசன் அவர்கள் தன் மகன் புகழ் பெற்ற வழக்கறிஞராகி , சம்பாதித்து காரில் செல்லும் போதும் தான் நடத்தி வந்த டீக் கடையை விடாமல் நடத்தி வந்ததும், வரும் வாடிக்கையாளர்களுக்கு டீ தயாரித்து ஆற்றிக் கொடுப்பதையும் நான் கண்டிருக்கிறேன். தன் மகன் புகழ்பெற்ற ஒரு அரசியல் தலைவராக , திரைப்பட இயக்குனராக இருந்த போதும் இன்னமும் வயல்வெளியில் வேலை பார்த்து வருகிற அண்ணன் சீமானின் பெற்றோர்களை நான் நேரடியாக கண்டு வியந்திருக்கிறேன்.எளிமையாக இருப்பதே தனது அடையாளமாக கொண்ட பெருமக்கள் அவர்கள்.
 
அரசியலில் இடதுசாரிகளின் எளிமை மிகப் புகழ் வாய்ந்தது ‌. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லி தலைமை அலுவலகம் ஒரு நவீன கார்ப்ரேட் அலுவலகத்தை விட மிக ஆடம்பரமாக இருக்கும் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
 
இளம் வயதில் கம்யூனிஸ்ட் ஆக முயல்வதும், சிவப்பின் பின்னால் திரிவதும் என்பது ஒரு லட்சிய வாழ்வின் மகத்தான கனவு. நானும் சில காலம் அவ்வாறு திரிந்திருக்கிறேன். நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது தோழர் ஆர் என் கே என்று அழைக்கப்பட்ட அய்யா நல்லக்கண்ணு அவர்களே எனக்கு அரசியல் ஆதர்சம். அவர் பற்றிய பிம்பங்களை என்னுள் பதிய வைத்து அவரை ஒரு லட்சிய புருஷராக என்னுள் பதித்தவர் எனது ஆசான் தோழர் சிஎம் என்று அழைக்கப்பட்ட மதிப்பிற்குரிய சி.மகேந்திரன் அவர்கள்.
 
ஒருமுறை எங்கள் தஞ்சை மாவட்ட சிபிஐ கட்டிடப்பணிகளை பார்வையிடுவதற்காக தோழர் ஆர்என்கே அவர்கள் தஞ்சை வருவதாக அறிந்தேன். அவரை நேரில் சந்திக்க வேண்டுமென நான் நீண்ட நாட்களாக ஆவல் கொண்டிருந்தேன். அவர் வருவதற்கு முன்பாக நாம் சென்றுவிட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக தஞ்சை கிளம்பி சென்றேன். சற்று நேரமாகிவிட்டது. அலுவலக வாசலில் யாரும் இல்லை. நல்ல வேளை.. ஐயா நல்லக்கண்ணு வரவில்லை போலும். வந்துவிட்டிருந்தால் கூட்டம் கூடியிருக்கும் என நினைத்துக்கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தேன். அலுவலகத்திலும் யாரும் இல்லை. அந்த வளாகத்தில் இருந்த ஒரு கிணற்றில் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு குளித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் ஐயா நல்லகண்ணு அவர்கள் வந்து விட்டார்களா என்று வினவினேன். அவர் என்னை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு குளித்துக் கொண்டிருந்தார். நானும் அங்கே ஒரு நாற்காலியில் அமர்ந்து அருகில் இருக்கிற ஜனசக்தி நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து குளித்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் தலையைத் துவட்டியவாறே சொல்லுங்க தோழர்.. என்றார் ‌. நான் மீண்டும் ஐயா நல்லகண்ணு அவர்கள் எப்போது வருவார்கள் என கேட்டேன். அதற்கு அவர் நான் தான் நல்லகண்ணு ‌‌. சொல்லுங்க தோழர்‌.. என்றார்.
 
ஒரு நொடியில் எனக்கு உலகமே அதிர்ந்தது போல தோன்றியது. தீவிரமான ஒரு அசட்டுத் தனமும் வெட்க உணர்ச்சியும் என்னை ஆட்கொண்டன. ஒருவகையில் அந்த எளிமை என்னை அச்சுறுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.
 
பிறகு அவரிடம் உரையாடத் தொடங்கினேன். என் அறிவுஜீவி தனத்தை அவரிடம் காட்ட நான் அது வரை படித்து வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் மொழிபெயர்ப்பு நூல்களை சார்ந்து சில கேள்விகளை அவர் முன் வைத்தேன்‌‌. விஞ்ஞான கம்யூனிசம், மார்க்சிய பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன். அவர் பொறுமையாக எளிய மொழியில் தெளிவான பதில்களை அளித்துக் கொண்டே வந்தார். உண்மையில் அவர் மொழியில் இருந்த எளிமை என் மேதமைத்தனத்தை சுக்குநூறாக நொறுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். நீ எல்லாம் ஒரு அறிவாளியா என்று நம் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது போல அவரது எளிமை அந்த அளவு வலிமையாக இருந்தது..
 
கொஞ்ச நேரத்தில் மௌனமாகிப் போனேன். ஐயா நல்லக்கண்ணு அவர்களும் கட்சித் தோழர்கள் வரவே கூட்டத்திற்கு கிளம்பினார். அப்போது தான் அய்யா நல்லக்கண்ணு அவர்களின் செருப்பு அறுந்துவிட்ட விபரமும், தைத்து தைத்து பயன்படுத்தியதால் அது மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சென்று விட்ட விபரமும் என்னை வந்து சேர்ந்தன ‌. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு சம்பாதித்துக் கொண்ட கெட்டப் பெயரை இச்சூழ்நிலையை பயன்படுத்தி சரிசெய்து கொள்ள வேண்டுமென ஆர்வக்கோளாறாக திட்டமிட்டேன். அவரது செருப்பின் அளவை அறிந்து கொண்டு அருகில் இருந்த பேட்டா கடையில் நல்ல தோல் செருப்பாக பார்த்து வாங்கிக்கொண்டு போனேன். அட்டையை பிரித்து பார்த்தவர் தான் இதுபோன்ற செருப்புகளை தான் பயன்படுத்துவதில்லை எனவும் சாதாரண சிலீப்பர் செருப்புகளைத்தான் பயன்படுத்துவதாகவும் கூறி செருப்பினை மாற்றச் சொன்னார். மேலும் கட்சித் தோழர்கள் இது போன்ற ஆடம்பர செலவுகளை செய்யக்கூடாது எனவும் பொதுவாக கடிந்து உரைத்தார். செருப்பை மாற்றி வாங்கி வந்த பிறகு அதற்கான ரசீதை பார்த்து அதற்கான தொகையை மறக்காமல் என்னிடம் வழங்கிவிட்டு என் தோளைத் தட்டி.. கட்சி வகுப்புக்குப் போங்க தோழர் ..என்று சொல்லியவாறே நகர்ந்து போனார்.
 
அதுவரை நான் கொண்டிருந்த அனைத்து அரசியல் கருத்தாக்கங்களையும் தனது எளிமை வாழ்வின் மூலம் தகர்த்தெறிந்துப் போனார் ஐயா நல்லகண்ணு. எளிமை என்பது நான் மேற் சிந்தித்த எதுவும் இல்லை, அது ஐயா நல்லக்கண்ணு போன்றோரின் இயல்பான வாழ்வியல் என்பதை உணர்ந்துக் கொண்டேன்.
 
நான் திராவிட இயக்க குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவன். பெரியார் பார்த்து பார்த்து செலவு செய்தவர் என்பார்கள். ஆனால் அவர் வழி வந்தவர்களாக சொல்லிக்கொள்பவர்கள் இருக்கும் பெரியார் திடல், அண்ணா அறிவாலயம் போன்ற ஆடம்பர அரண்மனைகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். சாதாரண திராவிட கட்சிகளின் நகர , ஒன்றிய நிர்வாகிகளே ஆடம்பரமாக வெள்ளையும் சொள்ளையுமாக வலம் வரும்போது அவர்களுக்கு மத்தியில் சாதாரண சிலீப்பர் செருப்பு போட்டு , அலைந்து திரியும் அய்யா நல்லகண்ணு போன்றவர்கள் மானுட வாழ்வின் மகத்தான அதிசயங்களே..
 
இச்சம்பவம் குறித்து நான் ஒரு முறை தோழர் சி மகேந்திரனிடம் வியந்து சொல்லிக் கொண்டிருந்தபோது.. அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு எழுந்து சென்றார். அப்போது அவர் தோளில் மாட்டியிருந்த அவரது ஜோல்னா பை கூட தையல் விட்டு கிழிந்து இருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.