மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

கமலின் ‘ராஜதந்திர’ இந்துத்துவ அரசியல்

அரசியல்

முதலில் ஹே ராம் என்ற திரைப்படமே இந்துத்துவா திரைப்படம் தான். இந்து-முஸ்லிம் கலவரத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக காட்சியை வைத்து விட்டு கதாநாயகியை முஸ்லிம்கள் கற்பழிப்பது போல காட்சியை வைத்துவிட்டு, கதாநாயக கதை பின்னலில் முஸ்லிம்களின் கலவரத்தால் தான் இந்துக்கள் தூண்டப்பட்டார்கள் என்கின்ற அரசியலை மிக நுட்பமாக பேசுகிற படம் அது.

கமல் எப்போதுமே எதையுமே நேரடியாக பேசியது இல்லை. கடவுள் இல்லை என்று நான் கூறவில்லை. இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறுகிறேன் என்று குழப்படி வேலை செய்கின்ற கமலின் தற்போதைய இந்துத்துவ எதிர்ப்பு நாடகம் என்பது வெறும் கேலிக்கூத்து.

மொழியால் நான் தமிழன் இனத்தால் நான் திராவிடன் நாட்டால் நான் இந்தியன் என்கிற குழப்படிகளில் கமல் தனிரகம். இந்த மண்ணை மலடாக்கும் கூடிய மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களாக இருக்கட்டும்.. ஸ்டெர்லைட் திட்டமாக இருக்கட்டும்.. எட்டு வழி சாலை நீட் என்ற எதற்குமே கமல் இதுவரை போராட வந்ததில்லை.‌ ஜெயலலிதா கருணாநிதி உயிரோடு இருந்த காலகட்டத்தில்.. இருவரையுமே சரிசமமாக வானளாவி புகழ்ந்துவிட்டு ஒரு திரைப்படம் வெளியே வரவில்லை என்பதற்காக நாட்டை விட்டு போகப் போகிறேன் என்று மிரட்டியவர்தான் இந்த கமலஹாசன்.

கமல் திரைப்படங்களில் வலிமையான வைணவ இந்துத்துவ கிளிஷேக்கள் நிறைய உண்டு. கருப்பு சட்டை போட்டுக்கொண்டு ஹிந்துத்துவா வேடமும் அணிந்துகொண்டு அனைவரையும் கமல் குழப்பிக் கொண்டிருக்கிறார்.

இப்போது கோட்சேவை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றால்.. இந்தத் தேர்தலில் கமல் யாராலும் கவனிக்கப்படவில்லை.எதிர்பார்த்த அளவிற்கு அவர் இந்த தேர்தலில் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை. பிரச்சாரமும் பெரிய அளவில் எடுபடவில்லை. இது அவரை இந்த தேர்தல் அரசியலில் கொண்டு வந்த பாஜகவிற்கு பெருத்த ஏமாற்றமாகவும் சங்கடமாகவும் மாறிவிட்டது . எனவேதான் நீ என்னை திட்டுகிற மாதிரி திட்டு… நான் உன்னை குட்டுகிற மாதிரி நடிக்கிறேன் என்பது போல இந்த கோட்சே நாடகம்.

முதலில் தீவிரவாதம் பயங்கரவாதம் போன்ற சொற்களைக் கையாளும் போது மிக கவனமாக கையாள வேண்டும். தீவிரவாதம் என்பது வேறு. பயங்கரவாதம் என்பது வேறு. தீவிரவாதம் என்பது ஒரு கொள்கையின் மீது கொண்டிருக்கிற தீவிர பற்றுறுதியை காட்டுகிறது. பயங்கரவாதம் என்பது லட்சியத்தை தாண்டி மக்களை கொலை செய்கிற மனநோயை காட்டுகிறது. கொண்ட இலட்சியத்தின் மீது மக்கள் சார்ந்த நலனின் மீது தீவிர பற்றுறுதி கொண்ட அனைவருமே தீவிரவாதிகள்தான். உதாரணமாக நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பூலித்தேவன் தீரன் சின்னமலை மருது பாண்டியர் வேலு நாச்சியார் வஉசி, பகத்சிங் சுபாஷ் சந்திர போஸ், உத்தம் சிங் உள்ளிட்ட பல கொள்கையாளர்கள் நாட்டுப்பற்றாளர்கள் அன்று அதிகாரத்தில் இருந்த ஆங்கிலேயர்களால் தீவிரவாதிகள் என்றே அழைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கோட்சேவை ஒரு இந்து தீவிரவாதி என கமல் பேசி இருப்பது..அனைவராலும் மறக்கப்பட்டு இருக்கிற கோட்சேவை மீண்டும் ஒரு பேசுபொருள் ஆக்கி கதாநாயகனாக மாற்றுகிற வேலை தான். இப்போது நமது சங்கிகள் கோட்சேவின் வீர தீர பராக்கிரமங்களை பற்றி பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதுவார்கள். காந்தி கொலையை நியாயப்படுத்துவதற்கான தர்க்கங்களை முன்வைப்பார்கள்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இவர் ஏதோ இந்துத்துவாவிற்கு எதிராக பேசி விட்டது போல தோற்றம் ஊடகங்களால் வலிந்து உருவாக்கப்படும். இந்தத் தேர்தலில் தமிழக மண்ணில் பேசுபொருளாக இருக்கவேண்டிய 50 ஆண்டு கால திராவிடக் ஊழல் அரசியல், மத்தியிலே அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கின்ற இந்துத்துவ மதவாத அரசியல், நம் தமிழர் நிலத்திற்கு எதிரான நிலவள கொள்ளை அரசியல் ஆகியவை மறக்கடிக்கப்பட்டு கோட்சேவை பற்றி விவாதிக்க வைக்கிற கமலின் ராஜ தந்திரம் தான் இது.

ஆடிட்டர் குருமூர்த்தியின் நேரடியான கையாள் தான் இந்த கமலஹாசன். பாஜகவின் எதிர்ப்பு ஓட்டுகளை பெறுவதற்கான பாஜகவின் ஏஜெண்டு தான் இந்த கமலஹாசன்.

எனவே இதையெல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு.. உண்மையான திராவிட /இந்துத்துவ எதிர்ப்பில் நம் முழு கவனத்தையும் செலுத்தி.. மக்களிடையே இதுபோன்ற குழப்படி வேலைகளை அம்பலப்படுத்துவதே தமிழ்த் தேசியர்களின் முதன்மை கடமையாகிறது.

 507 total views,  1 views today