கேள்வி -ஒரு பேட்டியின் போது நீங்கள் தொடர்ச்சியாக 90 நிமிடங்கள் அமெரிக்க பழங்குடி இந்தியர்களைப் பற்றிய பேசிக் கொண்டிருந்தீர்கள். அது எதனால்??

பதில்- சம்பந்தமற்ற கேள்வியை அவர் கேட்டுக் கொண்டிருந்ததால் நான் எனக்கு விருப்பமான பதிலை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தேன். இப்படித்தான் bbc பேட்டி ஒன்றில் சூப்பர்மேனாக நடிப்பதற்கு எப்படி உடையை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். நான் உடனே 1973 இல் இந்தியர்கள் எப்படி தாக்கப்பட்டார்கள் என்பது பற்றி விரிவாக சொன்னேன் . மறுநாள் பத்திரிகையில் இது கேலிக்கூத்தானது. ( எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய உலக சினிமாவில் …. )

*************************

கொள்ளைக்கூட்ட பாஸ் என்றால் பெரிய சோபாவில் கண்ணாடி போட்டு அவர் அமர்ந்திருக்க… கவர்ச்சி உடை அணிந்து ஒரு பெண் நடனம் ஆட.. அவருக்குப் பின்னால் கோடு போட்ட பனியன் அணிந்த 4 தடியன்கள் நின்றுகொண்டிருக்க.. அவரே வில்லன் என்று அழைக்கப்படுவார் .

இதுவே காலம் காலமாக சினிமாவில் எழுதப்பட்டு வந்த விதி. இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல. ஹாலிவுட் சினிமாவிற்கும், அதையே பிரதிபலித்த உலக சினிமாக்களுக்கும் ஒருசேர எழுதப்பட்ட விதி.

ஆனால் 1972ல் வெளிவந்த ஒரு திரைப்படம் வழமையான சினிமா கோட்பாடுகளை மாற்றி எழுதியது. கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கும் ஒரு குடும்பம் இருந்தது. அவன் நேசித்துக் கொண்டாட அவனுக்கென ஒரு மனைவி இருந்தாள். அவன் வாழ்வில் அவன் கலங்க நெகிழ அவனுக்கென சில மிருதுவான பக்கங்கள் இருந்தன. இதையெல்லாம் தாண்டி அவன் மிக வலிமையானவன். அவனது வலிமையை காப்பாற்ற அரசியலும் அதிகாரமும் அவனுக்கு துணை நின்றன. எல்லாவிதமான முடிவுகளையும் மாற்றி எழுத அவனால் முடியும். சிற்சில சிறிய சொற்கள் தனக்குப் பின்னால் நிற்கின்ற தன் உதவியாளரிடம் வாய் முணுமுணுப்போடு சொல்கின்ற சில சொற்களோடு அவனது வில்லத்தனம் முடிந்துவிடுகிறது. இப்படித்தான் உண்மை வாழ்வில் கொள்ளைக்கூட்ட பாஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு கேங்ஸ்டர் இருக்கக்கூடும் இன்று நம்மை நாமே நம்ப வைத்த அந்த அற்புத நடிகனின் பெயர் மார்லன் பிராண்டோ. இந்தப் பத்தியின் தலைப்பிலே வரும் பரபரப்பான பதிலைச் சொன்ன மாறுபட்ட ஆளுமைதான் பிராண்டோ.

வில்லன் என்றால் காட்டு கத்து கத்திக்கொண்டும், கவர்ச்சி நடிகையோடு குத்தாட்டம் போட்டுக் கொண்டும் , எதிர்ப்படும் பெண்களையெல்லாம் கற்பழித்து கொண்டும், தென்படும் நபர்களையெல்லாம் கொன்று கொண்டும், சதா குடித்துக் கொண்டும்.. இருக்கின்ற மனநோயாளியா என்று நாம் சிந்திக்கும் புள்ளிகளிலிருந்து மார்லன் பிராண்டோ என்கிற உன்னத கலைஞனின் தாக்கம் புரியத் தொடங்குகிறது.

வில்லன் நம்மோடு வாழ்பவன். நம்மைச் சார்ந்தவன். சில குணாதிசய முரண்களால் நம்மோடு வேறுபட்டு நம் எதிரே நிற்பவன். அவனும் நம்மைப் போல இயல்பான சாதாரண மனிதன். ஆனாலும் வாழ்வியல் சூழலில் அவன் அவ்வாறாக ஆக்கப்பட்டு சமூகத்தின் முரண் புள்ளியாக நம் முன்னால் நிற்கிறான். அவன் வலிமையால் கதாநாயகனை வெல்ல நினைக்கிறான். சில சமயங்களில் அவனே கதாநாயகனாக மாறுகிறான்‌.

மார்லன் பிராண்டோ ஒரு ஆகச் சிறந்த கலைஞர். மானுடப் பற்றாளர். பூர்வகுடி மக்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் நசுக்குகிறது என்ற காரணத்தினால் தனக்கு கிடைத்த ஆஸ்கர் விருதை வாங்க மறுத்தவர்.

பிரபல நடிகர் ஜாக் நிக்கல்சன் சொல்வது போல மார்லன் பிராண்டோ இறந்தபிறகுதான் இனி ஒருவர் நடிகராகவே கருதப்படுவார். ஏனெனில் மார்லன் பிராண்டோ விற்கு இறப்பே கிடையாது.

அவர் நடித்த திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ். மூர்க்கமும் காமமும் நிறைந்த மனிதனாக அதில் பிராண்டோ வாழ்ந்திருப்பார்‌. அடுத்தது புகழ்ப் பெற்ற காட்பாதர். இந்தப் பத்தியின் துவக்கத்தில் இருந்து நாம் பேசி வந்தது. மரியோ புஜோ என்பவரின் நாவல் திரைப்படமாக்கப்பட்டது. அதில் வீடோ கொர்லேனே என்கின்ற நியூயார்க் நகரத்து நிழல் உலக, செல்வாக்கு மிக்க வயதான டானாக அவர் நடித்திருப்பார். சிறிய சிறிய அசைவுகளிலும் கூட ,கன்னக்கதுப்புகளில் கூட classic என்று சொல்லப்படக்கூடிய அற்புத நடிப்பை அவர் கொண்டிருப்பார். நடிப்பிற்கும், நிஜ வாழ்விற்கும் இடையே இருக்கிற மெல்லிய கோட்டினை முற்றிலும் அழித்து எறிந்தவர் மார்லன் பிராண்டோ.

அவருடைய அந்தக் கதாபாத்திரத்தை தழுவியும் அதே போலவும் அதன் பாதிப்பிலும் ஏராளமான திரைப்படங்கள் வந்து விட்ட சூழலில் தமிழ்த் திரையில் மார்லன் பிராண்டோ எத்தகைய பாதிப்புகளை கொண்டு வந்தார் என்பதை இயக்குனர் மணிரத்தினத்தை வைத்து நாம் சற்றே சிந்திப்போம்.

குறிப்பாக காட்பாதர் பாதிப்பு இயக்குனர் மணிரத்னத்திற்கு கடுமையாக உண்டு. அவருடைய ஆரம்ப காலகட்ட படமான பகல் நிலவு, அக்னி நட்சத்திரம் , தளபதி ஆகிய பல படங்களில் வில்லன்களின் உருவாக்கம் காட்பாதர் தாக்கத்தில் எழுந்ததே. அவருடைய புகழ்பெற்ற நாயகன் திரைப்படம் காட்பாதர் படத்தின் நேரடியான தாக்கத்தில் உருவான கதை.
தற்போது வெளிவந்து இருக்கிற மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானத்திலும் சேனாதிபதி என்கின்ற காட் பாதரின் குடும்பத்தைப் பற்றியே கதை எழுதியுள்ளார்.

மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ,உலகப் புகழ் வாய்ந்த இசை அமைப்பாளர் , புகழ் பெற்ற நடிகர்கள் என்றெல்லாம் கூட்டு அமையும்போது படத்தின் தொழிற்நுட்ப தரம் வியக்கவே அமையும் ‌. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல ‌. மற்றபடி என்னைப் பொறுத்தவரையில் இது வெகு சாதாரண ஒரு திரைப்படமே. நான்கு புகழ் வாய்ந்த நடிகர்களுக்கு காட்சிகளை மிகச் சரியாக பிரித்து வழங்கியதில் கவனம் காட்டிய இயக்குனர் சற்று கதையிலும் கவனம் காட்டி இருந்தால் பாராட்டி இருக்கலாம். அண்ணன் தம்பிகளுக்குள் அப்பன் சொத்தை பிரித்துக் கொள்வதில் ஏற்படுகிற பிரச்சனை பற்றி தமிழில் வந்திருக்கிற ஆயிரத்தி நூறாவது படம் இது. நால்வரில் அருண் விஜய் மட்டுமே தேறுகிறார். விஜய் சேதுபதி என்கின்ற உன்னத கலைஞனுக்கு மிகச்சாதாரண வேடம். தனி ஒருவனில் கலக்கிய அரவிந்த்சாமி இதில் வேறு விதமாக தோன்றுகிறார். சிம்பு தன் உடம்பை பராமரிக்காவிட்டால் இதுபோன்ற வாய்ப்புகளை இது போன்றே பயன்படுத்திக் கொள்ள முடியா நிலைமை ஏற்படும். குறிப்பாக தன் காதலியை சுட்டவனை துரத்திக்கொண்டு ஓடும் காட்சியில் மிகப் பரிதாபமாக பருத்த உடலை தூக்கிக்கொண்டு சிம்பு ஓடுவது பொருத்தமில்லாத காட்சி. மணிரத்னம் படம் என்றாலே யாரோ ஒருவர் மட்டும் உரக்க கத்தும் வசனக் காட்சிகள் இதிலும் உண்டு. பல திறமையான புதியவர்கள் திரைத்துறைக்கு வந்துவிட்டார்கள். மணிரத்தினம் தன்னை அப்டேட் செய்துகொள்ள முயற்சித்து தோற்ற திரைப்படம் தான் செக்கச் சிவந்த வானம்.

ஆளாளுக்கு சுட்டுக் கொல்வதில் திரை தான் சிவக்கிறது தவிர.. எனக்கென்னவோ கொட்டாவி தான் வந்தது.

இறுதியாக..மீண்டும் ஜாக் நிக்கல்சன் சொல்வதையே நான் வழிமொழிகிறேன். நம் மணிரத்தினற்காகவது மார்லன் பிராண்டோ சீக்கிரம் இறக்க வேண்டும். அப்போதாவது அவர் வேறு மாற்றி சிந்திக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும்.