ஒரு காலத்தில் காதுகளே இல்லாத மனிதர்கள் இருந்தார்கள்.

காதுகளே இல்லாத மனித வாழ்க்கையில் சொற்களுக்கோ உணர்ச்சிகளுக்கோ இடமில்லை.

அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும் இல்லை. அப்படிப் பேசிக் கொண்டால் கூட அவைகளுக்கு பொருளும் இல்லை.

சரி.. காதுகள் இல்லாதது தான் பிரச்சனை. காதுகளைப் பொருத்துவோம். இனியாவது மனித வாழ்க்கையில் ஏதேனும் அர்த்தங்கள் தென்படுகிறதா என்பதை பார்ப்போம் என கடவுள் சிந்தித்து மனிதர்களுக்கு காதுகளை பொருத்தினான்.

அப்போதும் அவர்கள் அவ்வாறே இருந்தார்கள். அர்த்தம் இல்லாததைப் பேசிக்கொண்டு எவ்வித உயிர்ப்பும் இல்லாத ஓசைகளை கேட்டுக்கொண்டும் வேரற்ற பெருமரம் போல அவர்கள் எவ்வித பிடிப்புமற்று இருந்தார்கள்.

இதைக் கண்ட கடவுள் மீண்டும் சிந்தித்தான்.

எவ்வித உணர்ச்சியும் இல்லாத சாரமற்ற மானுட வாழ்க்கையை கண்ட கடவுள் அர்த்தமுள்ளத்தாக்க சிந்தித்தான்.

இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான்.

பிறகு தானே ஒரு மனிதனாக இந்த மண்ணில் பிறந்தான்.

தனக்கு இளையராஜா எனப் பெயர் சூட்டிக் கொண்டு..

அவனே அர்த்தமற்று திரிந்த சொற்களுக்கு சிறகுகள் முளைக்க வைத்தான். காதுகளில் பூ உரசும் உணர்வினை மனிதர்கள் அடையத் தொடங்கினார்கள்.

அந்த அதிமனிதன்..

விசித்திரமான ஒலிக்கலவை மூலம்
மனிதனை அமைதிப் படுத்த தொடங்கினான்.

பல்வேறு ஓசைகளுக்கு
உயிரூட்டி உணர்ச்சிகளை உட்புகுத்தினான்.

காதுகளில் அருவிகள் பொழிந்தன.

வெவ்வேறு இசைக்கருவிகளின் விசித்திர கலவையில் பொங்கி எழுந்த இசைப் பிரவாகம் அதுவரை இல்லாத மானுட உணர்ச்சிகளை உண்டாக்கியது.

எங்கிருந்தோ கசியும் அந்த இசை துளியில் மனிதனின் கண்கள் கலங்க தொடங்கின. மனிதர்கள் அழுதார்கள்.
மென்மையாக சிரிக்க பழகினார்கள்.
தனிமையில் சிந்தித்தார்கள். காதலித்தார்கள். கலவி கொண்டார்கள்.
குழந்தைகள் தூங்கினார்கள். காதலில் தோல்வியுற்று அமைதியற்று அலைந்த மனங்கள் சிறு அழுகையுடன் சாந்தமாயின. பிரிவு மகிழ்ச்சி துக்கம் காதல் காமம் துரோகம் என பல்வேறு உணர்ச்சிகள் அந்த அதி மனிதனின் வெவ்வேறு இசையாழங்களால் உணரப்பட்டது. தாய் மண்ணை விட்டு பிரிந்து விதியின் சூட்சம கோடுகளால் உலகப் பரப்பில் ஆங்காங்கே துப்பப்பட்ட ஒரு இனத்தின் மனிதர்கள் அந்த குரலை கேட்கும் போதெல்லாம் தன் தாயின் கருவறைக்கு திரும்புவது போல ஆறுதல் கொண்டார்கள்.

தொலைதூரப் பாலையில் கொளுத்தும் வெயிலில்.. பிழைப்பின் நிமித்தமாய் அசைவற்று அமர்ந்திருக்கும் போது.. காதுகளில் நுழையும் அந்த அந்த தேவமனிதனின் இசை ஒரே நொடிக்குள் தன் சொந்த ஊரின் ஏரிக்கரை காற்றையும் அத்தை மகளின் வாசனையையும் தாய் மண்ணின் ஈரத்தையும் கொண்டு வந்து தன் ஆன்மாவிற்குள் சேர்த்ததை கண்டு அவர்கள் அதிசயித்தார்கள்.

அது கட்டிடக் காடாக இருந்தால் என்ன.. கட்டாந்தரையாக இருந்தால் என்ன.. உயர்ந்து நிற்கும் அரண்மனையாக இருந்தால் என்ன.. சுட்டெரிக்கும் சுடுகாடாக இருந்தால் என்ன.. பேதமற்று அந்த இசைத்துணுக்குகள் காற்றில் கலந்து பரவின.

அந்த மானுடர்கள் முதன்முதலாக வெறும் ஒலிகளால் பசியாற அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.

தனித்தே பிறந்த மனிதர்கள் உயிர் உருகும் அந்த இசையை பெரும் துணையாக அடைந்தார்கள். தனியே வாழவும் தனியே நடக்கவும் இரவுகளில் தனியே படுக்கவும் காற்றில் மிதந்து வந்த அந்த இசைத் துளிகளால் அவர்களுக்கு சாத்தியமானது.

எல்லா இரவுகளிலும் இருட்டு இருந்தது. கூடவே இளையராஜாவும் இருந்தார்.

எனவே வெளிச்சமும் இருந்தது.

இறுதியாக மனிதன்..

அந்த கடவுளின் உன்னத இசையை தனது சுவாச காற்றாக மாற்றும் வித்தையை அவனாகவே கண்டறிந்தான் .

இவ்வாறாகவே இவ்வுலகில் மானுட ஜீவிதம் இந்த நொடி வரை மகத்தானதாக
இருந்து வருகிறது.

கடவுளின் கருணைக்கு இன்று பிறந்தநாள்.