எழுபதுகளின் இறுதியிலும் , எண்பதுகளின் தொடக்கத்திலும் பிறந்தவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான கட்டமைக்கப்பட்ட மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தக் காலகட்டத்தில் பிறந்த நாங்களெல்லாம் இளையராஜாவோடு வளர்ந்தவர்கள். ஏறக்குறைய எம்எஸ்வி காலம் அப்போது இறுதி காலத்தை எட்டியிருந்தது.நாட்டுப்புற அழகியலோடு இளையராஜா அள்ளிக்கொடுத்த மென் சோக செவ்வியல் இசை இரண்டு தலைமுறை காலத்து தமிழ்ச் சமூகத்தை கட்டிப்போட தொடங்கியதும் அந்த காலகட்டத்தில்தான் .

இளையராஜாவின் இசை கேட்கத்தான் காதுகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதாகவே நாங்கள் நம்பினோம். அவரது சமகாலத்து எத்தனையோ நல்ல இசையமைப்பாளர்கள் எங்களது அதிதீவிர இளையராஜா இசை நம்பிக்கைகளால் திரை உலகை விட்டே நகர்ந்து போய்விட்டார்கள். அதுபற்றி எல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்த்ததே இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் இளையராஜா தான் எங்களுக்கு சர்வ மயம்.

அந்தக்காலத்தில் எம்எஸ்வி முன்னொரு காலத்தின் இசையமைப்பாளராக மாறியிருந்தார். 60களின் ஆகப்பெரும் இசையரசன் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி தான். அவரும் ராமமூர்த்தியும் இணைந்து விஸ்வநாதன்-ராமமூர்த்தியாக‌ பல இசை உச்சங்களை தொட்டார்கள். நாங்கள் இந்த காலகட்டத்தை கடந்து பிறந்தவர்கள். எங்கள் பால்ய காலத்தில் எம்எஸ்வி பாடல்களை கேட்பது என்பது பழைய காலத்து ஆள் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் என்பதால் இளையராஜா தவிர நாங்கள் எதையும் கேட்பதில்லை.

ஆனாலும் எங்களுக்கும் ஒரு மூத்த தலைமுறை எங்கள் வீட்டிலேயே இருந்ததால் வேறுவழியின்றி அவ்வப்போது எம்எஸ்வி பாடல்களையும் கேட்க நேரிட்டது. அப்போது வானொலி தான் வீட்டுக்கு வீடு இசைக்கச்சேரி வைக்கின்ற முக்கிய பாடகர்.

“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..” என்ற பாடல் வானொலியில் ஒலிக்க தொடங்கினால் போதும். அதுவரை ஏதேதோ பேசிக் கொண்டிருந்த என் அம்மாவும், அப்பாவும் அமைதியாகி விடுவார்கள்.

என் பதின்பருவத்தில் எனக்கு மிகவும் நெருக்கமான என் தோழி ஒருவள் டி கே ராமமூர்த்தி (விஸ்வநாதன்) இசை அமைத்து வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் வருகிற” கண்கள் எங்கே.. நெஞ்சமும் அங்கே .. என்ற பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பாள். “என்ன இருக்கிறது அதில்..? “என அந்தக் காலத்தில் நான் கேட்டபோது “என்ன இல்லை இதில் ..?”என சிரித்துக் கொண்டே சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் இன்று கேட்கிறபோது அவள் சொன்னது உண்மையாக தான் இருக்கிறது.

எனது சிறுவயதில் “நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா..” என்று சுசீலா வானொலியில் கசிந்துருகும் பொழுதில் என் தந்தையின் கண்கள் கலங்குவதை நான் கண்டிருக்கிறேன். ஒரு பாடலைக் கேட்டுவிட்டு கண் கலங்குவது என்பதை என் தந்தையார் மூலம் தான் முதன் முதலாக நான் அறியத் தொடங்கினேன்.

பிற்காலத்தில் நான் வளர்ந்த பிறகு தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்தது அழகி திரைப்படம். இளையராஜாவின் இசை அந்தப்படத்தை ஒரு காவியமாகவே மாற்றி இருக்கும். அத் திரைப்படத்தில் படத்தின் நடுவில் வருகின்ற “உன் குத்தமா, என் குத்தமா..” என்ற பாடல் ஒலிக்கத் தொடங்குவதற்கு முன்பாக காட்சி அமைப்பில் ஒரு சிறிய மௌனத்தை உணர்வுத் தூண்டலுக்காக இயக்குனர் திட்டமிட்டு வைத்திருப்பார். பால்யக் கால காதலியான தனலட்சுமியை எதிர்பாராமல் சந்தித்த பார்த்திபன் அந்தப் பெண் வாழும் இடமான தெருவோரத்தில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கும்போது மழைத்தூறல் தூறத் தொடங்கும். பார்த்திபன் நனைந்து விடக்கூடாது என்பதற்காக அவரது காதலியான தனலட்சுமி ஆக நடித்த நந்திதா தாஸ் உணவுத் தட்டை குடை போல பிடிக்க.. அதை நிமிர்ந்து பார்க்கும் பார்த்திபன்.. என விரியும் அந்தக் காட்சியில் ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு திரையரங்கமே அமைதியாக இருக்கும் அப்பொழுதில், தனித்து ஒலிக்கும் இளையராஜாவின் குரல்” உன் குத்தமா.. என் குத்தமா.. ” என கேட்கத் தொடங்க
படத்தை பார்த்துக் கொண்டிருந்த என் பக்கத்தில் அமர்ந்து இருந்த ஒருவர் அந்த சிறு மௌனத்தையும், அதற்குப் பிறகு வந்த இளையராஜாவின் குரலையும் கேட்டு தேம்பித் தேம்பி அழத்தொடங்கினார். அதுவரை நாகரீகம் கருதி கட்டிவைத்திருந்த எனது விழிகளின் கோட்டை தகர்ந்து கண்ணீர் எனக்கும் பெருக்கெடுத்தது.

ஒரு நல்ல இசை அப்படித்தான். அழ வைக்கும். ஒரு Guide போல நம் கரம்பிடித்து கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும். நாம் வேண்டுமென்றே நினைக்க தவிர்த்தவை எல்லாவற்றையும் வருந்தி அழைத்து நம் மனதில் அமர வைக்கும்.

அந்தச் சமயத்தில் எனக்கு பாதர் மார்ட்டினின் நினைவு வந்தது.
நான் பள்ளி பயின்ற காலங்களில் ஃபாதர் மார்ட்டின் என்கின்ற பாதிரியார் மன்னார்குடியில் இருந்தார். வானம் உயர்ந்திருக்கும் புனித ஆண்டவரின் தேவாலயத்தின் பக்கத்திலேயே அவரது வசிப்பிடம் இருந்தது. எனக்கு நிறைய கிருத்தவ நண்பர்கள். புனித பைபிளின் கவித்துவ தமிழில் நான் என்னையே இழந்து அலைந்து கொண்டிருந்த காலம் அது. அந்தத் தமிழை கேட்பதற்காகவே நான் தேவாலயங்களுக்கு செல்வேன்.

அங்குதான் பாதிரியார் மார்ட்டின் எனக்குப் பழக்கம். பள்ளி முடிந்து அவருடன் சென்று பேசிக்கொண்டிருப்பேன்.
அவர் தீவிரமான மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதனின் ரசிகர். பிராத்தனை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் அவர் ஏதோ ஒரு எம்எஸ்வி பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்.

ஒரு பின் மாலை நேரம். தேவாலயத்தை கடந்து நான் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது தூரத்தில் ஒலித்த “மாலைப் பொழுதின் மயக்கத்திலே.. ” என்கின்ற அந்த தெய்வீகப் பாடலை நான் கேட்டேன். பேனாசோனிக் டேப் ரிகார்டரில் கேசட் போட்டு கேட்டுக் கொண்டு தேவாலயத்தின் பக்கவாட்டுப் பகுதியில் இருந்த தனது வசிப்பிடத்திற்கு முன்னால் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறே மார்ட்டின் பாதர் மாலைப் பொழுதின் மயக்கத்தில் கண்மூடி மூழ்கியிருந்தார். ஏறக்குறைய முழு இருட்டு. அருகில் இருந்த ஒரு சிறு பீடத்தில் ஒரே ஒரு பெரிய மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. மெழுகுவர்த்தியின் மஞ்சள் நிற ஒளி பாதர் மார்ட்டின் முகமெங்கும் பரவி பரவச ஜோதியில் அவர் நிறைந்திருந்தார்.

நான் அமைதியாக சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு அவரின் எதிரே முன் இருந்த ஸ்டுலில் அமர்ந்தேன். அந்த வளாகத்தில் நானும், பாதரும், புனித ஆண்டவரும் மட்டுமே தனித்து இருந்தோம். நான் வந்தது கூட தெரியாமல் அவர் எம்எஸ்வியின் இசையில் மூழ்கிக் கிடந்தார். அந்த மாபெரும் வளாகம். தனிமை. சூரியன் மங்கிய மாலைப் பொழுது. மெழுகுவர்த்தி ஒளி,தனித்துவமான அந்த இசை என பலதும் சேர்ந்து என் மனநிலையை வேறு மாதிரி ஆக்கத் தொடங்கியது. முன்னொரு பிறவியில் எங்கேயோ கேட்ட பாடல் போல அந்தப் பாடல் இருந்தது.

இருந்தாலும் இளையராஜா தவிர இன்னொரு இசையையும் ரசிக்க முடியும் என்கின்ற ஒரு நிலையை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனவே அந்தப் பாடலை கேட்பதில் இருந்து என்னை விலக்கிக் கொள்ள முயற்சித்தேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் ஒரு சுழி போல அந்த தெய்வீக இசை என்னை இழுக்கத் தொடங்க.. நானும் அமைதியாக அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். ஒருவழியாக அந்த பாடல் முடிவடைந்தது. கலங்கியிருந்த கண்களோடு பாதர் கண்களைத் திறந்தார்.

சின்னப் புன்னகையோடு எனது வருகையை அங்கீகரித்து விட்டு அமைதியாய் இருந்தார். ஒரு நிறைவுக்கு பிறகான அமைதி போல அந்த உணர்ச்சி . சில கணத் துளிகளுக்கு பிறகு நிமிர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தார்.

இந்த எம்எஸ்வி இசை பெரும் போதைடா.. இந்த உலகத்தையே துறந்து விட முடிகிறது. ஆனால் எம்எஸ்வியை மட்டும் விட முடியல என்று எனக்கும் அவருக்குமாக சேர்த்து சொல்லிக் கொண்டார்.

நான் சற்றே வீம்புடன்.. அப்படி எல்லாம் இதில் ஒண்ணும் இல்ல. இப்ப இதையெல்லாம் தாண்டி வேற வடிவத்திற்கு இளையராஜா இசையைக் கொண்டு போய்விட்டார் என்றெல்லாம் நான் பேச தொடங்கினேன்.

இளையராஜா நல்லாதான் பண்றார். அவர் எம்எஸ்வியோட தொடர்ச்சி என்று பாதர் பதிலளிக்க.. அதிதீவிர இளையராஜா ரசிகனான என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இளையராஜா பெரிய ஆளா எம்எஸ்வி பெரிய ஆளா என்பது போல நான் குறைகுடம் போல தளும்பி விவாதிக்கத் தொடங்க.. பாதர் அமைதியாக எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பிறகு கிறிஸ்துமஸ் காலம் முடிந்து மார்ட்டின் பாதரை பார்க்க நான் சென்றிருந்தேன். ஊரிலிருந்து அவரைப் பார்க்க உறவினர்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். மார்ட்டின் பாதர் அமைதியாய் தலைகுனிந்தவாறு அமர்ந்து இருந்தார். வந்திருந்தவர்களில் வயதான அம்மா ஒருவர் மார்ட்டின் ஃபாதரின் தோளைத் தட்டி அவருக்கு ஆறுதலாக ஏதோ சொல்லிவிட்டு கிளம்பலாம் என்பதுபோல மற்றவர்களைப் பார்க்க.. மற்றவர்களும் அமைதியாய் அங்கிருந்து வெளியேறினர். வாசலில் நின்று கொண்டிருந்த நான் எப்போதும் உற்சாகமாக இருக்கிற மார்ட்டின் பாதர்
எதற்காக தலைகவிழ்ந்து சோகமாக இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள உள்ளே சென்றேன். அவர் என்னை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

நான் குரலைக் கனைத்தவாறு என்ன பாதர் என்ன ஆச்சு.. என கேட்டேன்.
பாதர் அமைதியாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். மெதுவாய் நிமிர்ந்து பார்த்தபோது அவரது கண்கள் முழுக்க கண்ணீர். என்ன பாதர் என்ன ஆச்சு என்று நான் பதட்டமாய் கேட்க.. எனக்கு வேண்டியவங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி இறந்து போயிருக்காங்க.. எனக்கு இப்பதான் தெரிய வருது என்று சொல்லி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அமைதியாய் எழுந்து சென்ற அவர் வழக்கமான அவரது டேப் ரிகார்டரில் எங்கிருந்தோ தேடி ஒரு கேசட்டை எடுத்துப் போட்டார். சுசீலா அவர்களின்
நீண்ட ஹம்மிங்கோடு அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

அதுதான் “பார்த்த ஞாபகம் இல்லையோ..” என்ற புதிய பறவை திரைப்படத்தின் பாடல். அதற்கு முன்னால் அந்தப் பாடலை நான் சில முறை கேட்டிருந்தாலும் இப்போது முதல்முறையாக கேட்பது போன்ற ஒரு மன உணர்ச்சி. பாதர் பாடலை ஒலிக்க விட்டு விட்டு அவரது சாய்வு நாற்காலியில் அப்படியே கண்மூடி சாய்ந்தார். பாடல் ஓடிக்கொண்டே இருந்தது. மூடிய மார்ட்டின் பாதர் கண்களிலிருந்து சாரை சாரையாய் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. பாடல் முடிந்த பிறகு இறந்துப்போனது யாரது என கேட்கலாம் என நான் காத்திருந்தேன்.

பாடலும் முடிவடைந்தது. நான் அவருக்கு ஆறுதல் சொல்லலாம் எழுந்து அவரது அருகே செல்ல முயற்சித்தபோது.. மீண்டும் சுசீலா அம்மாவின் குரல் கேட்கத் தொடங்கியது. ஆமாம் அதே பாடல்தான். மீண்டும் “பார்த்த ஞாபகம் இல்லையோ..” ஒலிக்கத் தொடங்கியது.

எழுந்த நான் அப்படியே அமர்ந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் பாடல் முடிய அதே பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஒரு கேசட் முழுக்க ஒரே பாடலை பதிவு செய்து வைத்திருந்தார்கள்.

மார்ட்டின் பாதர் அழுதுகொண்டே இருந்தார். இரண்டு மூன்று முறைகளுக்கு பிறகாக அந்தத் தனிமையும், பாதர் இருந்த மனநிலையின் அழுத்தமும் என்னை ஏதோ செய்ய.. நான் அப்படியே அமைதியாக எழுந்து என் வீட்டிற்கு புறப்பட்டேன்.

அந்த பாடலுக்கும், அவருக்குமான உறவு என்பது எப்படிப்பட்டது என்று என்னால் யோசிக்கவே முடியவில்லை. அவர் அழுததை பார்த்தால் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவருக்காகவே அந்தப் பாடலை உருவாக்கி இருப்பார்கள் போல என நம்பத் தோன்றியது.

கடந்த காலம் கடந்தவை தான் என்றெல்லாம் நாம் ஆயிரத்தெட்டு ஆறுதல்களை, நியாயங்களை, தர்க்கங்களை நமக்குள்ளாக சொல்லிக்கொண்டாலும் கடந்தவை எதையும் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது. வாழ்வின் சூட்சம புள்ளிகளில் ஏதோ ஒன்றில் சிக்கிக்கொண்டு, ஒரு உடைபட்ட அணை போல கடந்த கால நினைவுகள்
கட்டவிழ்க்கப்பட்டு பெருகும் போது.. எதனாலும் மறைக்க முடியாதத் துயர் இருட்டில் சிக்கிக் கொள்வது தான் மனிதமனம் கொண்டிருக்கிற துன்பியல் விசித்திரம்..

சில நாட்கள் கழித்து மார்ட்டீன் பாதரை பார்க்க தேவாலயத்தின் வளாகத்திற்கு சென்றிருந்தபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.‌ தொலைதூர ஊருக்கு மாற்றலாகிச் சென்று விட்டதாக சொன்னார்கள். அதன்பிறகு அவரை நான் எங்கும் பார்க்கவில்லை.

முதன்முதலாக எம்எஸ்வி இசையில்லாத அந்த வளாகத்தில் புனித ஆண்டவரும் நானும் மட்டுமே தனித்திருந்தோம்.
எப்போதும் கருணையின் கண்களை கொண்டிருக்கிற தேவ குமாரனின் விழிகளில் அன்று சோகத்தின் சாயல் படிந்திருந்ததாக எனக்குத் தோன்றியது.