[youtube]https://www.youtube.com/watch?v=KZyn3KCMFI4[/youtube]

 

❤️

கார் அமைதியாக சென்று கொண்டிருந்தது. தோளில் சாய்ந்தவாறே அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். தோளில் சாயும் தருணங்களில் எல்லாம் குழந்தையைப் போல் ஆகி விடுகிறாள். அப்படி என்ன இருக்கிறது என் தோளில்… என நிறைய முறை கேட்டிருக்கிறேன். அதற்கு பதில் சொல்லாமல் “நீ அமைதியா ஓட்டிக்கொண்டே போ. நான் தூங்கணும் டா” என சொல்லியவாறு தூங்கி விடுகிறாள். ஒரு கோடைகால பின்னிரவில் அந்த நெடும் வழிச்சாலையில் நானும் என்னுடன் நீண்ட நேரமாக பயணித்து வரும் ஒரு நிலவும், சில இளையராஜா பாடல்களும் தனித்து இருந்தோம். என்னைப் பார்த்தவுடன் ஏன் இப்படி ஆகிவிடுகிறாய் எனக் கேட்டதற்கு அவளிடம் ஒரு மர்மமான புன்னகை தான் மிஞ்சியது. நான் புரியாமல் அவள் முகத்தையே உற்றுநோக்கி கொண்டிருந்தபோது.. மென்மையான குரலில் சொல்கிறாள்.. “அது அப்படித்தான். நான் விளையாடுவதை ரசிக்க நீ மட்டும்தான் இருக்கிறாய். உன் கண்களில் நான் விழும் போதெல்லாம் சிவந்துக் கொண்டே போகிறேன்” என்கிறாள். இப்போதெல்லாம் பேசுவதைவிட உன்னுடன் எங்கோ போய்க் கொண்டிருப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்கிறாள். அந்த நெடுஞ்சாலை முடிந்து ஒரு மலைச்சாலையில் மீது கார் ஏற தொடங்குகிறது. எதிரே எந்த வாகனமும் வரவில்லை. எனக்கு முன்னால் பெரும்பெரும் பூதங்கள் போல மலைகள் அதனூடாக மலைக்காடுகள் என அந்தப் பின்னிரவு சற்று அச்சமாகத்தான் இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவளை அப்படியே மறுபுறம் சாய்த்து வைத்துவிட்டு காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த மலைச் சாலையில் தனியே நின்று கொண்டிருக்கிறேன். அடர் குளிர் இரவு. இதேபோன்ற எத்தனை இரவுகள் இந்த மலைகள் மீது நிழலாக படிந்திருக்கும் என விசித்திரமாக யோசித்தவாறு நின்று கொண்டிருக்கிறேன்.‌ ஒரு காதல் தரும் இரவு மிக விசித்திரமானது. பூக்களோடு வருகிற உதிரிகள் போல அந்த இரவு முழுக்க ஏகாந்த நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டே இருக்கின்றன. ஒரு முறை அவளது கூந்தலை நான் இரவு என வர்ணித்த போது.. அதை கலைப்பதற்கு தான் விடியலின் முன் வெளிச்சச் சுடர்கள் போல உன் விரல்கள் இருக்கின்றனவே என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறாள். அடிக்கடி சிரிக்காதே. நீ அழகாகிக் கொண்டே போகிறாய் என்கிறேன். என் முன்னந்தலையை மெலிதாக கலைத்து ஓடி விடுகிறாள்.

❤️

பயணம் மீண்டும் தொடர்ந்தது. திருப்பங்களாலும் ஏற்றங்களாலும் நிரம்பிய அந்த மலைச்சாலை வளைந்து நெளிந்த பாம்பின் உடலைப் போல வசீகரமான ஒன்றாக எனக்கு தோன்றியது. அந்த மலைச்சாலை இறுதியில் ஒரு ஏரிக் கரையில் முடிவடைகிறது. தூங்கிக் கொண்டிருந்த அவளை மெதுவாக எழுப்பினேன். கண்களை கசக்கி நாம் எங்கே இருக்கிறோம் என்று கேட்கிறாள்.என்னால் எளிதாக சொர்க்கத்தில் என்ன சொல்லிவிட முடியும். ஆனால் நான் மௌனமாக கீழே இறங்கு என்று சொல்லிவிட்டு நானும் இறங்கினேன். இருவருக்கும் முன்னால் ஒரு படுத்திருக்கும் யானையை போல ஒரு ஏரி சாய்ந்து கிடந்தது.
அந்த அதிகாலை நேரத்தில் யாருமில்லா தருணத்தில் பனி போர்த்திய ஏரியை கண்ணிமைக்காமல் அவள் என் தோளில் சாய்ந்து கொண்டு பார்த்துக் கொண்டே இருக்கிறாள். “இப்படி ஒரு இடத்திற்கு என்னை அழைத்து வரவேண்டும் என உனக்கு எப்படித் தோன்றியது” எனக் கேட்கிறாள்.” சில எண்ணங்களுக்கு காரணங்கள் கேட்காதே. நீ என்னுடன் இங்கே வரவேண்டும் என எனக்குத் தோன்றியது. அழைத்து வந்திருக்கிறேன்.” *என் கையில் ஒரு விடியல் இருக்கிறது. அதை இன்னும் சற்று நேரத்தில் என் தேவதைக்கு பரிசளிக்க நான் காத்திருக்கிறேன்” என்கிறேன். இந்த விடியல் போல பரிசுத்தமானது உலகில் ஏதுமில்லை என நான் சொல்லிவிட்டு அவளை பார்க்கும் போது அவளது கண்கள் கலங்கியிருந்தன. தன்னை யாருமே இதுவரை இப்படி நேசித்தது இல்லை என நினைக்க வைப்பது தான் காதலின் அதிதீவிர ரசவாதம். பனியின் ஊடாக மெல்லிய வெளிச்சம் பரவத் தொடங்குகிறது. ஏரிக் கரையில் இருந்த மரங்களிலிருந்து பறவைகளின் சிறகடிப்புகள், கூவல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாக அந்த விடியல் மழைத்துளி மண்ணில் கரைவது போல எங்களுக்குள் கரையத் தொடங்க .. நாங்கள் உருகத் தொடங்கி இருந்தோம். திடீரென என் கழுத்தில் மெல்லிய ஈரம் பதிய … நான் மெலிதாக புன்னகைத்துக் கொண்டேன். இதைவிட மேலான பரிசை அவளுக்கு நானும், எனக்கு அவளும் அளித்திருக்க முடியாது என்கிற நினைவில் அந்த நிமிடங்கள் உறைந்திருக்க..

விடியத் தொடங்கியிருந்தது.