நான் சற்று தாமதமாக சென்றுவிட்டதாக என்னை நானே நொந்துகொண்டேன் . குறித்த நேரத்தில் புறப்படுவது என்பது வாழ்நாளில் எப்போதும் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருவது குறித்து மிகப்பெரிய கவலை இருக்கிறது. அதுவும் ஒரு முக்கியமான நபரை சந்திக்கச் செல்லும்போது ஏற்படும் காலதாமதம் அந்த சந்திப்பின் விளைவுகளை எதிர்மறையாக்கி விடும் என்பதில் நான் ஆழமான நம்பிக்கைக் கொண்டிருந்தேன். அப்படித்தான் அன்றும் எனக்கு காலதாமதம் ஆகிவிட்டது. விடுதியில் நுழைந்த போது அவர் எனக்காக விடுதியின் வரவேற்பறையில் காத்திருந்தார். பார்க்க ஏதோ ஒரு சங்கீத வித்துவான் போல தோற்றம்.நெற்றியில் சந்தனக்கீற்று. என்னை பார்த்தவுடன் அவர் எழுந்து நின்றார். எனது காலதாமதத்தால் அவர் சற்று எரிச்சல் அடைந்திருப்பதாக எனக்கு தோன்றியது. மன்னித்து விடுங்கள் சற்று நேரம் ஆகிவிட்டது என்று சொல்லியவாறு நான் அவரது கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன். சட்டென அவர் புன்னகைத்து விட்டார். அதுதான் பிரபஞ்சன்.
கும்பகோணத்தில் எங்கே டிகிரி காபி கிடைக்கும் மணி செந்தில்..? என்று கேட்ட அவரது கேள்விக்கு நான் சற்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கும்பகோணம் டிகிரி காபி உலகப்புகழ் பெற்றதுதான்..ஆனால் அது எங்கு கிடைக்கும் என்று கும்பகோணத்தில் வசிக்கும் எனக்கே சற்று குழப்பமாகத்தான் இருந்தது. முடிவில் அவரை நகரின் மத்தியிலுள்ள வெங்கட்ரமணா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன். காபி ஆர்டர் செய்துவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தோம்.
காபி அருந்துவது என்பது ஏதோ தேவ அமிர்தத்தை அருந்துவதற்கு இணையான ஒரு செயல் போல பிரபஞ்சன் ரசித்து பேசிக்கொண்டிருந்தார். காபி எவ்வாறு தயாரிக்க வேண்டும்.. எந்த பதத்தில் பால் காய்ச்ச வேண்டும் .. டிக்காஷனில் கலவை எவ்வாறு இருக்க வேண்டும்..சிக்கரி எவ்வளவு சேர்க்க வேண்டும் என்றெல்லாம் அவர் விரிவாக பேசிக்கொண்டிருந்தார். ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரிடம் அவர் எழுதிய நூல்கள் பற்றி பேசலாம் என வந்திருந்த எனக்கு அவரது காபி பற்றிய உரையாடல் சற்று ஏமாற்றத்தை தந்தது. திடீரென கும்பகோணத்து எழுத்தாளர்களைப் பற்றி பேசத் தொடங்கினார். தஞ்சாவூர் காரங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க. கோவில் காபி இலக்கியம் இசை என ரசனை பூர்வமா வாழ்வதில் அவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்றாலெல்லாம் உணர்ச்சி பூர்வமாக பேசிக்கொண்டே போனார். மறைந்த எழுத்தாளர் தி ஜானகிராமன் அவர்களைப் பற்றி அவர் பேசும்போது சில எழுத்துக்கள் மூலம் ஒரு பெண்ணை நம் கண்முன்னால் உருவாக்கி பேச வைத்து விடுவதில் தி.ஜா ஒரு மாயக்காரன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
காபி வந்தது. ஒரு வீணையை வாசிக்கக்கூடிய ஒரு கலைஞன் போல அந்த காபியை அணுக அவர் தயாரானார். சூடாக வந்த அந்த காபியின் மணத்தை நுகர்ந்து சற்று சர்க்கரை போட சொன்னார். பிறகு துளித்துளியாக காபியை பருக தொடங்கினார். அது ஒரு ரசனையான பருகல். எவ்வித ஆரவாரமும் இன்றி பரபரப்புமின்றி மிகுந்த ஆர்வத்தோடு.. காபியின் இயல்பான வாசனையை நுகர்ந்தவாறு ரசித்துப் பருகிக் கொண்டிருந்தார். அந்தக் காபி அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். அருந்தி முடித்துவிட்ட பிறகு அருகில் நின்று கொண்டிருந்த சர்வரிடம் காபி போட்ட மாஸ்டர் எந்த ஊர் என விசாரிக்க தொடங்கினார். பிறகு என்னை திரும்பி பார்த்து வாங்க போகலாம் என்றார்.
எங்கள் அன்னைக்கல்லூரி விழாவிற்காக அவரை அழைத்துப் போக நான் வந்திருந்தேன். போகும் வழியெல்லாம் அவர் காவிரியை பற்றி.. அதன் அரசியலைப் பற்றி எல்லாம் என்னோடு விவாதித்துக் கொண்டு வந்தார். எதைக் கேட்டாலும் அவர் புதிதாக கேட்பது போன்ற ஆர்வத்தோடு கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கல்லூரிக்குள் எங்களது கார் நுழைந்தது. அதுவரை பேசி சிரித்துக்கொண்டிருந்த பிரபஞ்சன் சற்றே இறுக்கமாக மெளனமானார். இவர் வேறொரு மனிதரோ சற்று முன்பு நாம் சந்தித்தவர் இவர் இல்லையோ என்றெல்லாம் எனக்கு சந்தேகமாக இருந்தது. மேடையில் ஏறிய பிறகு ஒரு எழுத்தாளருக்குரிய எவ்விதமான இலக்கிய ஆடம்பர மொழிகள் இல்லாமல் நேர்த்தியாக பேசத்தொடங்கினார். சிறப்பாகப் பேசினார். தஞ்சை நிலத்தைப் பற்றி அவர் அறிந்தவற்றை வரலாற்றுக் குறிப்புகளோடு அங்கிருந்த மாணவ-மாணவியர்களுக்கு புரியக்கூடிய எளிய மொழியில் அழகாகப் பேசினார்.
கல்லூரியில் மதிய உணவு முடிந்தவுடன் நான் அவர் எனது வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். என் வீட்டின் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அவர் போய் ஆசையாய் அமர்ந்து கொண்டார். மெதுவாக ஆடிக்கொண்டே ஏதோ வாய்க்குள் முணுமுணுத்தார். அருகில் இருந்த என்னை பார்த்து ஊஞ்சலில் அமர்ந்த உடனேயே பாட்டு வருது.. ஊஞ்சலுக்கும் பாட்டுக்கும் ஏதோ முன்ஜென்ம தொடர்பு இருக்கும் போல. எனச் சொல்லி சிரித்துக் கொண்டார்.
அப்போதுதான் அவருக்கு அலைபேசி மூலம் ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசியவர் சட்டென மௌனமானார். முகம் இறுகியது. பேசி முடித்து விட்ட பிறகு மௌனமாக ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருந்தார். என்ன சார் என்ன ஆயிடுச்சு என்று நான் கேட்டேன். ஒண்ணும் பெருசா இல்ல மணி செந்தில் ..வீட்டில் திருட்டு போயிடிச்சி என்று கவலை தோய்ந்த குரலில் சொன்னார். நான் உடனே சென்னையில் இருந்த என் வழக்கறிஞர்கள் நண்பர்களுக்கு தொடர்புகொண்டு, அவரின் வீடு அமைந்திருந்த ராயப்பேட்டை காவல் நிலையத்தின் எண்ணைப் பெற்று காவல் ஆய்வாளரிடம் பேசினேன். அவரும் அந்த நேரத்தில் திருட்டு நடந்த பிரபஞ்சன் வீட்டில்தான் இருப்பதாகவும், விசாரித்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்.வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துவிட்டு தன்னிடம் தகவல் தெரிவித்ததாக அந்த காவல் ஆய்வாளர் தெரிவித்தார். எதுவும் பெரிதாக திருடு போய் விடவில்லை என்றும் அவர் கூறினார். இந்த உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த பிரபஞ்சன் என்னுடைய ரேடியோ இருக்கிறதா என்பதைப் பார்க்கச் சொல்லுங்கள் எனக் கூறினார். காவல் ஆய்வாளரும் தேடிப் பார்த்துவிட்டு ரேடியோ உள்ளிட்ட சில பொருட்கள் திருடு போய் இருப்பதாக சொன்னார். பிரபஞ்சன் அமைதியாக இருந்தார். அதுதான் என்னுடைய மிகப்பெரிய சந்தோஷம். அதையும் திருடன் தூக்கி கொண்டு போய் விட்டானே என நொந்து கொண்டார்.
இது என் வீட்டில் இருந்த எல்லோருக்கும் மிகவும் வருத்தமாக ஆகிவிட்டது. நம் வீட்டிற்கு வந்த நேரத்திலா அவர் வீட்டில் திருடு போக வேண்டும்.. என்றெல்லாம் அனைவரும் வருத்தப்பட்டோம். இதை நுட்பமாக உணர்ந்துகொண்ட பிரபஞ்சன் அந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற என் அம்மாவிடம் ஒரு காபி போட்டு தருமாறு கேட்டுக்கொண்டார். சூடாக காபி வந்தது. வழக்கமான அதே ரசனையோடு பருகியவாறே என்னிடம் இலக்கியத்தைப் பற்றி தீவிரமாக உரையாட தொடங்கினார்.
அவருடைய வானம் வசப்படும் நாவலை நான் படித்திருந்தேன். புதுச்சேரியில் பிரெஞ்சு அதிகாரிகளிடம் துபாஷாக,மொழிப்பெயர்ப்பாளரா
திருட்டு நடந்த ஒரு வீட்டின் உரிமையாளர் அதை மறந்துவிட்டு எதிரே அமர்ந்திருக்கிற எளிமையான வாசகன் ஒருவனோடு இலக்கிய உரையாடலில் ஈடுபடுவது என்பதெல்லாம் இதுவரை எனக்கெல்லாம் புலப்படாத பிரபஞ்சனின் பிரபஞ்ச ரகசியம்.
அதற்குப் பிறகு ஒரு இரண்டு மணி நேரம் என்னோடு இலக்கியம், இசை ,எழுத்து, எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை ப்ரகாஷ் ..என அனைத்தையும் பேசிவிட்டு மிகுந்த மகிழ்ச்சியோடு கிளம்பிச் சென்றார்.
கிளம்பும்போது ஊஞ்சலை எப்போதும் கழற்றி விடாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார். தான் மீண்டும் வருவதாகவும் அப்போது அந்த ஊஞ்சல் இருக்க வேண்டும் எனவும் உரிமையோடு கேட்டுக்கொண்டார்.அவர் வீடு திருடு போனது குறித்து ஏதேனும் சட்ட உதவிகள் தேவைப்பட்டால் நான் உதவுவதாக சொன்னபோது.. ஒரு எழுத்தாளன் வீட்டில் திருட புத்தகங்களும், இசையும் தவிர வேறு என்ன இருக்க போகிறது.. கண்டிப்பாக திருடன் ஏமாந்து இருப்பான்.. பாவம் அவன் என சிரித்துக்கொண்டே கிளம்பிச் சென்றார்.
இன்று அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தபோது மனது ஒரு மாதிரியாக கனக்கத் தொடங்கியது. நான் என் வீட்டின் கூடத்திற்கு வந்தேன். அங்கே இருந்த ஜன்னலை எல்லாம் திறந்து வைத்துவிட்டு… அசைவில்லாமல் தனித்திருந்த அந்த ஊஞ்சலை மௌனமாக பார்த்துக் கொண்டே இருந்தேன்.
அந்த ஊஞ்சலை என்றும் கழட்டக் கூடாது.இன்று காற்றில் கலந்த பிரபஞ்சன்.. அந்த ஊஞ்சலில் ஆடுவதற்காக என் இல்லத்திற்கு என்றாவது ஒரு நாள் வரக்கூடும் என எண்ணிக் கொண்டேன்.
பிரபஞ்சனும் அப்படிப்பட்டவர்தான். காற்றாக மாறினாலும் ஊஞ்சல் ஆடவும்.. காபி குடிக்கவும்.. கும்பகோணம் வந்தாலும் வந்துவிடுவார் என நினைத்துக் கொண்டிருக்கும்போதே காற்று மென்மையாக வீசியது.
ஊஞ்சல் மெல்ல அசையத் தொடங்கி இருந்தது.