மதிப்பிற்குரிய ஐயா சுப உதயகுமார் அவர்களின் பதிவை பார்த்தேன்.
அது அவருடைய கருத்து என்ற வகையில் கண்டுகொள்ளாமல் கடந்துவிட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனாலும் எங்களை நோக்கிய குறிப்பிட்ட வகை முரண்களோடு நுட்ப விமர்சனங்களை முன்வைத்து இருப்பதால் பதில் சொல்ல வேண்டியதாகி விடுகிறது.
முதலில் அவர் திமுக-காங்கிரசு கூட்டணி வேட்பாளர் கனிமொழிக்கு வாக்கு கேட்பது அவருடைய விருப்பம். அவருடைய சொந்த விருப்பத்தை எங்கள் மீதான வன்ம விமர்சனங்களோடு நியாயப்படுத்த விரும்புவதில்தான் எங்களுக்கு சிக்கல்.
உதயகுமார் போன்ற மக்கள் நலனுக்காக போராடியவர்கள் திமுக போன்ற காங்கிரஸ் போன்ற மக்கள் நலன் எதிர்ப்பு அமைப்புகளுக்கு திடீரென(?) வாக்குக் கேட்க துணியும் போது ஏற்படும் தடுமாற்றங்களே எங்கள் மீதான விமர்சனமாக மாறுகிறது என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.
முதலில் புலிகளோடு எங்களை ஒப்பிட்டு பேசியதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலைப் புலிகள் மக்களுக்காக ஆயுதம் தரித்து ஈழமண்ணில் உயிரை கொடையாகக் கொடுத்து போராடிக் கொண்டிருந்த சம காலத்தில் பல்வேறு இயக்கங்கள் அவர்களோடு களத்தில் நின்றாலும், புலிகள் மட்டுமே சமரசமில்லாமல் இறுதிவரை போராடியவர்கள். அந்த வகையில் அரசியல் ரீதியான எந்தவித சமரசத்திற்கும் நாங்கள் ஆட்பட விரும்பாத காரணங்கள் கூட எங்களது அரசியல் முன்னுதாரணங்களாக நாங்கள் கொள்கிற விடுதலைப்புலிகளை முன்னத்தி ஏராக கொண்டு அமைகிறது. இந்த சமரசமற்றத்தன்மை கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கிற மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை எல்லாம் விருப்ப வேட்பாளராக ஆதரிக்கிற சு.ப.உதயகுமாருக்கு தர்மச்சங்கடமாக இருக்கக்கூடும் என்பது எங்களுக்கு புரியாமலில்லை. ஆனாலும் அதை நியாயப்படுத்த துணிகிற உதயகுமார் எங்கள் மீது எதற்காக கல்லெறிய வேண்டும்.. எனவேதான் அவரது பதிவிற்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் நாங்கள்.
ஐயா உதய குமார் அவர்களே..
அரசியலில் எவரும் தனிநபர் இல்லை. தனி நபர் மீது தனிப்பட்ட விருப்பம் கொள்ள அரசியல் ஒன்றும் தனிநபர்கள் சார்ந்து இயங்குகிற அமைப்பு இல்லை. தனிநபர்கள் உள்ளடக்கிய ஒரு அமைப்பின் செயல்பாடுகளில் தனிநபர்களுக்கு பங்கு இருக்கிறது.அந்தப் பங்கினை அந்த தனிநபர்கள் மறுக்கும் பட்சத்தில்.. அரசியலில் அவர்களுக்கு இடமில்லை. திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்கும் தாங்கள் தனிநபர் விருப்பம் என சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த தப்பித்துப் பிழைக்கும் செயலை விட… நேரடியாக ஆதரித்து விட்டுப் போவது மேலானது.
மற்றபடி அன்பான சர்வாதிகாரம் என்பது சக தோழமை இயக்கங்களின் மீது நாங்கள் செலுத்துகிற விவகாரம் அல்ல. அது எங்களது ஆட்சி முறைமையில் செலுத்த விரும்புகிற மக்கள் நலன் சார்ந்த யுக்தி. மற்ற எந்த அமைப்பினையும் அழித்து நாங்கள் எழவில்லை. நாங்கள் எழுவது தமிழகத்தின் ஈடு இணையற்ற கேடுகளாக விளங்குகின்ற திராவிட-தேசிய கட்சிகளின் வீழ்ச்சியில் என்பது தங்களுக்கு நன்கு புரியும்.
தங்களுக்கு இருக்கின்ற பிரச்சனை புரிகிறது. திருமணமான மறு நாள் இடிந்தகரை போராட்டத்திற்கு வருகை தந்து அங்குள்ள மக்களிடம் வாழ்த்தினை கோரி நின்ற சீமான் தங்களுக்கு விருப்பம் இல்லாதவராக ஆன பின்னர் கனிமொழி விருப்பமுடையவராக மாறத்தானே செய்வார்..
நாடு முழுக்க இடிந்தகரை கூடங்குளம் அணு உலைக்காக போராடி வழக்குகள் பெற்று கைதான நாம் தமிழர் கட்சி உங்களுக்கு விருப்பம் இல்லாத அமைப்பாக இருப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. நீங்கள் ஆதரிக்கின்ற வேட்பாளர்கள் சார்ந்த திமுக காங்கிரஸ் மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் எத்தனை இடங்களில் இடிந்தகரை காக போராடி நின்றன என்பதைப் பற்றி இப்போதைக்கு சிந்திக்க முடியாத “உயரத்தில்”(?) தாங்கள் இருக்கிறீர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.
திமுக காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அணு உலைக்கு ஆதரவான கட்சிகளின் வேட்பாளர்கள் உங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களாக மாறி விட்ட பின்னர் அந்த இடத்தில் எங்களையும் பொருத்திக் கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. இந்த மக்களை சுரண்டுவதில் மற்ற எல்லா குழுமங்களையும் விட முன்னால் நிற்பது தங்கள் விருப்பத்திற்குரிய வேட்பாளர் கனிமொழி சார்ந்திருக்கிற திமுக குழுமம் தான். அங்கே நின்று ஆதரித்துக் கொண்டு எங்களுக்கான காரணத்தை தேடுவதென்பது அர்த்தமற்றது.
எங்களை சாதி மத அடையாள அரசியலுக்குள் தந்திரமாக தாங்கள் அடைக்க விரும்புவது தங்களின் புது நண்பர்களுக்கு தாங்கள் செய்யும் மறு பயனாக இருந்துவிட்டுப் போகட்டும்.
நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம் மிக எளிதானவை. தேர்தலுக்காக அல்லது சில காரணங்களுக்காக அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்று சொல்லிக்கொண்டு நிலைப்பாடுகள் மாற்றிக் கொள்கிற பிழைப்புவாத அரசியல் கட்சி தன்மைகளுக்கு தங்களையும் பொருத்திக் கொண்டு விட்டீர்கள் என்கிற நிலையில்.. உங்களை நீங்களே நியாயப்படுத்தி கொள்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எங்கள் மீது கல்லெறியும் உங்களது மறு பயன் யுக்திகளுக்காக மட்டுமே நாங்கள் எதிர்வினை செய்ய விரும்புகிறோம்.
திமுக காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற முதலாளித்துவ பொருளியல் அமைப்புகளின் வெற்றியே தங்களைப் போன்றவர்களை தன் வயப்படுத்தி.. சமரசங்களுக்கு ஆட்படுத்தி வீழ்த்தி முடிப்பது தான்.
அந்த வகையில் வீழ்ந்து விட்டீர்கள். அந்த இடிந்தகரை கடற்கரையில் காவல்துறையிடம் உதிரம் சிந்திய அந்த எளிய பெண்களின் மனசாட்சியிடம் தற்போது தோற்று இறந்திருக்கிற தங்களின் நம்பகத்தன்மையை ஒரு போதும் இனி உயிர்ப்பிக்க முடியாது என்கின்ற நிலைமைதான் உங்களின் வீழ்ச்சியாக நான் கருதுகிறேன்.
மீண்டும் உயிர்பிக்கவே முடியாத நம்பகத் தன்மையையும், மனசாட்சியையும் இழந்து விட்ட நீங்கள்..
இனி யாரை ஆதரித்தால் என்ன.. எதிர்த்தால் எங்களுக்கு என்ன..???
ஆனால் இறுதியாக தோன்றுவது இதுதான்..
அனைத்தையும் சரியாக அடையாளம் காட்டி விடுகிற காலம்தான் எவ்வளவு உயர்ந்தது..???
மணி செந்தில்.
(மேலே இடிந்தகரை என்ற ஊரில்.. திருமணமான மறுநாள் சீமான் என்ற மனிதன் தனது மனைவியோடு சென்று அங்கு போராடிக்கொண்டிருந்த மக்களின் வாழ்த்துக்களை கோரி நின்று பெற்ற காட்சி..)