நீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளை கூராக்கு..
 புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக
அந்த கத்திகளை என் மார்பில் பாய்ச்சு.. மணிக்கணக்காக
நாட்கணக்காக
ஆண்டுக்கணக்காக
இருண்ட யுகங்களாக
 நட்சத்திர நூற்றாண்டுகளாக
என்னை அழ விடு.
-பாப்லோ நெரூதா.
*
இறுக்கமும் நினைத்துப் பார்க்கவே மறுக்கவும் கூடிய பால்யத்தை கொண்டவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வின் விதிகளுக்கு கட்டுப்படாத ஒரு கட்டற்ற காற்றைப்போல திரிவார்கள். பால்யத்தின் பசி என்பது வாழ்வு முழுக்க அடங்காத நீட்சியை கொண்ட பெரும் பயணம். துன்பமும் துயரமும் கொண்ட இளம் வயது வாழ்வினுடையவர்களின் விழிகளை என்றாவது உற்று கவனித்து இருக்கிறீர்களா.. எதையும் சற்றே நிமிர்ந்து பார்க்க தயங்கும் அவர்களின் பார்வையில் எதனாலும் ஆற்றுப்படுத்த முடியாத துயரத்தின் நிழல் படிந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா..
அப்படியானால் நீங்கள் மார்லன் பிராண்டோவை புரிந்து கொள்வது மிக எளிது.
.
சில நாட்களாக அவரைப்பற்றி தேடி வாசித்து வருகிறேன். அவருடைய திரைப்படங்கள் பலவற்றை தேடிக் கண்டெடுத்து பார்த்து வருகிறேன். ஒரு திரைப்பட நடிகனின் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள அல்லது தரிசிக்க  என்ன  இருக்க முடியும் என்கிற கேள்விக்கு.. மார்லன் பிராண்டோவின் வாழ்க்கை தரும் அசத்தலான பதில்.. அசலான மனிதன் எப்போதும் சமூகத்தின் சட்டகங்களை மீறுபவனாகவே இருந்து வருகிறான்.
.
மார்லன் பிராண்டோவை பற்றி பல்வேறு செய்திகள் நமக்கு நூலாகவும் கட்டுரைகளாகவும் புத்தகங்கள் வடிவத்திலும் இணையத்திலும் கிடைக்கின்றன. அவரே தன் வாழ்க்கையை பற்றி “Songs my mother rought me” என்கிற சுயசரிதையை எழுதி உள்ளார். மார்லன் பிராண்டோவை பற்றி தமிழில் அஜயன் பாலா ஒரு சிறப்பான நூலை எழுதியிருக்கிறார் .எதிர் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய உலக சினிமாவில் மார்லன் பிராண்டோவின் புகழ்பெற்ற பேட்டியின் மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது
 தன்னை தீவிரமான அமெரிக்கா எதிர்ப்பாளராக காட்டிக் கொண்ட அவர் பூர்வகுடி மக்களுக்காக தீவிரமாக இயங்கியவர். அவரது எழுத்துக்களில் முழுக்க நிறத்தால் இனத்தால் பேதம் காட்டப்பட்டு சுரண்டப்பட்ட பூர்வகுடி மக்களின் உரிமைகள் பற்றிய ஆவேசமே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. .
.
எப்போதும் மீறல்களும், கோபமும் நிறைந்த மனிதனாக மார்லன் பிராண்டோ திகழ்ந்திருக்கிறார். சிறுவயதில் கோபக்கார தந்தைக்கும் குடிகார தாய்க்கும் மகனாகப் பிறந்த அவரது பால்யம் துயர நினைவுகளாலும் அலைகழிப்புகளாலும் நிறைந்தது. குடித்துவிட்டு எங்கோ மதுபான கடையில் விழுந்து கிடக்கிற தாயை தூக்கி வருகிற வேலையை இவரும் இவரது மூத்த சகோதரியும் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கிறார்கள். சிறுவயதில் தன்னை கவனித்து கொள்ள வந்த பணிப்பெண்ணான எர்மி என்ற இளம் பெண்ணிடத்தில் தீவிரமாக ஈர்ப்புக் கொள்கிறார் மார்லன். அந்தப் பெண் சில மாதங்களில் காதலனுடன் ஓடிப்போக மிகுந்த தனிமை உணர்ச்சிக்கு உள்ளாகிறார். அந்தத் தனிமை உணர்ச்சி அவர் வாழ்நாளெல்லாம் நிழலென தொடர்ந்து வருகிறது. தான் பழகும் எல்லாப் பெண்களிலும் எர்மியை தேடி கண்டடைய முடியாமல் சோர்வதுதான் அவரது வழக்கமாக இருந்திருக்கிறது.
.
அவரது வாழ்க்கை முழுக்க பெண்களை தேடுவதும் அவர்களில் கொதித்துக் கொண்டிருக்கிற தனது உணர்ச்சி அலைகளை ஆற்றுப்படுத்த வழி தேடுவதுமாகவே மார்லன் இருந்திருக்கிறார். பெண்களை நீக்கி அவரது வாழ்வில் கண்டடைய கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று அவரே சொல்லிக் கொண்டாலும் சகமனிதனின் பால் ஒடுக்கப்பட்ட மக்களின் பால் அவர் கொண்டிருந்த அளவற்ற நேசம் ஆச்சரியகரமானது.
.
அமெரிக்க இந்தியர்களின் போராட்ட இயக்கங்களில் தன்னையும் ஒருவனாக அவர் இணைத்துக் கொண்டிருக்கிறார். மார்டின் லூதர் கிங் பேச்சை கேட்டு உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். ஆகச்சிறந்த திரைப்பட நடிகன், ஆஸ்கர் விருதிற்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்ட திறமைசாலி என்றெல்லாம் அவருக்கு ஒரு புகழுச்சிகள் இருந்தாலும்.. பூர்வகுடி மக்களுக்காகப் போராடுவதை தான் தனது வாழ்நாள் கடமையாக அவர் கருதியிருக்கிறார். அமெரிக்காவை கண்டு பிடித்ததாக உலகவரலாற்றில் போற்றிக் கொண்டாடப்படும் கொலம்பஸ் ஸை மனிதநேயமற்ற கொலைகாரன் என்று மார்லன் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
இந்தியாவிற்கு பீகார் பஞ்சத்தை பற்றி ஆவணப்படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார். இந்த நிலத்தில் காணப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகளே உலகத்தில் நடக்கிற அனைத்து விதமான கொடுமைகளை விட ஆகப்பெரும் கொடுமை என்று வருந்துகிறார்.இந்திய நிலத்தின் மாபெரும் திரைப்பட ஆளுமை சத்யஜித்ரே யோடு நெருங்கி பழகி இருக்கிறார். அவரது மிக நெருக்கமான இன்னொரு நண்பன் மைக்கேல் ஜாக்சன்.
ஆஸ்கர் விருதுக்காக இயங்குகிற இயங்குகிற நடிகர்களை பார்த்து ஏளனம் செய்கிறார் மார்லன்.தி காட்பாதர் படத்தில் நடித்ததற்காக அவர் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.அந்த விருதைப் பெறும் நிகழ்ச்சியை அமெரிக்க பூர்வகுடிகள் அடைந்திருக்கிற துயரங்களை உலகம் முழுக்க கொண்டு செல்கிற ஒரு வாய்ப்பாக பயன்படுத்த மார்லன் பிராண்டோ முடிவு செய்தார். தனக்கு பதில் அந்த விருதைப் பெற சச்சின் லிட்டில் வெதர் என்கிற ஒரு பூர்வகுடி பெண்ணை அனுப்பி இதுவரை அமெரிக்க பூர்வகுடிகள் அடைந்திருக்கிற துயரங்களை உலகறிய செய்தார்.
தனித்த தீவு ஒன்றை விலைக்கு வாங்கி வசிக்க முயன்ற மார்லன் பிராண்டோ தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனைகளை தி காட்பாதர் படத்தின் நாயகன் மாஃபியா கிங்   டான் கார்லியோன் போலவே அனுபவித்தவர். தனது மகளின் காதலனை தனது மூத்த மகன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று 10 வருட சிறை தண்டனை அனுபவிக்க மகள் தற்கொலை செய்து கொள்ள தீரா மனவேதனையில் ஆழ்ந்து போனார் மார்லன் பிராண்டோ.
தனது 47வது வயதில் 70வயது கிழவனாக காட்பாதர் இல் நடித்து உலகப் புகழ் அடைந்த மார்லன் பிராண்டோ தனது வாழ்க்கையை மூடி வைத்த ஒரு புத்தகமாக கருதவில்லை. கேமரா முன் நின்றவுடன் தன்னை அந்த கதாபாத்திரத்திற்குள் உட் செலுத்துவதில் மார்லன் பிராண்டோ ஒரு ஜீனியஸ். அவர் நடித்த தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் என்கிற திரைப்படத்தில் மிகு காம உணர்வு கொண்ட ஒரு மிருகம் போல வாழ்ந்து காட்டி இருப்பார். காட்பாதர் படத்தில் நடிப்பதற்காக தனது தாடையை மாற்றி அமைத்துக் கொண்டு ஒவ்வொரு அசைவிலும் ஒரு டான் போல வாழ்ந்திருப்பார். அவருக்கு எலிசபெத் டெய்லர் மர்லின் மன்றோ போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்களோடு நெருக்கமான உறவு இருந்தது. கூட நடிக்கும் பல நடிகைகளோடு அந்தரங்க உறவு வரை வைத்துக்கொள்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இளம் வயதில் தன்னை ஏமாற்றிய எர்மி என்ற அந்தப் பணிப்பெண் தன்னை விட்டு போனதிலிருந்து வேறு எந்தப் பெண்ணிடமும் ஏமாந்து விடக்கூடாது என்கின்ற எண்ணத்தினாலேயே ஒரே சமயத்தில் பல பெண்களோடு.. ஒன்று போனால் இன்னொன்று என்ற வகையில் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக அவரே ஒத்துக் கொள்கிறார்.
.
ஏறத்தாழ என்பது வருடங்கள் வாழ்ந்த அவரது வாழ்க்கை துயரங்களும் ஏமாற்றங்களும் நிறைந்த கொடும் பாதை என்றாலும் அவர் அந்த உணர்ச்சிகளின் நெருக்கடி தீண்டாத திறன்மிக்க பெரும் ஆளுமை கொண்ட நடிகராக திகழ்ந்தார். திரையில் அவர் தோன்றிவிட்டால் அவரது ஆளுமை படாத சக கதாபாத்திரங்கள் இருக்க இயலாது. திரை முழுக்க தனது திறமையால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தெரிந்த அந்தப் பெரும் கலைஞனுக்கு வாழ்வின் சூட்சமங்கள் குறித்து இதுவரை தெரியவில்லை என்பதுதான் பெரும் சோகம்.
புகழ்பெற்ற இயக்குனர் பெர்னாண்டோ பெர்ட்டோலூச்சி இயக்கிய தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் என்கின்ற திரைப்படத்தில் மார்லன் பிராண்டோ நடித்த போது  கேமிராவின் வியூ பைண்டர் மூலம் அவரை பார்க்க முடியவில்லை .. கால்கள் உதறல் எடுக்கிற அளவிற்கு நடிப்பில் ஆளுமை செலுத்துகிறார் என்று அந்த திரைப்படத்தின் கேமராமேன் மிரண்டு போனார். அதேபோல  பியூஜிடீவ் மைண்ட் என்ற திரைப்படத்தின் இயக்குனர் சிட்னி லூமட் மார்லன் பிராண்டோ நடிக்கும்போது ஒரு பறவை சத்தமிட்டால் கூட அதனை வெறுமனே தன் ஒற்றைப் பார்வையால் அடங்க செய்துவிடுவார் என்று பிரமிக்கிறார். அந்த அளவிற்கு நடிப்பில் ஆளுமை செலுத்திய மாபெரும் கலைஞனாக மார்லன் பிராண்டோ திகழ்ந்தார்.
இதையெல்லாம் தாண்டி அவர் அரசியலாக ஏற்றத்தாழ்வுக்கு எதிராக , அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அழுத்தமான தனது குரலை பதிவு செய்திருக்கிறார் என்ற காரணத்தினாலேயே ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்ள வேண்டிய , அறிந்துகொள்ள வேண்டிய பெரும் இலக்கியமாக மார்லன் பிராண்டோ வரலாற்றில் உறைந்திருக்கிறார்.
இந்த மாபெரும் கலைஞனை தனது அசாத்திய எழுத்து மூலமாக தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள அஜயன்பாலா விற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஒரு சுய சரிதை நூலுக்குரிய வெறும் தகவல் களஞ்சியமாக இல்லாமல் குறைகளையும் நிறைகளையும் சொல்லி ஆராய்ந்து கொள்கிற ஒரு மனிதனின் குரலாக அஜயன் பாலாவின் இந்நூல் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுமைகளைப் பற்றிய வாழ்வியல் சுயசரிதை அறிமுகங்களை தமிழில் தனி வகைமையாக எழுதி வருகிற அஜயன் பாலாவின் இந்த நூல்  தமிழ் மொழிக்கான அவரது மிகச்சிறந்த கொடை.
(மார்லன் பிராண்டோ – தன் சரிதம் தமிழில் அஜயன்பாலா எதிர் வெளியீடு ,விலை ரூ 250)
Attachments area