உங்களுக்கு பாபுவை தெரியுமா..??

உங்களில் பலர் பாபுவை அறிந்திருப்பீர்கள். அறிந்தவர்களில் பலருக்கு அதுதான் பாபு என்று தெரியாது. பலர் பாபுவாகவே வாழ்ந்திருக்கலாம். பலருக்கு அவர்கள் வாழ்க்கையில் பாபு வாக இருக்க வேண்டிய காலம் நிகழ்ந்திருக்கலாம் ‌.

யார் இந்த பாபு..?? நீங்களும்.. நானும்தான். இதைத்தான் அந்த நாவலை படிக்கின்ற ஒவ்வொரு வாசகனும் உணர்கிறான். சில நூறு பக்கங்கள் விரிகின்ற அந்த நாவலை படிக்கின்ற ஒவ்வொருவரும் தன்னை இரகசியமாக கண்டுவிட்டு வெட்கமுறுவதுதான் அந்த நாவலின் இலக்கிய உச்சம்.
…….

இந்த வாழ்வும், அது சமைத்த விதிகளும் அலை கழிக்காத பெரும் மனிதன் யாரையாவது நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா… வாய்ப்பில்லை. ஏனெனில் அவ்வாறு யாரும் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் தான் நினைத்து பார்க்க விரும்பாத காலம் என்ற ஒன்று இருக்கும்தானே.. அவன் அடைந்த துயரம் அவமானம், காயம், அனைத்தையும் பூட்டி ஓரமாக வைத்துவிட்டு நிகழில் பயணிப்பதாக அவன் காட்டும் பாவனைதான் அவனது வாழ்க்கையாக அறியப்படுகிறது. எது வாழ்வில் அதிகம் மகிழ்ச்சியைத் தருகிறதோ அதுவே வாழ்வில் அதிக துயரத்தை தரும் என்பது இயற்கையின் மாறா விதி. அந்தக் கொடும் விதியின் சாபத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் யாரும் இல்லை.
……..

மீண்டும் பாபுவிற்கு வருவோம். பாபுவை நான் முதன்முதலில் எனது பதின் வயதுகளில் அறிந்தேன். அவனை அறிந்த உடனே கண்டு கொண்டேன். நான்தான் அவன் என. இதைத்தான் படித்தவர்கள் பலரும் சொன்னார்கள். அந்த மேஜிக்கை நம்முள் நிகழ்த்தியவர் மறைந்த எழுத்தாளுமை தி. ஜானகிராமன். அவர் எழுதிய மோகமுள் நாவலின் கதாநாயகனே பாபு. திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது ஆனால் இலக்கியப்பிரதி தந்த மன எழுச்சியை திரைப்படம் தர தவறிவிட்டது. இருந்தாலும் இளையராஜாவின் அருமையான பாடல்களும், இசையும் மோகமுள் என்ற இலக்கிய உன்னதத்தை இசையாகவும் உணரவைத்தது.

தமிழின் ஆகச்சிறந்த பத்து நாவல்களை பட்டியலிடும் எவரும் மறக்காமல் குறிப்பிடும் ஒரு நாவலாக மோகமுள் இன்றும் திகழ்கிறது. நான் அந்த நாவலை வெவ்வேறு காலகட்டங்களில் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் வெவ்வேறு அனுபவங்களை அடைந்திருக்கிறேன். பதின் வயதுகளில் முதன்முதலாக படிக்கும்போது சில பக்கங்களை என்னால் கடக்கவே முடியவில்லை. என்னைவிட வயது மூத்த பெண்கள் சிலரைத் காணும்
போது எனக்கு யமுனா வாக தோன்றினார்கள். இதுபோன்ற வயது மயக்கங்கள் அனைத்தும் கரைந்த முப்பதுகளில் அந்த நாவலை மீண்டும் வாசித்தபோது உண்மையில் யமுனா என்றொரு பெண் வாழ்ந்திருக்கிறாள் என நம்பி கும்பகோணம் வீதிகளில் நான் அலைந்திருக்கிறேன். நீங்கள் சாதாரண கண்களில் பார்க்கும் கும்பகோணமும், மோகமுள் நாவலில் விவரிக்கப்பட்டிருக்கிற கும்பகோணமும் சற்றே நுட்பமான அளவில் மட்டுமே வேறானவை. ஏறக்குறைய புனைவின் சாத்தியங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கும்பகோணத்தை ஒரு காட்சி சித்திரமாக நம் விழிகளுக்கு முன்னால் தி.ஜா மோகமுள்ளில் நிறுவி இருப்பார்.

வளைவுகளும், குறுகிய சந்துகளும், நெருக்கடியான வீடுகளும், பாரம்பரிய மனிதர்களும் இருக்கின்ற புராதன நகர் கும்பகோணம். ஊருக்கு மத்தியில் ஓடும் எழில் நதி காவிரி. இன்னொரு புறத்தில் அந்த ஊரின் சிறு இதயம் போல மகாமகக் குளம். ஊரைச் சுற்றிலும் , ஊருக்குள்ளும் திரும்பிய இடமெல்லாம் கோவில்கள். அதனால் நிறைய வெளியூர் ஆட்கள். வார இறுதி நாட்களில் தோன்றுகின்ற நெருக்கடி, மராட்டிய, சௌராஷ்டிர மக்களின் இயல்பான கலப்பு, பார்ப்பனர்களின் பூர்விகம், பக்கத்திலேயே திருவையாறு , அதனால் இயல்பிலேயே கரைந்திருக்கும் சங்கீதம், பசும்பாலும் டிகாஷனும் ஏதோ ஒரு மாயவிகிதத்தில் ஒன்றாக கலந்து காவிரி நீரோடு இணைந்து உண்டாக்கும் தேவ சுகம் தரும் மயக்கும் டிகிரி காப்பி.. என்றெல்லாம் விவரித்துக்கொண்டே போகின்ற சிறப்புகளைக் கொண்ட கும்பகோணம் நகரமே மோகமுள்ளின் கதைக்களம்.

அதில் கல்லூரியில் படித்துக்கொண்டு சங்கீதம் பயிலவரும் பாபு விற்கும் உரிய வயதாகியும் மணமாகாமல் இருக்கின்ற யமுனா விற்கும் ஏற்படுகிற நட்பு உறவு காதல் காமம் என சகலத்தையும் விவரிக்கின்ற நாவல் மோகமுள்.

இந்த நாவலின் கதையை பலரும் அறிந்திருப்பீர்கள். இந்நாவலில் காட்டப்பட்டிருக்கின்ற கும்பகோணம் பேரழகு வாய்ந்தது. ஏறக்குறைய யமுனாவின் சாயலை ஒத்ததாகவே , சற்றே வயதான ஆனால் கவர்ச்சி குறையாத ஒரு முதிர்கன்னி போல கும்பகோணமும் காட்டப்படுவது தி.ஜாவின் மேதமை.

ஊர்களைப் பற்றி எழுதப்பட்ட பல நாவல்களை தமிழ் கண்டிருக்கிறது. தென் மாவட்டங்களின் கிராமங்களை பற்றி நுட்பமாக எழுதப்பட்ட நெடுங்குருதி,மதுரை நகரத்தைப் பற்றி எழுதப்பட்ட காவல் கோட்டம், கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளைப் பற்றி எழுதிய ஜெயமோகனின் எழுத்துக்கள், தஞ்சாவூரை பற்றி பல நூறு பக்கங்களில் எழுதி குவித்த தஞ்சை பிரகாஷின் எழுத்துக்கள், பழைய தென்னாற்காடு மாவட்ட கிராமங்களைப் பற்றி எழுதிய தங்கர்பச்சானின் எழுத்துக்கள், இன்னமும் தன் ஊரின் அடையாளமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிற கி.ராஜநாரயணின் எழுத்துக்கள், என நீண்டு கொண்டே செல்லும் இந்தப் பட்டியல் முடிவில்லாதது.

அந்த வகையில் தி.ஜா எழுதிய கும்பகோணம் வசிஷ்டர் நிறுவிக் காட்டிய அஸ்தினாபுரத்தை காட்டிலும், கம்பன் எழுதிக் காட்டிய அயோத்தியை காட்டிலும் மிக அழகானது.

ஒரு முறை கும்பகோணம் வந்திருந்த எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனோடு அலைந்து திரிந்த போது மோகமுள் கதாபாத்திரங்கள் இருந்திருக்கக்கூடிய சாத்தியப்பட்ட பகுதிகளை என்னிடம் சுட்டிக்காட்டினார். ஏறக்குறைய நாவல் விவரிக்கும் தெரு பகுதி வீடு ஆகியவையும் எஸ்ரா காட்டிய பகுதிகளும் ஒரே மாதிரி இருந்தது மிக ஆச்சரியமாக தோன்றியது. நிஜமும் புனைவும் இடைவெளி இல்லாமல் போனதை நான் அப்போது உணர்ந்தேன். ஒரு படைப்பாளனால் நிஜத்திலேயே ஒரு ஊரையும் மனிதர்களையும் உருவாக்க முடியும் என்பதை நான் அறிந்தேன்.

குறிப்பாக நாவலில் வரும் தங்கம்மாள் என்ற கதாபாத்திரம் வாழ்ந்ததாக மோகமுள் சித்திரிக்கும் வீடு ஒன்றினை கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரிக்கு அருகில் காவிரிக் கரையோரம் எஸ்ரா என்னிடம் காட்டினார். பின்னொரு நாளில் அந்த வீட்டைப் பற்றி நான் விசாரித்த போது பல வருடங்களுக்கு முன்னால் அந்த வீட்டில் ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை அறிந்தேன். அப்படி என்றால் அந்த இளம் பெண் தான் தங்கம்மாவா..

இந்த நாவலை எழுதிய தி.ஜா கூட கும்பகோணம் கல்லூரிக்கு அருகே காவிரி நதி ஓரம் அறை எடுத்து தங்கி இருந்ததாக கேள்விப்பட்டேன். அப்படி என்றால் தி.ஜா தான் அந்த பாபுவா..

இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால் பாபுக்களும், தங்கமாக்களும், யமுனாக்களும் இன்றும் நம்மிடையே , நாமாக இருக்கிறார்கள். அதுதான் மோகமுள் நமக்குக் காட்டிய நமது அகஉலகத்து உண்மை.