மதிப்பிற்குரிய தடம் ஆசிரியர் குழுவினருக்கு..
விகடனின் தடம் வெளியிட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சிறப்பிதழை காண நேர்ந்தது. டெசோ மாநாடு ஒன்றின் சிறப்பு மலர் போல தயாரிக்கப்பட்ட அந்த சிறப்பிதழில் வேண்டும் என்றோ வேண்டாமென்றோ எக்கச்சக்க ஒருபக்கச்சார்பு அரசியல் நிராகரிப்புகள்.
இதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்க முடியும் என்றாலும் கூட..விகடன் போன்ற வெகுஜன இதழ்கள் எக்கருத்தை முன்மொழிகின்றன என்பது கவனிக்க வேண்டிய அரசியல் செயல்பாடு என்பதனாலேயே இதை எழுத வேண்டியது அவசியமாகிறது.
ஒவ்வொரு கருத்தை தீவிரமாக ஆதரித்து அது சார்பாக சமூக மட்டத்தில் ஒரு பொதுக்கருத்தை உருவாக்க ஒரு இதழை பயன்படுத்திக் கொள்வது என்பது முரசொலி, நமது எம்ஜிஆர், சங்கொலி, ஜனசக்தி,தீக்கதிர் போன்ற கட்சிகள் சார்ந்த இதழ்களுக்கு நடக்கக்கூடியது. ஆனால் எல்லாத் தரப்பையும் கருத்து கேட்டு அவரவர் கருத்தினை வெளியிட்டு.. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு பொதுக் கருத்தினை ஏற்படுத்த விகடன் போன்ற நீண்டகாலமாக இதழியல் துறையில் இருந்து வருகிற மாபெரும் நிறுவனம் முயல்வது என்பதே இத்தனை ஆண்டு கால இருப்பிற்கு செய்யக்கூடிய நியாயம் என கருதுகிறேன். ஆனால் இந்த மாத தடம் முள்ளிவாய்க்கால் சிறப்பிதழ் முழுக்க முழுக்க ஒரு தலைப் பக்கச்சார்பு உடையதோடு மட்டுமில்லாமல்.. மற்றொரு பக்கத்தின் மீதான தீவிர நிராகரிப்பினை கொண்டிருக்கும் அதிகார செயல்பாடு ஆகும். Hear both side என்கின்ற அடிப்படை இதழியல் அறமில்லாத ஒரு இதழாக இம்மாத தடம் அமைந்துவிட்டது.
தீவிரமான புலி எதிர்ப்பாளர் ஷோபாசக்தி போன்றவர்களிடம் கட்டுரை பெற்று வெளியிட தெரிந்த தங்களுக்கு, சீமான் மீது குறிப்பிட்ட விமர்சனங்கள் வைக்கத் தெரிந்த தங்களுக்கு, அவை குறித்த நியாயங்களை ஏன் நாம் தமிழர் தரப்பில் கேட்கவில்லை என்பதே இம்மாத தடம் இதழில் நிகழ்ந்திருக்கும் நிராகரிப்பின் அரசியல்.
கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகான தமிழ்நாட்டு அரசியலில் வேறு எந்த அமைப்பினைக் காட்டிலும் ஈழ அரசியலைப் பற்றி ஒவ்வொரு வெகுஜன மேடைகளிலும் நாம் தமிழர் உரத்துப் பேசி கொண்டு வருகிறது. இன்னமும் அந்த மாபெரும் இன அழிப்பினை ஆற்றவே முடியாத பெரும் காயமாக தமிழ்நாட்டில் உணர வைத்துக் கொண்டிருப்பதில் நாம் தமிழரின் பங்கு மிக அதிகமானது.
ஈழ ஆதரவாளராக இருந்த பலர் திமுகவின் உறவிற்காக மௌனமாகிவிட்ட பொழுதும், ஈழ விடுதலைக்கான தேவையை, ஈழ மக்களின் இறையாண்மை மிக்க வாழ்வொன்றின் அவசியத்தை இன்னமும் தமிழ்நாட்டில் பேசிக் கொண்டிருக்கிற வெகு சிலரில் சீமான் மிக முக்கியமானவர். வருடாவருடம் நாம் தமிழர் சார்பாக நடத்தப்படும் தேசிய தலைவரின் பிறந்தநாள், மாவீரர் நாள், மே 18 இன விடுதலை மாநாடு என மாபெரும் நிகழ்ச்சிகள் இன அழிவினை நினைவூட்டி தனித்தமிழ் ஈழ நாட்டின் அவசியத்தை நிகழ்கால இளைஞர்களுக்கு, வெகுமக்கள் பரப்பிற்கு எடுத்துச் செல்வது என்பது விடுதலைக்கான அரசியல் நடவடிக்கை என்பதை தடம் வேண்டுமென்றே நிராகரித்திருக்கிறது.
மேலும் 2009 க்குப் பிறகான ஐநா மன்றத்தின் மனித உரிமை அமர்வுகளில் நாம் தமிழர் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கிற செயற்பாட்டாளர்கள் தமிழின அழிவிற்கான நீதியை சர்வதேச மன்றங்களில் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். உலக அளவில் செயல்படும் நாம் தமிழர் அமைப்புகள் ஈழத்தமிழ் உறவுகளோடு இணைந்து இன அழிவிற்கான நீதியை கோரும் போராட்டங்களில் கலந்துகொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேறு எந்த அமைப்பும் செய்திராத மகத்தான அரசியல் நடவடிக்கைகள் இவை என நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்னமும் இந்தியத்தின் மீது திராவிடத்தின் மீது நாம் தமிழர் முன்வைக்கிற அனைத்து விமர்சனங்களும் இன அழிவை சார்ந்தவை என்பதும் அதன் காரணமாக தொடர்ச்சியாக புது தளத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி பல வழக்குகளைத் பெற்று அதன் மூலமாக பல இழப்புகளை நேரடியாக சந்தித்து வருகிற முன் கள அமைப்பாக நாம் தமிழர் விளங்குகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
தடம் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருக்கிற பெரும்பாலான திராவிட இயக்க ஆதரவாளர்கள் நாம் தமிழர் கொண்டிருக்கின்ற திராவிட எதிர்ப்பின் காரணமாக நாம் தமிழர் மீதான ஒவ்வாமையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் விகடன் போன்ற இருதரப்பினரையும் கேட்டு அவரவர் கருத்தினை வெகுமக்கள் தளத்திற்கு கொண்டு சேர்க்கும் இதழியல் பணியை மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்திடம் இருந்து இதுபோன்ற நிராகரிப்புகள் எழுவது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தமிழகமும் ஈழப்போராட்டமும் என்கின்ற கட்டுரையில் நாம் தமிழரின் அரசியல் பற்றி சாதியம் சார்ந்த குறுந்தேசியவாதம் என குறிப்பிட்டிருப்பது அப்பட்டமான அவதூறு மட்டுமில்லாமல் திராவிட இயக்க ஆதரவு செயல்பாடு. சாதியை புறக்கணித்து இனம் சார்ந்த தமிழ் தேசியக் கருத்தியலை இம்மண்ணில் உருவாக்கிவிட வேண்டும் என முனைப்போடு நிற்கிற நாம் தமிழர் மீது சாதியவாதிகள் சமீப நாட்களாக நிகழ்த்தி வரும் அவதூறு தாக்குதல்கள் நீங்கள் அறியாதது அல்ல. இப்படி ஒரு அவதூற்றினை நீங்கள் சொல்ல முயலும் போது.. எங்கள் தரப்பையும் நீங்கள் கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு மறுப்பது என்பது நேரடியாக நாங்கள் அரசியல் களத்தில் எதிர்த்து நிற்கிற திராவிட இயக்கங்களுக்கு நீங்கள் செய்கிற தயவு.. உதவி.
இந்த ஒருதலைப்பட்சமான செயல்பாடு விகடன் போன்ற வெகுஜன இதழில் நடவடிக்கைகள் கொண்ட ஒரு நிறுவனத்தின் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிற தடுமாற்றம். அதேபோல அக்கட்டுரையில் தமிழகத்தில் இன அழிவு சார்ந்து நிகழ்ந்திருக்கிற அரசியல் நடவடிக்கைகளை போகிற போக்கில் கடந்து விடுவது என்பது இன்று தலைவர் பிரபாகரன் பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் தீவிரமாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுதிக்கொண்டிருக்கிற திமுக ஆதரவாளர்களின் செயலை ஒத்தது.
புலி எதிர்ப்பு அரசியலை இலக்கியங்களாக உரையாடல்களாக அறிவுஜீவித்தனமாக பதிவு செய்த ஷோபாசக்தி வஐசெ ஜெயபாலன் ஆகியோர்களுக்கு வாய்ப்பளிக்க தெரிந்த தடம் ஆசிரியர் குழுவினருக்கு ஈழ அரசியலுக்காக இயங்கிய ஆண்டன் பாலசிங்கம் பற்றியோ, புதுவை இரத்தினதுரை பற்றியோ பெரிதாக குறிப்பிட முடியாமல் போனது என்பது இன்று புலி எதிர்ப்பு அரசியலை சமூகவலைதளங்களில் நிகழ்த்திக் கொண்டிருக்கிற திராவிட இயக்க அரசியலுக்கு ஆதரவானது. அதேபோல 2009-க்கு பிறகு முள்ளிவாய்க்கால் அழிவைப்பற்றி தமிழக நிலத்தில் வந்திருக்கிற ஏகலைவன் தொகுத்த முள்ளிவாய்க்கால் முடிவல்ல, தமிழரசி பதிப்பகம் வெளியிட்டுள்ள முள்ளிவாய்க்கால், ஐயா பெ மணியரசன் எழுதிய நூல்கள், போன்ற பல பெரு மக்களது முக்கியமான பதிவுகள் ஏதோ ஒரு அரசியல் உணர்வில் வேண்டுமென்றே விடப்பட்டிருக்கின்றன. 2009 இல் நிகழ்ந்த இன அழிவு தமிழ்நாட்டில் இளைஞர்களின் மனதில் எவ்வாறு திராவிட இயக்க எதிர்ப்பாக உருமாறியது என்பதற்கான மிக முக்கியமான அரசியல் ஆய்வும் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கிறது.
மிக நெருக்கமான தொலைவில் அமைந்துள்ள தமிழரின் இன்னொரு தாய் நிலமான ஈழ நிலத்தில் நிகழ்ந்திருக்கிற மாபெரும் இன அழிவு தமிழின இளையோரை உளவியலாக மிகக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இத்தனை ஆண்டு காலம் பிழைப்புவாத அரசியலை வைத்து தமிழ் உணர்வு, ஈழ ஆதரவு என்றெல்லாம் பாசாங்கு செய்து வந்த திராவிட இயக்கத் தலைமைகள் மீது தமிழ் இளையோருக்கு கடுமையான வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த வெறுப்பின் விளைவே வெகுஜன தமிழ் தேசிய அரசியலின் ஆணி வேராக இருக்கிறது.முக்கியமாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிற இந்த அரசியல் செயல்பாடுகளை போகிறபோக்கில் சாதிய குறுந்தேசிய வாதமாக பதிவு செய்வது அப்பட்டமான அவதூறு. பொய் கருத்து.
இதழியல் அறத்தினை இம்மாத தடம் இதழ் மீறி இருப்பதோடு மட்டுமல்லாமல் அவமானப்படுத்தி இருக்கிறது. அது பத்தாண்டு கால முள்ளிவாய்க்கால் இன இன அழிவை பதிவு செய்யும் ஒரு சிறப்பிதழில் நிகழ்ந்து இருப்பது என்பது ஆசிரியர்குழு கொண்டிருக்கின்ற தனிப்பட்ட அரசியல் விருப்பங்கள் சார்ந்த நிராகரிப்பு மற்றும் வெறுப்பின் அரசியல் என்பதை நான் இதன் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.