ஒவ்வொரு மனிதனுக்கும் பெரிய ஆசையாக எது இருக்கக்கூடும் என நீங்கள் நினைக்கிறீர்கள்..?
அவனுக்கென்று சில வசந்த காலங்கள் இருந்திருக்கக்கூடும். வாலிபத்தின் மஞ்சள் பூவாக அவன் மலர்ந்து நிற்கையில்.. அவனது இளமையின் மகரந்தத்தாளை ஒட்டி உரச ஒரு வண்ணத்துப்பூச்சி வந்து போயிருக்கக்கூடும். கண்கள் முழுக்க கனவோடு, நெஞ்சம் முழுக்க இசையோடு , இதயம் முழுக்க கவிதையோடு, திரிந்த அந்த நிலா காலத்திற்குத்தான் ஒவ்வொரு மனிதனும் திரும்ப ஆசைப்படுவான்.
ஏனெனில் அதுதான் அவனாகவே அவனை உணர்ந்து மகிழ்ந்து திரிந்த காலம். அசலாக நின்ற காலம். எவ்விதமான பூடகமும் இன்றி நிஜத்தின் அருகே நின்ற காலம் .
ஏனெனில் ..அந்தக் காலம் தான் அவன்.
அப்படி நான் எனது கடந்த காலத்திற்குள் என்னை கடத்தி போகச் செல்ல விரும்பும் போதெல்லாம் எதிரே துருவன் நிற்பான்.
நான் எவ்வாறெல்லாம் இருந்தேனோ ,திரிந்தேனோ உணர்ந்தேனோ,. அதேபோல அதே லயத்தோடு..அதே தாளகதியில் அவனும் திரிகிறான்.
இந்த அலைவரிசை ஓர்மைதான் அவனுக்குள் என்னையும்.. எனக்குள் அவனையும் …ஒருங்கே பொருத்தி வைத்தது.
என் இளமைக்கால பெரும் கிளர்ச்சியின் நிகழ் வடிவம் அவன். எனவேதான் அவன் எப்போதும் என் இதயத்திற்கு அருகில் இருக்கின்ற இனிப்பாகிறான்.
எதிலும் கிளர்ச்சியின் உச்சம் தேடுகிற ஆகப்பெரும் கலகக்காரனாக தன்னை வடிவமைத்துக் கொள்வதில் அவன் ஒரு தேர்ந்த இசைஞன்.
யாராலும் நினைத்தே பார்க்க முடியாத வடிவங்களில் தன்னை தகவமைத்து ஒழுங்கமைத்துக் கொண்டே வருகிறான்.
எந்த உச்சத்தையும் ஒரு நொடியில் இழக்க துணிவான்.. அடுத்த நொடியில் அதைத் தாண்டி பறக்க முயல்வான்..
பறந்தும் விடுவான்.
பல சிகரங்களின் நுனி தொட.. பெரும் பசி கொண்ட ஒரு வேட்டை கழுகு போல அவன் அமைதியாக காத்திருக்கிறான்.
அந்த சிகரங்களும் இவன் சிறகுகளின் நிழல் தீண்ட சிலிர்த்து காத்திருக்கின்றன.
அந்த சில கணங்களுக்காக.. அவன் தோள் பிடித்து நிற்கின்ற நானும் காத்திருக்கிறேன்.
அவனுக்கென பிரத்தியேகமான வாழ்த்துக்கள் எதுவும் தேவையில்லை என்னிடத்திலிருந்து..
அவன் நன்றாகத்தான் இருப்பான்.
இந்த வாழ்வை வேட்கையும் ருசியும் நிரம்பிய ஒரு கள்ளாக கருதி அவன் அருந்தியே தீருவான்.
அவன் அடிக்கடி சொல்லும் ஒரு சொல்..
தட்டித் தூக்கிடணும் குருநாதா..
தட்டி தூக்குடா ..