அவரை இதுவரை நான் பார்த்ததில்லை.
ஒரு நாள் அலைபேசியில் பேசினார். கட்சியில் இணைய வேண்டும் என்று சொன்னார். சரி . இணைந்து கொள்ளலாம். உங்களை நேரில் சந்திக்க வேண்டுமே என்றேன். இல்லை இல்லை.. எனக்கு வேலை இருக்கிறது.. நான் அதிகம் நேரில் வர முடியாது என்றார்.
சரி .உங்கள் அலைபேசி எண், புகைப்படம், உங்கள் முகவரி ஆகியவற்றை தாருங்கள். நாங்கள் உங்களுக்கு உறுப்பினர் அட்டை தருகிறோம் என்றேன்.
அனைத்தையும் அவர் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வைத்தார். எனக்கும் முகநூலில் நட்பு கோரிக்கை அனுப்பினார். சரி. நம் கட்சியை சேர்ந்தவர் ஆயிற்றே.. இணைத்துக் கொள்வோம் என இணைத்துக் கொண்டேன். அதிலிருந்து என் முகநூல் பக்கங்கள் எல்லாம் அவரே நிறைய தொடங்கினார். நிறைய கட்சி பதிவுகள். அண்ணன் சீமான் புகைப்படங்கள். தலைவரைப் பற்றி நெகிழவைக்கும் பதிவுகள்.. பல கட்சி உறவுகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவுகள் என்றெல்லாம் அவர் மிக பிஸியாக இருந்தார்.
கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்தோம். அவர் அலுவலக வேலையாக வெளியூரில் இருப்பதாக சொன்னார். கட்சி போராட்டங்களில் தம்பிகள் கைதாகி இருக்கிறார்கள். கொஞ்சம் நேரில் வாருங்கள். அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்வோம் என்று அழைத்தோம். முக்கியமான பணியில் இருப்பதாக சொன்னார்.
கட்சி கட்டமைப்பு கூட்டத்திற்கு அழைத்தோம். அவர் வேலையாக இருப்பதாக சொன்னார். இருந்தும் முக்கிய பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக் கொள்வதாக சொன்னார்.
கொடியேற்ற நிகழ்வுக்கு அழைத்தோம். அவர் கொஞ்சம் பிஸியாக இருப்பதாக சொன்னார். இங்கே அருகில் இருக்கும் தஞ்சையில் நடக்கும் மாவீரர்தின கூட்டத்திற்கு அழைத்தோம். மழை வருவது போல இருக்கிறது. மழை தனக்கு ஒத்துக்கொள்ளாது என்று சொல்லிவிட்டார்.
ஆனால் முகநூல் வழியாக யாரோ கூட்டத்தை நேரலை செய்ய.. அதைப் பார்த்துவிட்டு.. மேடையை வேறு மாதிரி போட்டு இருக்கலாம்.. என்று விமர்சித்து ஒரு பதிவு போட்டார்.
இதன் நடுவில் கட்சி உறவுகள் பல பேருக்கு அவர் தோழமை யாகவும் மாறிப்போனார். முகம் தெரியாத முகநூல் பதிவாளர்களிடம் ஒருமையில் பேசிக்கொள்ளும் அளவிற்கு நெருங்கி நட்பு பாராட்டினார். யார் யாரையோ திட்டினார். அவ்வப்போது நடுநடுவே அண்ணன் சீமான் பற்றி இரண்டு இரண்டு பதிவுகள்.
கட்சியைப் பற்றி யாரேனும் விமர்சித்து பதிவு போட்டால் முதல் ஆளாக என்ன நடந்தது என்று இவராக போய் கேட்பார். விமர்சித்து பதிவு போட்டவர் ஏதேனும் குறைகள் சொல்ல.. ஆமாம்.. ஆமாம்.. அப்படித்தான். இங்கு எல்லாம் தவறுதான் என்று பதில் சொல்வார். விமர்சித்தவருக்கு இவர் யார் என்று தெரியாது. இவருக்கும் அவரை யார் என்று புரியாது. ஆனால் அந்தப் பதிவை படித்து பார்ப்பவர்களுக்கு முகம் காட்டாத நமது ஆளும் (?) கட்சியில் முக்கியமான ஆள் என்று நினைக்கும் அளவிற்கு கேள்விகளும் பதிலும் அமைந்திருக்கும்.
ஒரு நாள் அவராகவே எங்களுக்கு அழைத்தார். கட்சி பதாகையில் தனது புகைப்படம் இல்லை என்று கோபப்பட்டார். யார் பதாகை வைத்தார்களோ அவர்கள் படம் மட்டும்தான் இருக்கிறது.. இது எவ்வளவு பெரிய அநீதி என்றெல்லாம் பொங்கினார். கொஞ்சம் நேரில் வாருங்கள். பேசுவோம் என்றேன். தற்போது வெளியூரில் இருப்பதால் பிறகு வருகிறேன் என்று கோபத்தோடு சொல்லிவிட்டு அலைபேசியை பேசி வைத்து விட்டார்.
மீண்டும் ஒரு நாள் எடுத்தார். கட்சிப் பொறுப்பாளர்கள் தங்கள் சாதிப் பெயரை பின்னால் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழர்கள் யார் எனத் தெரியும் என்றார். நேரில் வாருங்கள் .விவாதிப்போம் .என்றேன் . சென்னையில் இருந்து வந்தவுடன் குலம், குடி, இனக்குழு இவற்றைப் பற்றி எல்லாம் உங்களோடு பேசுகிறேன் என்றார். சரி வாருங்கள் என்றேன் .
அன்று இரவே என்னை தமிழர் இல்லை என்று முகநூலில் கடும் கோபத்தோடு பதிவு போட்டு அதற்கு ஆதாரங்கள் (?) கிடைத்திருப்பதாக எழுதினார்.
இதன் நடுவே கதிராமங்கலம் போராட்டத்திற்காக அழைத்தேன். நீங்கள் பெரியாரிய வாதியா என்று கேள்வி கேட்டார். அதைப் பிறகு பேசிக் கொள்ளலாம். அவசியம் நாளை நடக்க இருக்கும் போராட்டத்திற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தேன். அவசியம் அடுத்த வாரத்தில் நேரில் வருகிறேன் எனச் சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்து விட்டார்.
ஒருநாள் அண்ணன் சீமான் எங்கள் ஊருக்கு வந்தார். அண்ணன் சீமான் வருகிறார். வந்து பாருங்கள் என்று இவருக்கு அழைப்பு விடுத்தோம். இவரும் அண்ணன் சீமானோடு ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார். சரி நேரில் வாருங்கள். உங்களை இதுவரையில் பார்த்ததில்லை. நாங்களும் அறிமுகமாகி கொண்டு அண்ணன் சீமானோடு உங்களை அறிமுகம் செய்வதாக சொன்னோம். அப்போதும் வரவில்லை. பிறகு கேட்டதற்கு தனக்கு உடல்நிலை சரியில்லை.. அதனால் வர முடியவில்லை என்றார்.
அண்ணன் சீமான் கூட்டத்திற்கு செல்லும் அவசரத்தில் சில தம்பிகளோடு புகைப்படங்கள் எடுக்க முடியாத சூழல். அந்த தம்பிகளும் நிலைமையை புரிந்து கொண்டு அமைதியாக இருக்க.. இதனை எப்படியோ கேள்விப்பட்ட இவர் கட்சியில் சர்வாதிகாரம் என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டார்.
அந்த பதிவில் யார் யாரோ வந்து பேசினார்கள். எல்லோரையும் பெரியப்பா சித்தப்பா அண்ணா மாமன் மச்சான் பங்காளி அத்தாச்சி என்றெல்லாம் இவர் உறவுப் பெயர் வைத்து உரிமையோடு அழைத்துக் கொண்டிருந்தார். மேலும் அந்த பதிவில் இவரே கேள்வி கேட்டு, பதில் சொல்லி.. கட்சிப் பொறுப்பாளர்களை எல்லாம் ஏக வசனத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.
அதிலிருந்து கட்சியைப் பற்றி ஏக வசனத்தில் திட்டி பல்வேறு பதிவுகள்.
பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் பணிகளுக்காக அவரை அழைத்தோம். தனக்கு காலில் சுளுக்கு எனவும்.. சுளுக்கு சரியான பிறகு பிரச்சாரத்திற்கு வருவதாகவும் சொன்னார்.
நம் கட்சி வாங்கிய ஓட்டுக்களை பார்த்துவிட்டு.. திட்டமிட்டு உழைத்திருந்தால் இன்னும் ஓட்டு வாங்கி இருக்கலாம் என்றெல்லாம் அறிவுரை கூறி ஒரு பெரிய பதிவு போட்டார். அவர் போட்டுக்கொடுத்த எந்தத் திட்டத்தையும்(?) பொறுப்பாளர்கள் மதிக்கவில்லை என்று சாடினார்.
அவரது பதிவுகளை எல்லாம் எதிர்க்கட்சியினர் மாற்றுக் கட்சியினர் நம்மீது வேறுபாடு கொண்டோர் என அனைவரும் பரப்ப… பதிவு மேல் பதிவாக போட்டு பரபரப்பானார். இதன் நடுவே வேலூர் இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யப் போகிறோம் வாருங்கள் என்று அழைத்தோம். அடுத்த முறை(?) கண்டிப்பாக வருகிறேன் என்று சொன்னார்.
ஒருநாள் வெளியூரிலிருந்து நமது கட்சி தம்பி ஒருவர் எங்களுக்கு அழைத்தார். நமது முகநூல் போராளி தன்னிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்றுக் கொண்டு திருப்பித் தரவில்லை வாங்கி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்
எங்களுக்கெல்லாம் ஒரே ஆர்வம்.அவரை நேரில் பார்த்து இருக்கிறீர்களா என்று அந்த வெளியூர் தம்பியிடம் கேட்டோம். இல்லை முகநூல் வழியாக தான் பழக்கம். இன்டர் நெட் பேங்க் மூலமாகத்தான் பணம் அனுப்பினேன் என்றார்.
அது குறித்து அவரிடம் கேட்க அலைபேசியில் தொடர்பு கொண்டபோது மிகவும் கோபப்பட்டு பேசினார். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றார். உள்கட்சி கட்டமைப்பு போதாது என்றார். குழு அரசியல் இருக்கிறது என்றார். சரி அந்த தம்பியின் பணம். .. என தயங்கியவாறே கேட்டதற்கு.. சட்டென அலைபேசி துண்டித்துவிட்டார்.
மறுநாள் கட்சியின் உள்கட்டமைப்பு இல்லை ஜனநாயகம் இல்லை.. பாவிகளா நீங்களெல்லாம் நன்றாக இருப்பீர்களா என்றெல்லாம் சாபம் விட்டு பதிவு போட்டுவிட்டு கட்சியில் இருந்து விலகப்போவதாக முகநூலில் அறிவித்தார். யார் யாரோ அப்பதிவில் வந்து நீங்கள் கட்சியை விட்டு விலகினால் கட்சியை யார் காப்பாற்றுவது என்றெல்லாம் கதறினார்கள். கட்சிக்கு கடுமையாக உழைத்த தங்களுக்கே இந்த நிலையா என ஆளாளுக்கு கதற.. முகநூலே அன்று கண்ணீரால் மிதந்தது.
கட்சி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு தம்பி என்னிடத்தில் அமைதியாய் கேட்டான்.
யார் அண்ணா அவர்…??
அவன் கேள்விக்கு என்னிடத்திலும் பதில் இல்லை.
தெரியவில்லை என்றேன் அமைதியாக.
தம்பி விசித்திரமாக பார்த்தான்.
உண்மையில் எனக்கும் அவர் யார் என்று தெரியாது.
உங்களுக்கு யாராவது அவரைப் பற்றி தெரியுமா..???