வரலாற்றின் பக்கங்கள் பெரும்பாலும் பேரரசர்களின் பெருமித கதைகளால் நிரம்பி வழிகின்றன. மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், ராஜ பேரிகைகளும், அந்தப்புர அழகிகளும், புகழ்ச்சி வர்ணனைகளும் நிரம்பி இருக்கிற வரலாற்றின் ஏடுகளில் எளிய மனிதர்களுக்கு என்றுமே இடம் இருந்ததில்லை. இந்திய நிலத்தில் மக்களின் வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.
ஆனாலும் தலைமுறை தலைமுறைகளாக மக்களிடையே பிறந்து அவர்களுக்காக போராடி, மாமனிதனாக திகழ்ந்து, பெருமைமிக்க திரு உருவாக மாறி இருக்கின்ற பழைய எளிய மனிதர்களின் கதை.. வாய்மொழிப் பாடல்களாக,தெருக் கூத்து நாடகங்களாக, கதை சொல்லிகளின் கதைகளாக காலந்தோறும் கடத்தப்படுவதை நாம் அறிந்திருக்கிறோம். இதுபோன்ற கதைகளும், கால நதியின் பயணத்தில் எதிர்ப்படும் அனுபவங்களுமே புனைவிலக்கியதிற்கான கதவுகளாக திகழ்கின்றன.
இலக்கியம் என்பது என்ன.. அது மனிதர்கள் அடைந்த வாதைகளின் வசீகர விவரிப்பு தானே.. என்கிறார் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் தாஸ்தாவெஸ்கி. மனித வாழ்வில் இழப்புகளைப் பற்றி பேசுவதற்கும், வரிகளைப் பற்றி பேசுவதற்கும் இலக்கியத்தை விட சிறந்த வழி இருக்கிறதா என்ன.. இலக்கியம் ஒரு கண்ணாடியாக மனிதவாழ்வின் பாடுகளை பிரதிபலிக்கிறது. கலையின் நோக்கமும் அதுதான். தெருக்கூத்து விலிருந்து தொடங்கி திரைக்கலை வரைக்குமான பல்வேறு நிகழ் கலைகள் சகலவிதமான உணர்ச்சிகளுக்கும் ஆட் படுகின்ற மனிதவாழ்வின் சாரத்தை தான் மூலமாகக் கொண்டிருக்கின்றன.
எனவேதான் திரைப்படத்திற்கும் இலக்கியத்திற்கும் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. பல இலக்கிய வடிவங்கள் உலக திரைப்படங்களாக எடுக்கப்பட்டு புகழ் அடைந்திருக்கின்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் பல மொழிகளில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு இருக்கின்றன. உலகளாவிய அளவில் ஏதேனும் ஒரு இலக்கியப் பிரதியை அல்லது ஏதேனும் நாவலை அல்லது யாரேனும் எழுத்தாளர் எழுதிய கதையை மூலமாக வைத்து திரைப்படம் எடுப்பதென்பது மிக மிக இயல்பான ஒன்று.
ஒரு இலக்கியப் பிரதி திரைப்படம் ஆவது தமிழ் திரை உலகிற்கும் கூட புதிதல்ல. புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற குறுநாவலை இயக்குனர் மகேந்திரன் உதிரிப்பூக்கள் என்ற புகழ்பெற்ற திரைப்படமாக உருவாக்கினார். ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978), , சில நேரங்களில் சில மனிதர்கள்(1977), உன்னைப்போல் ஒருவன்(1965), யாருக்காக அழுதான்(1966) போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. நீல பத்மநாபனின் தலைமுறைகள் மகிழ்ச்சி என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய விக்ரம்,ஒரே ரத்தம் (நாடோடித்தென்றல்), போன்ற கதைகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.
அண்மைக்காலங்களில் மிகச்சிறந்த தமிழின் நவீன இலக்கிய உலகின் எழுத்தாளர்கள் எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரின் கதைகளையும் வசனங்களையும் மூலமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் எழுத்தாளர்களுக்கும் திரை உலகிற்கும் உள்ள உறவு மிக நெருக்கமானது.
அவர் எழுதிய வெக்கை என்ற நாவல் தான் புகழ்பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக வெளிவந்திருக்கிறது.
நாற்பதாண்டுகளுக்கு முன் வந்த சுமார் 160 பக்கங்களுக்கு மிகாத ஒரு குறுநாவலை திரைப்படமாக உருவாக்க முனைந்த இயக்குனர் வெற்றிமாறனின் துணிச்சலுக்கு உண்மையில் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்து தான் ஆகவேண்டும்.
நூல்வடிவில் வெளிவந்த வெக்கை என்கின்ற குறு நாவலின் கதை மிக எளிமையானது. தனது அண்ணனை பகையின் காரணமாக கொலை செய்த உள்ளூர் பெரிய மனிதரை பதின்ம வயது கொண்ட சிறு இளைஞன் கொலைசெய்து பழித்தீர்க்கிறான். அந்தக் கொலையை அந்த இளைஞனின் தந்தையும் அவனது குடும்பமும் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதுதான் கதை. அந்த ஊர்ப் பெரிய மனிதனின் வயலுக்கு மிக அருகே இருக்கிற சிறு துண்டு நிலத்தை கொடுக்க மறுக்கிற அந்த எளிய குடும்பத்தின் மூத்த வாரிசை கொடூரமாக கொலைசெய்து அந்த சிறு குடும்பத்தின் எளிய வாழ்வை அழித்து முடிக்கிறது பண்ணையார்த் தனத்தின் பேராசை. குடும்பத்தின் மையப்புள்ளியாக இருந்த வனின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த குடும்பம் தவிக்கிறது. நிம்மதியற்ற இரவுகள். உறக்கமற்ற பொழுதுகள். இரவு பகலாக பகைமை ஒரு ஆழ்ந்த பசியாக அந்த குடும்பத்தை வருத்துகிறது. பகை முடித்து பழி தீர்க்க அனைவரும் ஒரு தருணத்திற்காக காத்திருக்க.. அந்த சிறிய இளைஞன் முந்திக்கொண்டு தன் அண்ணனின் உயிர் பறித்தவனை கொலைசெய்து பழி தீர்க்கிறான். இதைத்தான் அப்படியே வைக்காமல் திரைமொழியில் சமூக சீர்திருத்த காட்சிகளோடு கூடிய பதிவுகளை வைத்து கூடுதலான கதை சேர்க்கை அம்சத்துடன் இத்திரைப்படத்தை வெற்றிமாறன் உருவாக்கியிருக்கிறார்.
வெக்கை நாவலை பொறுத்தவரையில் ஆழ் நெஞ்சுக்குள் அறுக்கும் பகைமை எப்படி பழித் தீர்த்து பசியாற்றி கொள்கிறது என்பதைதான் பூமணி மிக நுட்பமாக எழுதி இருப்பார்.
எழுத்து வடிவில் வாசிப்பு அனுபவத்தில் நாம் கண்டடைந்து வியந்த பூமணியின் நுட்பத்தை வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக திரையில் பார்த்த போதும் கண்டடைந்தது தான் இப்படத்திற்கான வெற்றி.
நாவலை அப்படியே கதையாக்காமல் தந்தை கதாபாத்திரத்திற்கு கீழ் வெண்மணி மற்றும் பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டங்கள் ஆகிய சம்பவங்களை முன்வைத்து ஒரு பிளாஷ்பேக் வைத்திருப்பதும், எண்பதுகளில் நடைபெறுகிற கதையில் தென்படுகிற சாதிப் படிநிலையின் நுண்ணரசியல் காட்சிகள் அசுரன் திரைப்படத்தை அரசியல் அசுரனாக காட்டுகிறது.
இத் திரைப்படத்தின் முத்தாய்ப்பு அதன் இறுதி காட்சி. பகைமை. அதைத்தொடர்ந்த இருபக்கமும் நிகழ்ந்த கொலைகள் என தொடர்கின்ற போது.. ஒரே மொழி பேசுறோம்.. ஒரே நிலத்தில் வாழ்கிறோம்.. இனியும் இது தொடரக்கூடாது என இன ஓர்மை பேசுகிற அந்த இறுதிக் காட்சி தான் வெற்றிமாறன் அசுரன் திரைப்படம் மூலம் நிகழ்த்த விரும்பும் அரசியல்.
ஒரு எளிய குடும்பத்தை தாங்குகின்ற தந்தை எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பான் என்பதை நுட்பமாக அசுரன் விவரிக்கிறது. தனது இளைய மகன் அடிபட்டு விழும் போதெல்லாம் தாக்கவரும் கழுகுவிடமிருந்து தனது குஞ்சினை காப்பாற்ற போர்க்குணம் கொண்டு போராடும் தாய்க்கோழி போல உக்கிர பார்வையோடு தனுஷ் தோன்றும் போதெல்லாம்.. திரையரங்கம் அதிர்கிறது .
வரலாற்றுத் தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசியலை தாழ்த்தப்பட்டவர்களே தான் முன்னெடுக்க வேண்டும் எனவும்.. அவர்களின் கலையை, இலக்கியத்தை, திரைப்படத்தை அவர்கள்தான் சரியாக, நேர்மையாக இருக்க முடியும் எனவும் இருந்த அனைத்து சமன்பாடுகளையும் வெற்றிமாறன் தனது உச்சபட்ச கலை வெளிபாட்டால் கலைத்துப் போட்டு இருக்கிறார். சாதி ஏற்றத்தாழ்வு பார்த்து செருப்பு போடக்கூடாது என்றவனை செருப்பாலயே அடித்து கட்டிப் போடுகிற அந்த கம்பீரக் காட்சி சாதிக்கு எதிராக வெற்றிமாறன் உபயோகப்படுத்தி இருக்கிற மாபெரும் ஆயுதம். ஒரு தந்தையின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்படுகின்ற திரைப்படமொன்றில் சாதி உணர்வுக்கான சாட்டையடி காட்சிகளை வெறும் பிரச்சாரமாக துருத்தாமல் பொருத்தமாக பொறுத்தி இருப்பதுதான் வெற்றிமாறனின் சாதனை.
தனுஷ் மஞ்சு வாரியர் பசுபதி பிரகாஷ் ராஜ் , சிவசாமியின் மகனாக நடித்து இருக்கிற அந்த இரண்டு இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு வாழ்நாள் சாதனையாக அமைய எடுக்கிற ஒரு திரைப்படத்தில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்கின்ற உள்ளார்ந்த வேட்கையில் அவர்கள் நடித்திருப்பது நமக்குப் புரிகிறது.
ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாக எடுக்கப்படும்போது பிழைகள் நேருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதற்கு மிகச்சரியான உதாரணம் தி ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல். வாசிக்கும்போது மாபெரும் வாசிப்பனுபவத்தை தருகிற அந்த நாவல் ஞானராஜசேகரன் இயக்கி திரைப்படமாக காணும்போது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. இத்தனைக்கும் இளையராஜா அந்த திரைப்படத்தில் மிக அற்புதமான இசையை வழங்கியிருந்தார்.
அதுபோன்ற பிழைகள், விடுதல்கள் எதுவும் அசுரனுக்கு நேரவில்லை. கதை நடக்கும் களத்தையும், காலகட்டத்தையும் மிக கவனமாக சித்தரித்த விதம் கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. கதாநாயனாக சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற தனுஷ் சிறுசிறு முகபாவங்களில் கூட கவனம் செலுத்தி திரைப்படத்திற்கு நேர்மை செய்திருக்கிறார். இசை ஜீ.வி பிரகாஷ். இதுபோன்ற ஒரு காலகட்டத்தை விவரிக்கின்ற திரைப்படங்களுக்கு இசை அமைப்பது என்பது மிக சவாலான ஒன்று. அந்த சவாலை மிக அற்புதமாக கையாண்டிருக்கிற ஜீ.வி பிரகாஷுக்கு இத்திரைப்படம் அவர் திரை வாழ்க்கையில் ஒரு பூச்செண்டு.
இயக்குனர் வெற்றிமாறனின் நிரந்தர ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் என்று வலுவான அணியினர் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி மாபெரும் அசுரத்தனம் காட்டியிருக்கிறார்கள். இதுபோன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை தயாரிக்கவே ஒரு துணிச்சல் தேவையாக இருக்கிறது. அதை மிகச்சரியாக கலைப்புலி தாணுு சாத்திய ப்படுத்திருக்கிறார்.இத்திரைப்
ஊருக்குள் ஆயிரத்தெட்டு சாதிகள்.. தலைமுழுக ஒரே ஆறு.. என்பதான அண்ணன் அறிவுமதியின் கவிதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.
அதைத்தான் தனது அசுரன் திரைப்படம் மூலமாக மிக அழுத்தமாக வெற்றிமாறன் வெற்றிகரமாக கூறியுள்ளார்.
அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்த்து கொண்டாட வேண்டிய சமூக செய்திகளை உள்ளடக்கிய சிறந்த திரைப்படமாக அசுரனை இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட அவரது குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள்.
அவர்களது கடும் உழைப்பிற்கு காட்சிக்கு காட்சி திரையரங்குகளில் கைதட்டல்களே சாட்சி.
அசுரன் தவறவே விடக்கூடாத மாபெரும் அனுபவம்.