நேற்று நள்ளிரவு நீண்டகாலமாக பழக்கப்பட்ட ஒரு தம்பி அலைபேசியில் எடுத்து நம்மைப் பற்றி அவதூறு பரப்புவதையே ஒரு முழு நேர வேலையாக கொண்டு திமுக இணைய தள அணியை சேர்ந்த சிலர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அண்ணா.. என்று கேட்டார்.

அவருக்கு நான் அளித்த பதிலை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது இப்போது சரியாக இருக்குமென நான் உணர்கிறேன்.

பல இணையதள திமுக காரர்கள் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியை பற்றியும் அண்ணன் சீமான் பற்றியும் எழுதி வருவது குறித்து எவ்விதமான கவலையும் கொள்ள வேண்டியதில்லை.

ஏனெனில் திமுகவின் சமீபத்திய இணையதள ஆட்கள் தொழில்ரீதியாக இதற்கென தயாரிக்கப்பட்டவர்கள். ஊதியம் பெறுபவர்கள். ஒரு காலத்தில் ஒரே ஒரு டீ குடித்துக்கொண்டு, கொடி கட்டிக்கொண்டு,முரசொலி படித்துக்கொண்டு .. டீக்கடையில், சலூனில், வீட்டுத் திண்ணைகளில், மரத்தடிகளில் கட்சி பேசி வளர்த்த திமுக காரர்கள் இவர்கள் அல்ல.

அந்த கால திமுக காரர்கள் கோ சி மணி போல வீரபாண்டி ஆறுமுகம் போல துணிச்சலானவர்கள்.கருணாநிதியே தவறு செய்தால் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்பவர்கள். ஆனால் இவர்கள் அப்படி அல்ல. இவர்கள் ஊதியம் பெறுகிற வேலைக்காரர்கள். இவர்களிடம் நாம் தத்துவரீதியான உரையாடலோ அரசியல் ரீதியான விளக்கமோ எதிர்பார்க்க முடியாது.திட்டுவார்கள். பேசுவார்கள். இழிவான செய்தி பரப்புவார்கள். அதைத்தவிர இவர்களால் எதுவும் செய்ய முடியாது. அந்த காலத்து திமுக காரர்கள் பெரியார், அண்ணா, நெடுஞ்செழியன் மதியழகன் சிபி சிற்றரசு என்றெல்லாம் பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள். இப்போது இணையதளத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஸ்டாலின் மருமகன் சபரீசனால் உருவாக்கப்பட்டு எழுதிவருபவர்கள். இவர்களிடம் வாசிப்பு அறிவோ, அரசியல் நாகரிகமோ எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது.

என் தந்தையார் பாரம்பரிய திமுககாரர். தினந்தோறும் முரசொலி படித்தவர். கருணாநிதி என்று சொன்னால் வீட்டில் சோறு போட மாட்டார். கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும்.
2009 கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து தமிழினத்தை ஏமாற்றிய பிறகு திமுக கரை வேட்டியை கட்டாமல் தூக்கி எறிந்தவர். அவருக்கு இன அழிவு வலித்தது. ஊழல் அரசியல் உறுத்தியது.
அதனால் மானம் கருதி அவர் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார். இப்போது இணையதளங்களில் ஊதியத்திற்காக செயல்படுபவர்களிடம் இதுபோன்ற மான உணர்ச்சியை நாம் எதிர்பார்க்க முடியாது.

நடந்து கொண்டிருக்கின்ற திமுகவின் இழிவான அரசியல் அப்பாவி திமுக தொண்டர்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக காமெடியாக தரமாக வளைந்து நெளிந்து எழுதக் கூடிய அளவில் திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட இந்த திமுக இணையதள எழுத்தாளர்களிடம் பிரபாகரனைப் பற்றி விவாதிப்பது என்பது வீண். அவர்களுக்கு இனத்தின் விடுதலைப் போராட்டமோ, அதன் தியாகமோ என எதுவும் தெரியாது. சபரிசனும் உதயநிதி ஸ்டாலினும் தான் அவர்களுக்கு ஆகப்பெரும் புரட்சியாளர்கள். அவர்களிடம் போய் தியாக தீபம் திலீபனை பற்றி பிரிகேடியர் பால்ராஜை பற்றி எல்லாம் பேசுவது என்பது நம்மையும் தரம் தாழ்த்தும். ஊதியம் வாங்கிக்கொண்டு ஒரு திட்டமிட்ட பணியாக அமைத்துக் கொண்டு எழுதுபவர்களிடம் ஒரு இனத்திற்கான விடுதலைப் போராட்டத்தின் நியாய தர்மங்களை பற்றி விவாதிப்பது என்பது முற்றிலும் வீணானது ‌. காரித் துப்பி விட்டு கடந்து விடுவதே மேலானது.

இன்று அரசியல் ரீதியாக திமுக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. திமுகவை இன அழிப்பிற்கான கட்சி என்று சென்ற தேர்தலில் எள்ளி நகையாடிய மதிமுக இடதுசாரிகள் விசிக போன்ற கட்சிகளின் தயவை நாடி திமுக நின்றுகொண்டிருக்கிறது. எதிரிகளின் தயவில் வாழக்கூடிய நிலையில் திமுக இன்று மாறிப் போனதற்கு காரணம் நாம் தான் என்பது மிக முக்கியமானது. இத்தனை ஆண்டுகால கட்சி பிரதான எதிரி அதிமுக இரண்டாக மூன்றாக உடைந்த பிறகு கூட தனித்து நிற்க தைரியம் இல்லாமல் பத்து கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் நிற்க வேண்டிய துயர நிலை என்பதெல்லாம் யாரால் ஏற்பட்டது என்று நினைக்கிறீர்கள்.. 2009 க்குப் பிறகான படித்த இளைஞர்கள் இணைய தளம் சார்ந்து இயங்கக் கூடிய இளைஞர்கள்.. இனம் அழிந்தபோது கண் சிவந்து மனம் துடித்தவர்கள் இவர்கள் தான் திமுகவின் இன்றைய நிலைக்கு காரணம். அதன் காரணமாகவே நம்மீது அவர்களுக்கு அவ்வளவு கோபம். யாராவது ஒரு நமக்கு எதிரான ஒரு செய்தியை வெளியிட்டால் பாய்ந்து கொண்டு பரபரப்பாக பரப்புவது, பார்த்தீர்களா சீமானை.. நாம் தமிழர் கட்சியை.. ஆமைக்கறி, நாஜிக்கள், மனநோயாளிகள் என்றெல்லாம் திட்டி எழுதி தன்னை தானே திருப்திப் படுத்திக் கொள்வது.. என்கிற பரிதாப நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் பற்றியோ திராவிட தத்துவத்தைப் பற்றியோ பேச முடியாத நிலைக்கு ஆளாக்கியவர்கள் நாம்தான்.திட்டவும் ஏசி பேசவும் மட்டுமே அவர்களால் முடியும்.

ஒரு சிறிய எடுத்துக்காட்டு தான். இப்போது பிறக்கின்ற பிள்ளைகளுக்கு பரவலாக பிரபாகரன் என்ற பெயர் சூட்டப்படுகிறது. நமது அண்ணன் மகன் கூட மாவீரன் பிரபாகரன். ஆனால் சமீப காலத்தில் ஏதேனும் ஒரு குழந்தைக்கு கருணாநிதி என்றோ ஸ்டாலின் என்றோ தயாநிதி உதயநிதி என்றோ பெயர் சூட்டப்பட்டு இருக்கிறதா என்பதை யோசித்து பாருங்கள். திமுக காரர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு கருணாநிதி என்று பெயர் சூட்ட மாட்டார்கள்.

ஏனெனில் தமிழ் சமூகத்திற்கு கருணாநிதி என்ற பெயர் ஒவ்வாமை உடைய பெயராக வரலாறு மாற்றிவிட்டது. எதிரியை போல கூட வாழலாம்.ஆனால் கருணாநிதி போல வாழக் கூடாது என்கின்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் 1 1/2 லட்சம் தமிழர்களின் மரணம். வெளிப்படையாக பேசி கொள்ளாவிட்டாலும் அந்த மரணம் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவிற்குள்ளும் ஒரு மாறாத வடுவாக இருக்கிறது.

அந்தக் காயத்தை தான் நாம் தமிழர் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. மக்கள் மறந்து விடுவார்கள் அதன் பிறகு நாம் பிழைத்துக் கொள்ளலாம் என்கிற திமுகவின் நினைப்பில் நாம் தமிழர் மண்ணை வாரி போட்டுக் கொண்டே இருக்கிறது. நாம் தமிழரின் இளைய பேச்சாளர்கள் வீதிக்கு வீதி ஈழ அழிவினை உருக்கமாகப் பேசி திமுக மீதான வெறுப்பை ஆறாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

அதனாலேயே மற்ற எல்லோரையும் விட நாம் தமிழர் கட்சியை மிகப்பெரிய ஆபத்தாக திமுக கருதுகிறது.

அவ்வாறு கருதித் தான் ஆக வேண்டும். பழையன ஒன்று கழிந்து புதியன ஒன்று பிறக்கும் போது.. இதுபோன்ற ஏசல்களும் கூச்சல்களும் திட்டல்களும் அவதூறு பரப்புரைகளும் நிகழ்ந்தே தீரும்.

இப்படி எல்லாம் நிகழவில்லை என்றால் நாம் வளரவில்லை என்றும் புறப்பட்ட இடத்திலேயே நின்று கொண்டு இருக்கிறோம் என்றும் பொருள்.

எதிரிக்கு உறுத்தினால் தான்.. அது வளர்ச்சி.

அவ்வகையில் 50 ஆண்டுகால திராவிட சித்தாந்தத்தை அசைத்துப் பார்க்க சீமானும் சீமான் தம்பிகளும் வரலாற்றின் வீதிகளில் எழுந்து விட்டார்கள் என்பதை தான் சமீபத்திய paid labours ஆன இணையதள திமுகவினரின் கதறல் ஒலி காட்டுகிறது.

மனம் பொங்கும் புன்னகையோடு.. மகிழ்ந்திருப்போம்.