வைகோவிற்கு அன்றைய திமுக அரசு தொடுத்த தேசத்துரோக வழக்கு மீது இன்று ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கிற தண்டனையை நாம் நினைக்கும் போது சில காட்சிகள் நம் மனதிலே எழுகின்றன.

வைகோ மீது தொடுக்கப்பட்ட வழக்கு போல.. அன்றைய இனத்துரோக திமுக ஆட்சியில் பல அநியாய வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இனப்படுகொலையில் சிக்கி அழிந்து கொண்டிருக்கும் ஈழத்திற்கு ஆதரவாக ஒரு சிறிய ஆதரவும் இந்த மண்ணில் எழுந்து விடக்கூடாது என்பதில் அன்றைய திமுக அரசு மிகுந்த கவனத்தோடு இருந்தது.

இனப்படுகொலை காட்சிகளை குறுந்தகடுகளாக தயாரித்துக்கொண்டு மக்களிடையே பரப்பி போராட்ட உணர்வினை உண்டாக்க முயன்ற எண்ணற்ற இளைஞர்கள் காவல்துறை மற்றும் உளவுத் துறை அதிகாரிகளால் கொடுமையாக மிரட்டப்பட்டு பொய் வழக்குகள் போடப்பட்டு முடக்கப்பட்டார்கள்.

அந்த அழிவு நேரத்தில்.. போரில் சிக்கி கொண்டு காயம் பட்டுக் கொண்டிருந்த தமிழர்களுக்கு இங்கிருந்து குருதி சேகரிக்கப்பட்டு உதிர பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட இருந்த வேளையில்.. அவை அனைத்தும் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டு அப்போது காவல்துறை டிஜிபியாக இருந்த ஜாபர் சேட்டின் ஷீ கால்களால் மிதித்து அழிக்கப்பட்டது.

சட்டமன்றத்தில் இனி ஈழத்திற்கு ஆதரவாக யாரும் பேசவோ போராடுவோ கூடாது என அப்போதைய அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

கொளத்தூர் மணி, ஐயா பெ மணியரசன், அண்ணன் சீமான் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் மீது தொடர்ச்சியான பல வழக்குகள். பல மாதங்கள் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஈழ இன அழிப்பிற்கு எதிராக முத்துக்குமார் உள்ளிட்ட பல இளைஞர்கள் தங்களைத் தாங்களே தீ வைத்துக்கொண்டு தியாகம் செய்ய… அவர்களின் மரணத்தை காதல் தோல்வி, கடன் பிரச்சனை என்றெல்லாம் திசைமாற்றி அன்றைய அரசின் உளவுத்துறை கடுமையாக இழிவுபடுத்தியது.

போர்ச்சூழல் எவ்விதமான செய்தியும் இங்கே வந்து விடக் கூடாது என்று ஊடகங்கள் செய்தித்தாள்களுக்கு அறிவிக்கப்படாத நெருக்கடி கால தடைகள் விதிக்கப்பட்டன.

கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட கிளம்பியபோது ஒட்டுமொத்தமாக கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து கல்லூரி விடுதிகளை இழுத்து மூடி மாணவர்களின் போராட்டத்தை திமுக அரசு நசுக்கியது.

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட கிளம்பியபோது உயர்நீதிமன்றத்தில் தன் காவல்துறையை வைத்து வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் அடித்துத் துவைத்து… அதுவரை இனப்படுகொலைக்காக போராடிக்கொண்டிருந்த வழக்கறிஞர்களை.. தங்களுக்காக போராட வைத்து திசை மாற்றியது திமுக அரசு.

திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் ஈழப் பிரச்சனை எல்லாம் இங்கே ஒரு பிரச்சனையே அல்ல என தொடர்ச்சியாக பேசி வந்தனர்.

மல்லாக்கப் படுத்துக் கொண்டு முதுகில் ஆப்பரேஷன், காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையே நடந்த சாகும்வரை உண்ணாவிரதம், நானே ஒரு அடிமை என்பதான பம்மல்கள், அய்யகோ போன்ற நீலிக்கண்ணீர் தீர்மானங்கள், குப்பைத் தொட்டிக்கு தான் போகப் போகிறது என உறுதி செய்துகொண்டு எழுதப்பட்ட போலி கடிதங்கள், மக்களை ஏமாற்ற மனித சங்கிலி போராட்டங்கள் என சொக்கத்தங்கம் சோனியா விற்காக அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி அந்த நேரத்தில் நடத்திய போலி நாடகங்கள் எண்ணற்றவை.

ஈழ இனப்படுகொலை சம்பந்தமாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியை யாராலும் சந்தித்து உரையாட முடியாது. சந்தித்துவிட்டு வரும் பல அல்லக்கைகள் தலைவர் வருத்தத்தில் இருக்கிறார், தலைவர் குப்புறப் படுத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார் என்பதான பொய்மூட்டைகளை அழித்துவிடும். பிறகு தனியே பேசும்போது இவரைப் போன்ற மனிதனை நான் பார்த்ததே இல்லை என்றெல்லாம் உணர்வாளர்கள் மத்தியில் நடித்து அழும்.

அதை நம்புவதா இதை நம்புவதா என்று தெரியாமல் நாமெல்லாம் குழம்பிக் கிடப்போம்

போர் முடிந்த பிறகு மருத்துவ சிகிச்சைக்காக வயதான பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இங்கே சென்னை விமான நிலையம் வந்தபோது அவரை தரை இறக்காமல் அப்படியே திருப்பி அனுப்புவதில் திமுகவும் காங்கிரசும் மிகக் குறியாக இருந்து நோக்கத்தில் வெற்றி பெற்றன.

அந்த நேரத்தில் வைகோ உரையாற்றிய பேச்சு இதோ

ஆனால் காலம் தான் இருப்பதிலேயே பொல்லாத மிருகம். அதன் வெறிபிடித்த ஓட்டத்தில் சில படிப்பினைகளை மிக எளிதாக நமக்குத் தந்து விடுகிறது.

அதே வைகோ இன்று காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று சபதம் எடுத்து களத்தில் நிற்கிறார்.

அவரைப்போல அன்று எங்களுடன் இருந்த பலர் திசை மாறி இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு தலைமுறை இளைஞர்கள் இதையெல்லாம் மறக்காமல் அப்படியே அடி மனதிற்குள் புதைத்து வைத்து இருக்கிறோம். முத்துக்குமாரின் மூச்சுக்காற்றை இதுவரை வீசும் காற்றின் அலைவரிசையோடு கலந்துவிடாமல் காத்து வைத்திருக்கிறோம்.

ஈழ மண்ணில் அந்த காலகட்டத்தில் சிந்தப்பட்ட ஒவ்வொரு உதிரத்துளிக்கும் கண்ணீர் துளிக்கும் எங்கள் இடத்திலே கணக்கு உண்டு. காயம்பட்டு எழும்பிய கூக்குரல்களும்.. வன்புணர்வு கண்டு எங்கள் சகோதரிகள் கத்தித்தீர்த்த கதறல்களும், எங்கள் மகன் பாலச்சந்திரன் பார்த்த அந்த ஒற்றைப் பார்வையும்.. எங்களுக்குள் உறைந்துவிடாமல் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது.

அந்த நேரத்தில் நான் எல்லாம் பல அண்ணன்களின் விரல் பிடித்து நடந்திருக்கிறேன். அந்த அண்ணன்மார்கள் பேசுகின்ற மொழிகளை தேவ வாக்கு எனக்கருதி நம்பி திரிந்திருக்கிறேன். அவர்களை எம் இனம் காக்க மொழி காக்க வந்த கடவுளர்களாகவே கருதி வழிபட்டு இருக்கிறேன்.

என்னைப் போல.. எங்களைப்போல.. எங்களோடு இன்னொருவரும் நம்பித் திரிந்தார். அவர் அண்ணன் சீமான்.

நாங்கள் நம்பவே முடியாத ஒரு தருணத்தில்.. நாங்கள் நம்பி நின்ற அண்ணன்மார்கள் எல்லாம்.. காலம் வரைந்த இந்த சிக்கலான கணக்குகளுக்கு முன்னால் அம்பலப்பட்டு நிற்கும்போது..
அவர்களை உண்மையாகவே ஒரு காலத்தில் நேசித்த எங்களது இதயத்திற்கு வலிக்கத்தான் செய்கிறது.

ஈழ விடுதலையே தங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்றெல்லாம் எங்கள் இளம் தோள்களை பிடித்து உணர்ச்சி உசுப்பேற்றிய பல அண்ணன்மார்கள் திமுகவிற்கு ஓட்டு கேட்டுக் கொண்டும் காங்கிரஸுக்கு வாக்கு கேட்டுக் கொண்டும் இன்று நிற்பதை எல்லாம் பார்க்கும்போது..

சே…
காலம்தான்
இருப்பதிலேயே பொல்லாத மிருகம்.

அதன் வெறிபிடித்த ஓட்டத்தில்
எதையும் மறக்காமல்
நாம் நினைவோடு
எதையும் மறக்காமல் இருப்பதுதான்
நாம் அடைந்த மகத்தான துயரம்.

மணி செந்தில்.