பாசமிக்க. அண்ணனுக்கு.நேசத்துடன்
சில வார்த்தைகள்..
கடந்த சில நாட்களாக மதிப்பிற்குரிய அண்ணன் எஸ்.பி உதயகுமாருக்கு.. நமது மீது ஏதோ கோபம். சரி நமது அண்ணன் தானே போகட்டும் என்று கடந்து போக பார்த்தால்..
இன்று நம்மை பாசிசம்.. கம்போடியாயிசம் என்றெல்லாம் திட்டி இருக்கிறார். அட இது என்ன திராவிட வாசனை என்று யோசிக்கும்போது..
சரி கனிமொழிக்கு ஓட்டு கேட்டவர் ஆச்சே.. சகவாச தோஷம் போல.. என்று நினைத்து விட்டு விடலாம் என்று பார்த்தால்..
ஏன் நாம் தமிழர் மீது அவ்வளவு காண்டு.. சவுண்ட் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே … என்று யோசித்துப் பார்த்தால்..
அண்ணனின் வரலாறு அப்படி.
இதே நம் அண்ணன் தான் இன்று காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு ஆதரவாக செயல்படும் இந்துத்துவ ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கொண்டு தொப்பி போட்டுக் கொண்டு எல்லாம் திரிந்தார். தொப்பி பொருந்தவில்லை. பிறகு வெளியே வந்து பச்சைத் தமிழ் தேசியம் என்ற புத்தகத்தை எழுதினார். அதே பெயரில் புதுக் கட்சி எல்லாம் தொடங்கினார். பிறகு அண்ணன் சட்டமன்ற தேர்தலில் தனியே தனித்து நின்றார். சில நாட்கள் முகவரியை தேடும் அளவிற்கு முடங்கிப் போனார். பிறகு திடீரென வந்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிறகு தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை ஆதரித்து வாக்குகள் கேட்டார்.
ஆனால் இவை எதையுமே நாம் கேள்வி கேட்டதில்லை. அண்ணன் சீமானோ,நாம் தமிழர் கட்சியினரோ இது குறித்து எதுவும் எழுதியதில்லை . விமர்சிக்க வில்லை. அது அவரது விருப்பம். அவர் தலை. அவர் தொப்பி.தொப்பி தன் தலையில் சரியாக பொருந்துகிறதா இல்லையா என்பதை அவர்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். அது பற்றி நாம் கேள்வி கேட்க என்ன இருக்கிறது..??
அதேபோல நாங்கள் எங்கே நிற்க வேண்டும் என்பது நாங்கள் முடிவு செய்ய வேண்டும். என்றாவது நாங்கள் அண்ணன் உதயகுமாரோடு நிற்க போகிறோம் என்று அறிவித்திருக்கிறோமா.. எந்த கட்சியாவது அழைத்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள், கூட்டணி வையுங்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறோமா..
தனித்து நிற்பது என்பது எங்கள் அமைப்பின் தொடக்கத்திலேயே நாங்கள் இறுதியாக உறுதியாக எடுத்த முடிவு. ஏனெனில் எங்களுக்கு முன்னவர்களாக இருந்தவர்களின் வரலாற்றுப் பிழைகளை பார்த்து வலி தாங்கமுடியாமல் பிறந்தவர்கள் நாங்கள்.
மீண்டும் அதே பிழையை இனி ஒரு போதும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்ற புலிக் கூட்டம் இது.
சரி. அதனால் அண்ணன் உதயகுமாருக்கு என்ன பிரச்சனை என்று பார்த்தால்… அவர் செய்யப் போகின்ற அரசியல் முயற்சிகளுக்கு நம்மை அழைக்க மாட்டாராம்.
மிகவும் நன்றி. அதற்கு ஏன் திட்டுகின்றீர்கள்.
முதலில் அண்ணன் அணு உலை போராட்டம் மூலமாகத்தான் அறிமுகம். அணுவுலை போராட்டம் தாண்டி அண்ணன் உதயகுமார் உக்கிரமாக பங்கேற்ற இதர போராட்டங்களின் விவரங்கள் .. ஏதேனும் இருந்தால் எவரேனும் சொல்லுங்கள். 10 பேரில் அண்ணனும் ஒருவராக இருந்து போராடுகின்ற சம்பிரதாய போராட்டங்களை இந்தப் பட்டியலில் கொண்டு வந்து சங்கடப் படுத்தாதீர்கள்.
ஆனால் சீமான் அண்ணன் அப்படி அல்ல.
அணு உலை தொடங்கி ஹைட்ரோகார்பன் வரையிலான போராட்டங்களில் பங்கேற்று தமிழ்நாடு முழுக்க வழக்குகள் வாங்கி நீதிமன்ற படிகள் ஏறி கொண்டிருப்பவர். ஒவ்வொரு போராட்டத்தையும் தனித்து நடத்தியிருக்கிறார். தேவைப்படும் பட்சத்தில் பிற அமைப்புகளின் மேடைகளில் ஏறி முழங்கியிருக்கிறார்.
சாதாரண உதவி இயக்குனராக பணிபுரிந்த காலத்தில் இருந்து.. பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய மேடைகளில் ஒரு இளம் பேச்சாளனாக வளர்ந்து.. பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று.. ஈழப்போராட்டத்தின் உச்சத்தில் ஐந்து முறை நெடுநாள் சிறைபட்டு..அதில் 3 முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைபட்டு.. தானே ஒரு அமைப்பினை உருவாக்கி.. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு.. 1.1 சதவீத வாக்குகள் பெற்று.. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அது ஏறக்குறைய 4 சதவீதமாக உயர்ந்து இன்று 16 1/2 லட்சம் வாக்காளர்களை ஈர்க்கின்ற ஒரு தலைவராக வளர்வது என்பது அண்ணன் உதயகுமார் போன்றவர்களுக்கெல்லாம் நம்பிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.
என்னவோ அண்ணனுக்கு எங்களது வளர்ச்சி சங்கடமாக இருக்கிறது. திமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்க தயாராகிவிட்ட அவரது கண்களுக்கு நாங்கள் சரியாக தெரிந்தால் தான் ஆபத்து.
அத்தோடு இல்லாமல் பாசிசம், நாசிசம் என திராவிடத்தின் அதே பழைய பஞ்சாங்க கதையை அண்ணன் உதயகுமாரும் பேசுவது காலக் கொடுமையாக இருக்கிறது.
எப்போதும் அண்ணன் சீமான் உதயகுமார் போன்றவர்களை.. அவர்களது அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களைப் பற்றி பேசுவதே இல்லை. நாங்கள் யாராவது பேசினால்.. உனக்கு வேறு வேலை இல்லையா என ஏசுவார்.
உண்மையில் அண்ணன் உதயகுமாருக்கு தான் வேறு வேலை இல்லை போலும். முகநூலில் பதிவுகள் போட்டு கொண்டு..சீமான் சரியில்லை அவர் சரி இல்லை, இவர் சரியில்லை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.
எங்கள் முதுகை அவர் தேவையில்லாமல் சுரண்டுவது எங்களுக்குப் புரிகிறது. அது ஒருவகையில் எங்களுக்கு சுகமாக இருந்தாலும்.. அண்ணனின் விரல்கள் இதற்காகவா பயன்பட வேண்டும் .. என்று மனம் வருந்துகிறது.
உங்களால் முடிந்ததை செய்யுங்கள் அண்ணே..
சுழித்துக் கொண்டோடும் காலநதியில் நீந்த முடியாமல் திணறுபவை கரை ஒதுங்க தான் செய்யும். வல்லமை மிக்கவை நீந்திக் கடக்க தான் செய்யும்.
கரை ஒதுங்கிக் கிடக்கும் நீங்கள்.. கத்தி கூப்பாடு போடுவதால் எங்களது நீந்தும் வேகம் குறைய போவதில்லை.
பிறகு ஏன் தேவையற்ற கூச்சல்..??
மணி செந்தில்.