திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு கொளத்தூர் மணி அவர்களுக்கு… வணக்கம்.

இதுபோன்ற ஒரு கடிதம் எழுத நேர்ந்த நிலைமைகளுக்காக உண்மையில் நான் வருந்துகிறேன். உங்களை ஒரு கதாநாயகனாக எனது கண்கள் பார்த்து இருக்கின்றன. உங்களை ஒரு தேவ தூதனாக கருதி எனது கரங்கள் தொழுதிருக்கின்றன. கனிவும் அன்பும் நிறைந்த உங்கள் சொற்களில் தான் அன்று எவ்வளவு உண்மையும் நேர்மையும் நிறைந்திருந்தன..??

அவர்தான் நீங்களா என்ற சந்தேகம் உங்களை உண்மையாக நேசித்த என்னைப்போன்ற ஒரு எளிய மனிதனுக்கு இன்று எழுந்திருப்பது என்பது வரலாற்றின் மாபெரும் அபத்தக் காட்சி.

ஆனால் காலம் தான் எவ்வளவு கொடுமையானது..??

ஒரு காலத்தில் நம் கண் முன்னால் கண்டு நேசித்த ஒரு உதாரண மனிதன் உயிரென கொண்டிருந்த இலட்சிய பற்றுகளை தவற விட்டுவிட்டு.. வரலாற்றின் வீதியில் அம்பலப்பட்டு நிற்பது எதனாலும் சகிக்க முடியாத பெரும் வீழ்ச்சி..

அப்படி ஒரு வீழ்ச்சியில் உங்களை நீங்களே சரித்துக்கொண்டு எதை தூக்கி நிறுத்தப் போகிறீர்கள் அண்ணா..??

இருந்த நாட்டை நசுக்கி, வாழ்ந்த இனத்தை அழித்ததை மறந்துவிட்டு.. இல்லாத திராவிடத்தை காக்க நிற்கிற உங்களது பரிதாபநிலை எதற்காக அண்ணா..??

உண்மையில் கடந்த சில நாட்களாக நீங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு எதிராக ஆற்றிவரும் எதிர்வினைகளை பார்க்கும் பொழுது.. பல்லாண்டு காலமாக அம்னிஷியாவில் தூங்கிக் கிடந்த நோயாளி ஓருவர் திடீரென எழுந்து காந்தியை சுட்டுட்டாங்களா.. ராஜீவ்காந்தியைக் கொன்னுட்டாங்களா.. என்று கேட்கும் காட்சிகளைப் போல இருக்கிறது.

அந்த கால கட்டங்களில் உங்களை அண்ணன் சீமான் மேடைகளில் அழைக்கும் முறையைப் பற்றி இந்த நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

என் அண்ணனுக்கும் அண்ணனாக விளங்கக்கூடிய என் உயிர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களே.. என்று அவர் அழைக்கும்போது மேடைக்கு கீழே நின்று கொண்டிருக்கின்ற என்னை போன்றவர்களுக்கு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சிலிர்க்கும்.

ஆனால் அண்ணனுக்கு அண்ணனாக , ஈழ மன்னனுக்கு அண்ணனாக நின்றவர்
கோபாலபுரத்து தெருக்களில் திமுக தலைவரின் சந்திப்புக்காக காத்துக் கிடப்பார் என்று யாரும் கனவிலும் அப்போது நினைத்துப் பார்த்ததில்லை.

உண்மையில் உங்களுக்கு எதுவும் நினைவில் இல்லையா அண்ணா..

நமது மகன் பாலச்சந்திரனின் பிஞ்சு உடல் தோட்டாக்கள் பாய்ந்து சடலமாக காணப்பட்ட புகைப்படம் வெளியான காலகட்டத்தில்.. நாம் நேரடியாக சந்தித்தபோது கண் கலங்கி நின்று கொண்டிருந்த என்னை பார்த்து.. அதே விழிகள் கலங்க இந்தக் காங்கிரசை பற்றியும் திமுகவின் சதிகள் பற்றியும் நெஞ்சம் குமுற குமுற வகுப்புகள் எடுத்தீர்களே..??

எப்படி அண்ணா.. கோபாலபுரத்து படிக்கட்டுகளை உங்கள் பாதம் தீண்டியது..?? உங்களுக்கு கூச வில்லையா..??

தலைவரின் உடல் என காட்டப்பட்ட ஒரு உடலை முள்ளிவாய்க்காலில் வைத்து சிங்களன் காட்டிய போது.. அறிவு நம்ப மறுத்தாலும்.. தலை உடைக்கப்பட்ட அந்த உடலை காணும்போது மனம் கதறி உங்களிடத்தில் எடுத்துப் பேசினேனே..??

அப்போது நீங்கள் சொன்ன சொற்கள் ஞாபகம் இருக்கிறதா..

அழுது கோபத்தை தீர்த்துக் கொள்ளாதீர்கள். சேர்த்து வையுங்கள். பழிதீர்க்க நிறைய இருக்கிறது. இந்தக் காங்கிரஸ் என்ற கட்சியும் திமுக என்ற கட்சியும் இனி இருக்கவே கூடாது என்று ஆத்திரம் பொங்க நீங்கள் தானே சொன்னீர்கள்..??

நம் இனத்தை அழித்தவர்களோடு தத்துவக் கூட்டு வைப்பதாக நினைத்துக்கொண்டு.. திராவிடத்தை காப்பதாக சொல்லிக்கொண்டு.. கைகோர்த்து நிற்கிறீர்களே..??

எதன் பொருட்டு இதை சகிக்க இயலும்..??

இந்த ராஜீவ் காந்தி படுகொலையைப் பற்றி நீங்கள் பேசாததையா சீமான் பேசிவிட்டார்..?? இதே திமுக தலைமை பற்றி காங்கிரஸ் கட்சியை பற்றி மேடைகளிலும், எங்களைப்போன்ற தம்பிகளை சந்திக்கும் தனிப்பட்ட சந்திப்புகளிலும் எத்தனை வார்த்தைகளை எவ்வாறு உதிர்த்து இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு நினைவில்லையா..??

தலைவர் பிரபாகரனை வெறும் எட்டு நிமிடங்கள் தான் சீமான் சந்தித்தார் என்று இன்று வாய்கூசாமல் பேசுகிறீர்களே.. உங்களது மேடைகளிலேயே எத்தனை முறை அந்த சந்திப்பைப் பற்றி அண்ணன் சீமான் மிக விரிவாக பேசி இருக்கிறார்..அப்போதெல்லாம் பின்னால் உட்கார்ந்து கொண்டு கைதட்டி மகிழ்ந்து விட்டு இப்போது யாருக்கு சேவகம் செய்ய உங்கள் திருவாய் மலர்கிறது என்று சொல்ல முடியுமா..??

உண்மையில் நீங்கள் ஒரு மனசாட்சி உடைய மனிதராக இருந்தால்.. உங்களது மேடையில் சீமான் அன்று பேசும்போது அந்த நொடியிலேயே.. அந்த மேடையிலேயே.. உங்களது மறுப்பினை உடனே அல்லவா தெரிவித்திருக்க வேண்டும்..??

உங்களிடம் நேரடியாக சீமான் ஈழத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி எத்தனை முறை விளக்கியிருப்பார்.. அத்தருணங்களில் எல்லாம் நானே பலமுறை உடன் இருந்திருக்கிறேனே.. என் கண்ணால் நானே கண்டிருக்கிறேனே.. என் காதால் நானே கேட்டிருக்கிறேனே.. அப்போதெல்லாம் அமைதியாய் கேட்டுவிட்டு இப்போது எட்டு நிமிடம் தான் பார்த்தார், திரைப்படம் எடுக்கத்தான் சென்றார் என்று உள்ளுக்குள் உண்மைகளைப் புதைத்துவிட்டு வாய் முழுக்க பொய்களோடு வார்த்தைகளை வாரி இறைக்கிறீர்களே.. யாருக்காக..??
எந்த செஞ்சோற்றுக்கடன் உங்களை சேராத இடம் சேர்த்து வைத்திருக்கிறது..??

நீங்கள் சொல்வது போல திரைப்படம் மட்டும் எடுக்கச் சென்றவரைப் பற்றி சாவின் இறுதி நொடியில்.. கடற்புலிகளின் தலைவர் அண்ணன் சூசை எதற்காக பேச வேண்டும்..??

மனித மனம் எல்லாவற்றையும் மறந்து விடும்.. காலம் அனைத்தையும் கடத்தி விடும் , எல்லோரும் எல்லாவற்றையும் மறந்திருப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் அண்ணா..

எதையும் மறக்காமல் சிலர் இருக்கத்தான் செய்கிறோம்.

இந்த காங்கிரசை பற்றி, இந்த திமுகவைப் பற்றி இந்தக் கூட்டணி நிகழ்த்திய இன அழிப்பைப் பற்றி எங்களிடம் அணு அணுவாக விவரித்து போராட சொல்லிக்கொடுத்தது நீங்கள்தானே அண்ணா..??

இந்த கருணாநிதி யார்..?? அவர் செய்த அரசியல் துரோகங்கள் என்னென்ன..?? என்று அடுக்கடுக்காய் எங்களுக்கு வகுப்பு எடுத்துவிட்டு அறிவாலயம் வாசலில் வரிசைகட்டி நின்று கொண்டு இருக்கிறீர்களே அண்ணா..??

இனம் அழிந்தபோது காங்கிரசை வீழ்த்த, அந்த காலகட்டத்தில் ஈழம் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்த ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்கிற முடிவினை நீங்கள் தானே எடுத்தீர்கள்..??

இந்த நொடி வரை அண்ணன் சீமான் மீது ஒரு விமர்சனமாக வைக்கப்படுகிற அந்த முக்கிய முடிவினை எடுத்தது நீங்கள் தானே..??

உங்களிடமிருந்து அண்ணன் கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் பிரிந்தபோது ஏற்பட்ட சர்ச்சைகளில் எதுவெல்லாம் விவாதப் பொருளானது என்பது குறித்து இன்று நீங்கள் நினைத்து பார்க்க முடியுமா..??

அந்தக் காலகட்டத்தில் உங்களோடு அரணாக இருந்து தெருத்தெருவாக உங்களோடு அலைந்து, தொண்டை வலிக்க வலிக்க பேசி, வழக்கு செலவுகளுக்காக துண்டேந்தி எல்லோரிடம் வசூலித்து உங்களின் உடன்பிறந்தவனாக நின்றவர் இதே சீமான் தானே..??

நாம் தமிழர் என்கின்ற அமைப்பு இனத்தை அழித்த காங்கிரசையும் துணைபோன திமுகவையும் வீழ்த்த உருவாக வேண்டும் என்று முதன்முதலாக நினைத்தது நீங்கள் தானே அண்ணா..??

மதுரையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அறுத்தெறியும் வாரீர் என்கின்ற நாம் தமிழரின் முதல் நிகழ்ச்சிக்கு பனியன் அச்சிட்டு தந்தது, மேடை வடிவமைப்பை கண்காணித்தது, உள்ளிட்ட அனைத்தையும் நீங்கள் தானே அண்ணா செய்தீர்கள்..??

அதுதொடர்பாக மறைந்த இயக்குனர் அப்பா மணிவண்ணன் இல்லத்தில் நடந்த தொடர்ச்சியான கூட்டத்தில் எங்களுடன் நீங்கள் தானே அண்ணா கலந்து கொண்டு திட்டங்களை தீட்டியது நீங்கள்தானே அண்ணா..??

எல்லாவற்றையும் எங்களை திசைகாட்டி அனுப்பிவிட்டு நீங்கள் திசை மறந்து, திக்கற்று திரிந்து கொண்டிருப்பது எதனால் அண்ணா..??

“ராஜீவ் காந்தி கொலை என்பது சரிதான். ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதை விடுதலைப்புலிகள் செய்தாலும் அது யார் செய்தாலும் அது சரிதான். செய்யவில்லை என்றால் தான் நாம் கண்டனம் தெரிவித்து இருப்போம்”
என்று நீங்கள் மேடையில் பேசும்போது சீமான் உங்கள் பின்னால் தானே அமர்ந்திருந்தார்.. நீங்களும் ,சுப வீயும் அண்ணன் தொல் திருமாவளவனும் அவரை பின்னால் அமர வைத்துக்கொண்டு இதைத்தானே பேசியிருக்கிறீர்கள்.. சமூக வலைதளங்களில் பல காணொளிகள் உலவுகிறதே..நீங்களெல்லாம் கற்றுக் கொடுத்ததை தானே அவர் இன்று மேடையில் பேசினார்.. நீங்கள் அன்று பேசியது சரி என்றால் அவர் பேசியதும் சரிதானே..??

என்ன அண்ணா.. ஆளுக்கு ஆள் மாற இது என்ன திராவிடம் என்ற சொல்லின் வரையறையா..??

சீமான் விளம்பரத்திற்காக பேசுகிறார் என்கிறீர்கள். ஆனால் சீமானை பற்றி பேசி விளம்பரம் தேடி கொள்ளுமளவிற்கு நீங்கள் காணாமல் போய் விட்டீர்கள் அண்ணா..

அண்ணன் சீமான் வெகுஜன அரசியல் களத்தில் , தமிழக நலன் சார்ந்த போராட்ட களங்களில் தொடர்ச்சியாக பங்கேற்று மக்களோடு மக்களாக நின்று கொண்டிருக்கிறார். அவருக்கென தனிப்பட்ட விளம்பரம் எதுவும் தேவை இல்லை.

ஆனால் நீங்கள் கடைசியாக செய்த போராட்டம் என்ன அண்ணா..?? காஷ்மீரி களுக்காக, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து, பாஜக அரசின் இந்துத்துவ திணிப்பை எதிர்த்து , தமிழக நலன் சார்ந்த போராட்டங்கள் ஏதாவது நீங்கள் கடைசியாக செய்த போராட்டம் என்ன அண்ணா..??

உங்களால் உருவாக்கப்பட்ட உங்கள் தம்பி சீமான் இன்றளவும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மக்கள் பிரச்சினைக்காக போராடி பேசி ஒவ்வொரு ஊரிலும் வழக்குகள் வாங்கிக்கொண்டு நீதிமன்றங்களிலும் போராட்ட களங்களிலும் தொடர்ச்சியாக நின்று கொண்டிருக்கிறாரே..

நீங்கள் எங்கே அண்ணா போனீர்கள்..??

நீங்கள் வாழ்ந்த வாழ்விற்கு.. இருந்த மரியாதைக்கு.. இதுபோன்ற உண்மைக்கு நெருக்கமானவற்றில் எதிர்கருத்து பேசி ஒவ்வாமை ஆகிவிடாதீர்கள் அண்ணா..இதிலிருந்து சில காலம் நீங்கள் ஒதுங்கி இருப்பது தான் சரியானது.

அண்ணன் சீமான் உங்களைப் போன்றவர்களால் எய்யப்பட்ட ஒரு அம்பு என்றாலும்.. தலைவர் துவக்கிலிருந்து உமிழப்பட்ட ஒரு தோட்டா என்றாலும் பாதை மாறாது இலக்கை நோக்கி மிகச்சரியாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நீங்களோ பாதை மறந்து இனத்தை அழித்தவர்களோடு இன்முகம் காட்டி.. தீர்ந்துபோன திராவிடக் குடுவையில் அமிர்தம் சுரக்கிறது என்று பாசாங்கு காட்டி கொண்டிருக்கிறீர்கள்.

உங்களால் பாதை காட்டப்பட்டு பயணிப்பவர்கள் சரியாக பயணித்துக் கொண்டிருக்கும்போது திசைக் காட்டி திசை மறந்துப் போனதுபோல.. சரியாக இருக்கும் உங்கள் தம்பி மீது உங்களுக்கு ஏற்படுகிற அந்த வஞ்சினம் தான் உங்களை இவ்வாறெல்லாம் பேச வைக்கிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

இன்றளவும் அவர் உங்களை நேசித்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் இந்தக் கடிதத்தை எழுதுவது அவருக்குத் தெரிந்தால் என் மீது மிகுந்த வருத்தம் கொள்வார். அவர் அண்ணன் காயப்படும் எதையும் செய்ய எங்களை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை.

ஆனாலும் நான் இதை செய்யத்தான் வேண்டியிருக்கிறது. கொளத்தூர் மணியின் தம்பி சீமான் அவர் அண்ணனுக்காக சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கலாம். ஆனால் ஒருபோதும் சீமானின் தம்பி அமைதியாக இருக்க மாட்டான்.

ஏனெனில் அவன் உண்மை நிறைந்த ஒரு ஆன்மாவிற்கு அருகில் நிற்கிறான்.
அவ்வாறாகத்தான் அவன் கேள்விகள் கேட்பான்.

வணக்கங்களுடன்‌..
மணி செந்தில்.