தலைவர் வருகிறார். ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் மக்களின் அழுகுரல்களால் அந்த வளாகமே முடங்கிக்கிடக்கிறது. எதற்கும் கலங்காத இரும்பை போல மனதை உடைய தலைவரும் சற்று பரிதவித்து தான் போயிருக்கிறார்.
தன் மகனை எதனாலும் இழக்கத்துணியாத ஒரு தாயின் பரிதவிப்பு அது. ஏதாவது பேசி அவனைக் கரைத்து கொல்லும் பசியிலிருந்து அவனை மீட்டு ஒரு பிடி சோற்றையாவது ஊட்டிவிட்டுத்தான் நகர வேண்டும் என அவர் கொண்டிருந்த உறுதி வேக வேகமாக நடக்க வைத்து இருந்தது. ஆயினும் அந்த வளாகத்தின் நுழைவாயிலிலேயே தலைவர் தடுக்கப்பட்டார். ஒரு இயக்கம் கடவுள் எனக் கருதும் தன் தலைவரையே தடுக்கும் வரலாற்று நிகழ்வு அதுவரை நிகழ்ந்ததில்லை. தலைவர் விரல் நீட்டும் இடத்தில் வெடித்துச் சாகும் புலிக்கூட்டம் தலைவரை தடுத்து நிறுத்தியது அவருக்கே வியப்பாகத் தான் தோன்றியது. ஒரு விசித்திரமான நிபந்தனை அவர் முன்னால் வைக்கப்பட்டது . போராட்டத்தை தடுக்க வந்தவரை போராட்டத்தை தடுக்கக் கூடாது என நிபந்தனை. தலைவர் தவித்து தான் போனார். இயக்க கட்டளை தலைவருக்கும் பொருந்தும் என உணர்ந்த அறம் வழி நின்று மறம் பாடி வென்று தாய்நிலம் மீட்க வந்த தேவ மீட்பர் அவர்.
வேறுவழியின்றி ஒத்துக்கொண்டு விக்கித்த மனதோடு தளர்ந்து நடந்துபோனார் தலைவர். அவர் முன்னால் மெலிந்த உடலம் ஒன்று விடுதலைப் பசிக்காக உயிரைத் தின்று கொண்டிருந்தது. குழிவிழுந்த கண்களோடு.. ஒடுங்கிய வயிற்றோடு.. சுவாசத்தில் மட்டும் உயிரோடு படுத்துக்கிடந்தான் திலீபன்.
எதற்கும் கரையாத தலைவர் கலங்கி விடக் கூடாது என்ற கட்டுப்பாட்டில் இதயத்தை இறுக்கி வைத்திருந்தாலும் ..கட்டி வைத்திருந்த முடிச்சுகள் ஒவ்வொன்றும் அவிழத் தொடங்கின. நெற்றியில் உள்ளங்கை வைத்து தடவிக் கொடுக்கிறார் தலைவர். உடலில் சூடு இன்னும் இருக்கிறது. போகாத உயிரோடு போராடிக் கொண்டிருக்கின்ற திலீபனை காண சகிக்காது கலங்கி அமர்ந்திருக்கிற தலைவரைப் பார்த்து ஒப்பாரி வைத்து கதறி தீர்க்கிறது தீந்தமிழர் கூட்டம்.
பார்த்தீபா என்று முணுமுணுக்கிறார் தலைவர்.
ஒடுங்கியிருந்த விழிகளுக்குள் அசைவு தென்படுகிறது. உலர்ந்து போன உதடுகள் மெலிதாக உராய்ந்து பார்க்கின்றன. அதைத் தாண்டி எதையும் அசைக்க திலீபனால் முடியவில்லை. அது மரணமில்லாப் பெருவாழ்வை நோக்கி நடந்த பெரும் பயணம் என்பதை தலைவர் உணர்ந்துகொண்டு பெருமூச்செறிந்தார்.
பார்த்தீபன் பசித்துக் கிடந்தான்.
வெறும் சோற்றிலும்,
ஒரு அவுன்ஸ் தண்ணீரிலும்,
அடங்கி விடக்கூடிய சாதாரண பசி
அல்ல அது..
சரித்திர வீதிகளில் சாபமாய் தொடர்கிற
துப்பாக்கி முனைகளுக்கும் எதேச்சதிகார குரல் நெறிவுகளுக்கும்..
எதிராக எழுந்த ஓங்கார பசி.
தலைமுறை தலைமுறையாய் தொடரும் ஒரு அடிமைப் பட்ட இனத்தின் விலங்கொடிக்க எழுந்த புலிகளின் பசி..
துயர் இருட்டு சூழ்ந்த காரிருள் வனமாய் இருண்டு கிடக்கிற ஒரு இனத்தில் சூரிய தீபமாய் பிறந்துவிட்ட சிலர் தேக்கி வைத்த விடுதலைப் பசி..
மின்னும் கண்களில் லட்சிய வேகம் தெறிக்க.. சுடர்விட்டு எரியும் இதயத்தில் சுதந்திரதாகம் தகிக்க… மண்ணை நேசித்தவர்கள் மனதிற்குள் சுமந்த மகத்தான பசி..
காந்தி பசித்து கிடந்தார்.
அவர் உலகத்திற்கே உதாரணமாய் போனார்.
எங்கள் திலீபன் பசித்து இறந்தான்..
அவன் அந்த காந்திக்கே
உதாரணமாய் போனான்.