நாம் தமிழர் கட்சியில் இன்று பயணிப்பவர்களில் நான் உட்பட 99% திமுக குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தான். திமுகவை கருப்பு-சிவப்பு கொடியை கலைஞர் கருணாநிதி அவர்களை முரசொலி நாளிதழை தங்கள் உயிராக நினைத்து நேசித்தவர்கள் தான் இன்று நாம் தமிழர் கட்சியில் இருக்கிறோம்.
திமுகவின் முதல் இணையதள தலைமுறையின் முக்கிய மானவர்களில் நானும் ஒருவன் . ஆர்குட் காலத்திலேயே திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து எழுதியவர்களை பக்கம் பக்கமாக எழுதி விரட்டி அடித்தவர்களில் நானும் ஒருவன். அதனால் திமுக தலைவர் கருணாநிதி அவர்களாலும், திக தலைவர் வீரமணி அவர்களாலும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பெற்றவன் நான். தம்பி டான் அசோக் போன்றவர்களுக்கு இந்த விவரங்கள் எல்லாம் நன்கு தெரியும்.
ஆனால் எதற்காக நாங்கள் திமுகவை விட்டு விலகினோம் என்பது தான் உங்கள் சிந்தனைக்கு உரியது. என் இனம் அழிந்த போது தனது பதவி முக்கியம், தன் மகள் மீதான வழக்கின் முடிவு முக்கியம் என அமைதி காத்து நின்ற திமுக தலைவரின் கள்ள மௌனம் எங்களுக்கு துரோகமாக பட்டது. அவரை மிகவும் நேசித்து நம்பி நின்ற எங்களால் அந்த துரோகத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.
சொல்லப்போனால் திமுக தலைமை மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையும் உண்மையான நேசிப்பும் தான் இன அழிவுக்கு பின்னர் கடுமையான வெறுப்பாக மாறிப்போனது.
அதேபோலத்தான் நம்மாழ்வார் அவர்களும்.. மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முதன்முதலாக கையெழுத்துப் போட்டு தமிழ் நாட்டிற்குள் அனுமதித்தவர் அப்போதைய துணை முதல்வராக இருந்த மு க ஸ்டாலின் அவர்கள்.
பிறகு அவரே தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டதாக தெரிவித்தார். இன்று தஞ்சை மண் பாலைவனமாக மாறக் கூடிய அபாயத்தை அன்றே உணர்த்தி மக்களைத் திரட்டி போராடியவர் நம்மாழ்வார்.
அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்வதில் திமுகவினர் பெருமைப்பட்டுக்கொள்ள ஏதுமில்லை. நம்மாழ்வார் இறந்தபோது திமுக இயற்றிய இரங்கல் தீர்மானத்தை இரங்கல் அறிக்கையை தற்போது வெளியிட முடியுமா..
அப்படி ஏதாவது ஒன்று இருக்கிறதா.. உண்மையில் தெரிந்துகொள்ளத்தான் கேட்கின்றேன். நம்மாழ்வார் எதிர்த்த மீத்தேன் திட்டத்தை முதன்முதலில் தமிழகத்திற்கு கொண்டு வந்தது அப்போதைய திமுக அரசு.
இப்போது நம்மாழ்வார் உங்கள் கட்சியை சேர்ந்தவர் என்று பெருமை பட்டுக்கொண்டு நம்மாழ்வாரையும் இணைத்தே இழிவு படுத்துகிறீர்கள் என்று எண்ணுகிறேன்.
நம்மாழ்வார் குறித்து மிக இழிவாக இணையதள திமுகவினர் எழுதிய பல்வேறு பதிவுகள் அனைவருக்கும் தெரிந்தது தான்.
இப்போது திடீரென நம்மாழ்வார் பாசம் வந்திருப்பதுதான் எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது.
பாவம் நம்மாழ்வார். இந்த மண்ணிற்காக இனத்திற்காக உண்மையாக உழைத்த பெருமகன்.
தன் வாரிசுகளுக்கு பதவியையோ சொத்தையோ சேகரித்து வைக்காமல்.. மறைந்த நேர்மையாளர்.
திமுகவினர் அவரை விட்டு விடலாம்.
திமுகவிற்கு உதயநிதி போதும். நம்மாழ்வார் எதற்கு..??
மணி செந்தில்.