நீங்கள் என்ன வேண்டுமானாலும் அவனை விமர்சித்து விட்டு போங்கள்.

ஆனால் அவன் அவனாகவே இருக்கிறான்.

அலை பாய்ந்து வரும் அவதூறுகளுக்கு அவனுடைய பதில் செயல்.

விஷம் தோய்ந்த அம்புகள் என எய்யப்படுகிற பொய்களுக்கு அவனுடைய பதில் உண்மை.

ஒதுக்கி வைத்து ஓரம் கட்டப்பட்டு
வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிற
சதிகளுக்கு அவனுடைய பதில்
அலட்சிய எக்காளத்துடன் கூடிய
சிறு புன்னகை.

காலம் காலமாய் கட்டி வைத்திருக்கிற
புராதன பழமை பஞ்சாங்கங்களுக்கு
நெருப்பு வைத்து விட்டு புத்துலகம்
படைக்க அவன் அடுத்த மேடையை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறான்.

நெருப்பு சொற்களால் ஆன ஒரு கனவினை இளைய கரங்களின்
உள்ளங்கைகளுக்குள் புதைக்கிற கடமையில்.. அவன் வேர்வை சிந்தி
விரைந்து கொண்டிருக்கிறான்.

இதுவரை வரையப்பட்ட அனைத்து விதமான அவல தத்துவ கோடுகளை
அழித்துவிட்டு.. இயற்கையின் தாய்மடியில் கதகதப்பாய் வாழ
கனவுலகம் ஒன்றினை கட்டிக் கொண்டிருக்கிறான்.

சிட்டுக்குருவி களுக்காக சிந்திக்கிறான்.
சிங்கம் புலிகளுக்காக கதறுகிறான்.
யானை பூனைகளுக்காக யாசிக்கிறான்.
மொத்தத்தில் மானுடம் வாழ இந்த பூமியை தன் உயிரென நேசிக்கிறான்.

சாதிகளால் வரலாற்றின் வீதிகளில்
சரிந்து கிடப்போர் தோள் பிடித்து
எழுப்புகிறான்.

இது சரியல்ல. சதி என்று சரித்திரங்களால் தரித்திரங்கள் ஆனவர்களுக்கு சாட்டைகள் அளிக்கிறான்.

எதிரிகளால் கட்டமைக்கப்பட்ட எந்த கணக்குகளுக்குள்ளும் சிக்காமல்
அவர்களது கணிப்பினை பொய்யாக்கி
ஏமாற்ற சாலையின் புழுதியாக்கி
பறக்க விடுகிறான்.

நீரைப் போலவன். நீங்கள் நிரப்பும் பாத்திரங்களின் வடிவை உடுத்திக் கொண்டது
போலத் தெரிந்தாலும்..

சட்டென உங்களது கண்ணாடி கணிப்புகள் விரிசலடையும் ஒரு தருணத்தில்.. அவன் உடைந்து
பெருகி கடலின்
சாயல் கொண்டு விடுகிறான்.

எளிய ஆன்மாக்களின் தாகத்தை தணிக்கிறான். வலிய அதிகாரத்தின்
ஆதிக்க கோட்டைகளை ஆழிப் பேரலையாய் மாறி மூழ்கடிக்கிறான்.

ஒன்றில் தீர்மானமாய் நிற்கிறான்.

எங்கெங்கெல்லாம்
மனிதர்கள் தாழ்த்தப்பட்டு
வீழ்த்தப்பட்டு அடைபட்டுக்
கிடக்கிறார்களோ..

அவர்களோடு ஒருவராக தோள் சேர்த்து நிற்க.. அவன் தீர்மானமாய் நிற்கிறான்.

ஏனெனில்..

அவர்களில் தான் அவன் பிறந்தான். அந்த இயல்பிலேயே திரிந்தான்.

அதனை அரசியல் விருப்பங்களுக்காக அடகு வைப்பதில்லை அவன்.

அதிகார ஆசைகளுக்காக பிறந்தது முதல் அடைந்து வந்திருக்கிற இழிவுகளை மறந்துவிட்டு.. கிடைக்கிற இருக்கை களுக்காக வாக்குப் பருக்கைகள் பொறுக்குகிற.. சாதாரணன் அல்லன் அவன்.

அவன் அப்படித்தான்.

எதனிலும் தன்னியல்பு மாறாமல்..
அவன் அவனாகவே இருப்பதால்தான் அவன் அவருடைய தம்பி.

மணி செந்தில்.