————————————————–

ஒரு பொன் அந்திமாலையில் கரை ஓரத்தில் நின்றுகொண்டு அடர்ந்து படர்ந்து ஓடும் நதியைப் பார்ப்பதுபோல.. நான் இந்த வாழ்வை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

எதன் பொருட்டும் அந்த நதி நிற்பதில்லை. யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எதனாலும் திசை மாறுவதில்லை. தன் கடன் பயணிப்பதே என்பதுபோல அது ஓடிக் கொண்டே இருக்கிறது.

இந்த முடிவிலியான பயணத்தில் சட்டென நிகழ்ந்துவிடுகின்றன நம்மோடு உயிரென நின்றவர்களின் இழப்புக்கள். அப்படித்தான் சமீபகாலமாக என் இதயத்திற்கு மிக நெருக்கமானவர்களை நான் இழந்து விட்டு எதனாலும் கட்டுப்படாத வாழ்வின் குரூர ஓட்டத்தைப் பற்றி கண்கள் முழுக்க நீரோடு சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

உண்மையில் தம்பி கார்த்தி இறந்தபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நேற்று வரையில் என்னோடு பேசிக் கொண்டிருந்தான். நான் அவன் தோள் பிடித்து நடந்துக் கொண்டிருந்தேன். பல நம்பிக்கைகளை என்னுள் விதைத்துக் கொண்டிருந்தான். இருவரும் சேர்ந்து பல கனவுகள் கண்டோம். சட்டென பற்றிருந்த என் கையை உதறிவிட்டு அவன் தனியே சென்றுவிட்டான். என் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் போல தம்பி டக்கீலோ மணி இருந்தான். அடிக்கடி காணாமல் போய் கடையில் நின்று கொண்டிருக்கும் அவனை நான் திட்டி கொண்டே இருப்பேன். சிரித்துக்கொண்டே என் முன்னால் அவன் நின்று கொண்டிருப்பான். திடீரென நிரந்தரமாக காணாமல் போய்விட்டான்.

தூங்கி விழித்த பிறகு கலைந்து போகின்ற கனவு போல என்னுள் கலந்துவிட்ட என் தம்பிகள் காணாமல் போவது என்னால் எதனாலும் சகிக்கமுடியாத துயரமாக மாறிப்போனது. அதுவும் என்னோடு வயது குறைந்தவர்கள். நன்கு வாழ வேண்டியவர்கள். சட்டென போய்விட்டார்கள்.

அவர்களை இழந்து நிற்கின்ற அவர்களது குடும்பங்களுக்கு எந்த வார்த்தையும் சொல்லி என்னால் ஆறுதல் படுத்த முடியவில்லை. ஏனெனில் நானே ஆறுதல்படுத்த வேண்டிய நிலையில்தான் இருந்தேன்.
உடன் பயணித்தவர்கள் மரணித்துப் போனால் ஒரு மாலையை வாங்கி போட்டுவிட்டு மறு நொடியே தன் வேலையை பார்க்கப் போகிற இயல்பான அரசியல் கட்டமைப்பாக கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியை நாங்கள் உருவாக்கவில்லை.

தனியனாக அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சியை உருவாக்க தொடங்கியபோது.. முதன்முதலாக தமிழ்நாட்டில் பிரம்மாண்டமான கலந்தாய்வுக் கூட்டத்தை கும்பகோணம் தான் நடத்தியது. இனம் அழிந்த வலியில் கண் சிவந்து மண்ணை மீட்கிற புனிதப் பணியில் இறங்கிய அண்ணனை பின் தொடர்ந்து பயணிக்க இளைஞர் கூட்டம் ஒன்று இங்கு உருவாகி நின்றது.

நாங்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக்கொண்டோம். குடும்பமாக கூடி நின்று மகிழ நாம் தமிழர் என்ற பெயரில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை வாழ்வது என முடிவு செய்துவிட்டோம். இன்பத்திலும் துன்பத்திலும் பிரியக்கூடாது என மனதிற்குள் உறுதி ஏற்றுக்கொண்டோம். ஒருவருக்கொருவர் எதனாலும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்பதில் கவனம் கொண்டோம். அப்படியேதான் பயணித்தோம். ஆனாலும் பயணத்தின் முடிவு பிரிவு தானே என்பதை உணர்த்துவது போல எதிர்பாராத சில நிறுத்தங்களில் எதிர்பாராமல் சிலர் இறங்கிச் சென்றுவிட்டார்கள். ஒவ்வொருவரும் பிரிந்து செல்லும்போது நாங்கள் பலவீனப்பட்டதாக உணர்ந்தோம். ஆனாலும் கைகோர்த்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். புதிதாக கைகோர்த்துக் கொண்ட பலரை இணைத்துக்கொண்டு எங்களது பயணம் தொடர்ந்தது.

அண்ணன் சீமான் ஓடிக்கொண்டே இருந்தார். அவரது வேகத்துக்கு நாங்களும் ஓட முயன்றோம். என்னோடு பயணித்து கொண்டிருந்த என் தம்பிகள் தங்களது கடும் உழைப்பினால் அண்ணன் சீமானிற்கு ஈடு கொடுக்கத் தொடங்கினார்கள்.

அப்படி ஓடியவன் தான் தம்பி மோ. கார்த்திக்.இரவு பகல் பாராமல் என்னோடு பயணித்தான். இருள் விலகா பொழுதுகளில் பனி அசையும் இரவுகளில் இளையராஜா பாடல்களோடு என்னோடு கண்கள் முழுக்க கனவுகளோடு பேசிக்கொண்டே வந்தான்.

திடீரென இறந்துவிட்டான். ஒருமாதிரியாக மனது வெறுத்துப் போய்விட்டது. வீட்டிலும் சூழ்நிலைகள் சரியில்லை. மனைவிக்கு உடல் நலம் இல்லாமல் போனது உண்மையில் மனதை பலவீனப்படுத்தி விட்டது. இனி என்ன செய்வது என்பது போல தேக்கம்.

அப்போதுதான் தம்பிகள் ஆனந்தும், கார்த்தியும், லிங்கதுரையும் சாமிநாதனும், பூபேஷ் குப்தாவும் ,விஜியும், பிச்சுவா மணியும் அவர்களோடு கூடிநின்ற தம்பிகளும் நாங்கள் இருக்கிறோம் அண்ணா என்பதுபோல உழைக்கத் தொடங்கினார்கள். இறந்துபோன தங்கள் உடன் பிறந்தார்களின் குடும்பத்தினரை கைவிடாமல் காப்பாற்ற வேண்டுமென என்னிடத்தில் வற்புறுத்தினார்கள். என்னை தூக்கி நிறுத்தினார்கள். மீண்டும் ஒரு லட்சிய பயணத்திற்கு தயாராவோம் என்றார்கள். குறுகிய காலத்தில் ஒரு மீள் எழுச்சி.

எப்போதும் உயிராக என்னை நேசித்து என்னை அழைத்துச் செல்கிற அண்ணன் சீமானிடம் எனது உணர்வுகளை எப்படியும் கொட்டி விடுவேன். அவரைப்போல ஒரு அண்ணன் கிடைப்பது மிக அரிது. சின்ன சின்ன உணர்வுகளை கூட மிகச் சரியாக புரிந்து கொண்டு தம்பிகளின் வலி தீர்க்க உயிர் கசிந்து வாழ்ந்து கொண்டிருக்கிற அண்ணன் அவர். கடுமையான பணிகளுக்கு மத்தியிலும் துணிவாக இரு அண்ணன் வருகிறேன் என்றார் அவர்.

அனைவரும் உழைத்தோம் .ஓடினோம். இது வெறும் அரசியல் கட்சியல்ல. எதனாலும் பிரிக்கமுடியாத ஒரு குடும்பம் என்பதனை ஊருக்கும் உலகத்திற்கும் காட்டுவதற்கு முன்பாக.. எங்களுக்குள்ளாகவே உறுதிப்படுத்திக்கொள்ள நினைவேந்தல் நிகழ்வினை தயார் செய்தோம். நிறைய பொருளாதார சிக்கல்கள். எதிர்பார்த்த இடங்களில் எல்லாம் உதவிகள் கிடைக்காத சூழல்கள். ஆனாலும் தம்பிகள் தளராமல் உழைத்தார்கள்.

தம்பி கார்த்தி வீட்டில் தனித்திருக்கும் அவனது தாய் தந்தையர் அருகில் சென்று அமர்ந்து கொண்டோம். அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டோம்.

நேற்றைய தினம் அண்ணன் வந்தார். எதனாலும் கலங்காத அவரது விழிகள் கலைந்து போன கூடாக மாறிவிட்ட அவரது தம்பிகளின் வாழ்வினை நினைத்து கலங்கி விட்டன. பிள்ளைகளை இழந்து வாடும் தாய் தந்தையரை தனது இரு கரம் கொண்டு அண்ணன் இறுக்கி அணைத்துக் கொண்டார். மூத்த மகனாக நான் இருக்கிறேன் என்றார்.

தம்பி கார்த்தியின் நினைவேந்தல் நிகழ்வில் அண்ணன் பேசியபோது அவரது குரல் உடைந்து போனது. பின்னாலும் முன்னாலும் நின்றுகொண்டிருந்த நாங்கள் அனைவரும் அழுது விட்டோம். இறுதியாக தன்னை உறுதிப்படுத்திக்கொண்டு.. தம்பி கார்த்தியின் இலட்சியக் கனவை நிறைவேற்ற உழைப்போம் என உறுதி கூறி புகழ் வணக்கம் செலுத்தினார்.

நிகழ்ச்சி முடிந்து.. கார்த்தி வீட்டின் முன்னால் ஒரு நாற்காலியில் நான் அமர்ந்து இருந்தேன். பக்கத்தில் கார்த்தியின் அம்மா மெலிதாக விசும்பி கொண்டிருந்தார். இப்படி ஒரு வாழ்வை என்மகன் வாழ்ந்திருக்கிறானே என்று தழுதழுத்த குரலில் என்னிடம் சொன்னார். உண்மையில் அந்த நொடியில் நான் பெருமிதப்பட்டு போனேன். எத்தனையோ உன்னதங்கள் யாருக்கும் தெரியாமல் கரைந்து போகின்ற கால நதியின் கோர ஓட்டத்தில்.. தம்பிகள் கார்த்தி , மணி வாழ்ந்த குறுகியகால லட்சிய வாழ்க்கையை குறைந்தபட்சம் அவர்களது குடும்பத்தினருக்காவது புரிய வைத்து விட்டோம் என்பதுபோல நிறைவு எனக்குள் ஏற்பட்டது.

கண்கலங்க அமர்ந்திருந்த நான் அருகே புகைப்படமாக உறைந்திருந்த தம்பி கார்த்தியின் முகத்தைப் பார்த்தேன்.என்னை பார்த்து அவன் புன்னகைத்தது போல எனக்குத் தோன்றியது.

…. லிங்க துரை என்னை அழைத்து செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்து நின்றான். வண்டி புறப்பட்டது. தம்பிகள் ஆனந்த் கார்த்தி உள்ளிட்ட தம்பிகள் எதையோ நிறைவேற்றிய முகத்தோடு ஏதோ பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நான் கை உயர்த்தி அவர்களுக்கு வணக்கம் சொல்லியபோது அவர்களும் கண்கலங்க புரட்சி வணக்கம் கூற கையை உயர்த்தினார்கள்.

உயர்ந்த கரங்களில் ஒளிரட்டும் வெளிச்சம்.

மணி செந்தில்.