இந்த யாசிப்பில்
எனக்கு எவ்வித
கூச்சமுமில்லை.

மண்டியிட்டு
தாழவும்
மருகி உருகவும்
காலடி தொழவும்
தயாராகவே
உன் முன்னால்
நிற்கிறேன்.

தயவு செய்து
போய்விடு.

இரக்கமற்ற
உன் சமாதானங்களை
நனைந்த காலணிக்குள்
நெளியும் தவளை
என உணர்கிறேன்.

காரணமற்று
கலங்கும் உன்
கண்கள்
வியர்வைப்
பொழுதுகளின்
சுடுதேநீர் போன்றவை.

பேச்சற்று நீ
இசைக்கும் மெளனம்
பாலையில்
தனித்து பதியும்
தடங்களை ஒத்தவை.

பிரிவின் மொழி
பூசி உதிரும்
வெற்றுச்
சருகுகளால்
நிரம்பி இருக்கின்றன
உன் சொற்களின்
தாழ்வாரம்.

புழுதி படர்ந்த
வீணை ஒன்றின்
அறுந்த தந்திகளை
போன்றது நம்
நினைவுகள்
என்றேன்.

கலங்கிய கண்களுடன்
நிமிர்ந்துப் பார்த்தாய்.

அந்த அறுந்த
இசை
நரம்புகளில் தான்
இன்னும்
வாசிக்கப்படாத
ராகங்கள்
உறைந்திருக்கின்றன
என்று தளர்வுடன்
சொன்னாய்.

அயர்ந்தேன்.

உன்னை
பிரிவதை விட
நேசிப்பது
இன்னும்
வலியை
தருமென்பதை
உணர்ந்த தருணம்
அது.

நீ மெலிதாய்
தோளில் சாய்ந்தாய்.

வியர்த்த
உள்ளங்கைகளை
மீண்டும்
இறுக மூடிக்கொண்டேன்.

பின்னால் இருந்த
பாதாளம் ஒருமுறை
நடுங்கி அடங்கியது.

மணி செந்தில்.