இடப்பிறழ்வு மொழி..
———————————–

பிரிவின்
இருள் நிழல்கள்
நம் வசந்தகால
முற்றத்தின் மேல்
போர்த்த முனையும்
இப்பொழுதை
முற்பொழுதொன்றின்
பேரன்பின்
மழைச்சாரல்
நனைக்க முயல்கிறது.

உனக்கென நீ
கோர்த்துக் கொண்ட
காரணச் சங்கிலிகளை
உன் கழுத்தில்
அணிந்துக் கொண்டு
கீழ்த்திசை நோக்கி நடக்க
தொடங்குகிறாய்..

ஒரு நள்ளிரவின்
அழுகுரல் போல
நம் பிரிவு
சுருதி பேதம்
காணாத தன்னியல்பாய்
நிகழத் தொடங்குகிறது.

நம் நேச வீணையின்
அறுந்து விட்ட
தந்திகள்
எங்கிருந்தோ வரும்
காற்றின் விரல்களால்
தீண்டப்பட்டு
அதிரத்தான் செய்கிறது.

தனிமையின் சுடர்
நினைவுகளின்
நிராதரவான
பக்கங்களை
ஒளியூட்டுகிறது.

வெறித்த
பார்வைகளோடும்
விழி நீர்
சிமிட்டல்களோடும்
வெற்றுச் சுவர்
மீதேறி
உறைகின்றன
விழிகள்..

பசுமையேறிய
பெருவனத்தில்
இலையுதிர்
பொழுதொன்றின்
நுழைவு போல
காலதிசை மாற்றமிது
என என்னால் நம்ப
முடியவில்லை.

ஆயினும்..
எனக்குள் நானே
உறுதிப்படுத்திக்
கொள்கிறேன்..

சகி..

நமக்கென ஒரு
நிலாக்காலம்
இருந்தது.