தலைமை என்பது பன்மைச் சொல் அல்ல. கூடி செயல் செய்யலாம். கூடி தலைமையேற்க முடியாது. தலைமையேற்க உறுதி வாய்ந்த தனி ஒருவனே தகுதி உடையவனாகிறான்.இந்த உலகத்தின் எல்லா புரட்சிகர மாறுதல்களும் தனி ஒரு மனிதனின் சிந்தனைத் துளியிலிருந்து தான் வெளிப்படுகிறது. இந்த உலகத்தின் எல்லா தத்துவங்களும், எல்லா மதங்களும், எல்லாப் புரட்சிகளும், தனி ஒரு சில மனிதச் சிந்தனைகளின் விளைச்சல்தான். தன்னம்பிக்கை கொண்ட தனிமனிதர்கள் ஒரு சிலரின் வாழ்க்கை கதைகளே உலக வரலாறு என்கிறார் விவேகானந்தர். உலகின் இருள் நீங்க சிந்தித்த எடிசன் என்கின்ற அந்தத் தனி ஒருவன் தான் உலகத்தின் வெளிச்சமாக மாறிப் போகிறான். ஒரு தொடர்வண்டிப் பயணத்தில் காந்தி என்கின்ற ஒரு தனி ஒருவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமதிப்பு தான்
1947 ஆகஸ்ட் 15 அன்று மூவர்ண கொடி டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட ஒரு காரணமாக அமைந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்திலிருந்து உதிர மண்ணை அள்ளிக் கொண்டு உருவேற்றிக் கொண்ட ஒரு தனிச் சிறுவன்தான் பகத்சிங் என்ற பெயரில் புரட்சிகர அரசியலின் அடையாளமாக மாறிப் போனான். பிரபாகரன் என்கின்ற ஒரு தனிமனிதனின் துருப்பிடித்த அந்த ஒற்றை துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட ஒரு தோட்டா தான் அடுத்து வந்த 30 ஆண்டுகால போராட்டத்தின் திசையை தீர்மானித்தது. சேகுவேரா நல்ல தளபதிதான். ஆனால் அவருக்கும் கூட பிடல் காஸ்ட்ரோ என்கின்ற ஒரு தனிமனிதன் தலைவராக தேவைப்பட்டார். அலைபாயும் கடலுக்கு நடுவே திசையற்று நிற்கின்ற கப்பலுக்கும் கூட ஒரே ஒரு திசைமானி தேவைப்படுகிறது. கரை நெருங்குவதை கண்டுணர்ந்து நம்பிக்கை கொள்ள ஒரே ஒரு கலங்கரை விளக்கம் தேவைப்படுகிறது. ஏங்கல்சுகளால் எல்லாவற்றையும் எழுதிவிட முடியாது. அதற்கு ஒரு கார்ல் மார்க்ஸ் தான் சிந்திக்க வேண்டும்.

அவரை முதன்முதலாக நான் நேரில் கண்ட இடம் ஒரு சிறைச்சாலை. கடந்த 2008ம் ஆண்டு பாண்டிச்சேரி சிறையில் ஒரு தனி அறையில் தனிமையாக அவர் அமர்ந்திருந்த போதுதான் அவரை கண்டேன். இனம் அழிந்து கொண்டிருந்த காலம் அது. உறங்கா இரவுகள் தந்த விழி சிவப்பில் கலங்கிய கண்களோடு அவர் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தனி ஒருவன் தான். ஈழத்தில் அவர் உயிருக்கு உயிராக பழகியவர் தளபதிகள், பெரும் வீரர்கள் ஒவ்வொருவராக வீர மரணம் அடைகிற செய்திகளை ரணம் பட்ட இதயத்தோடு அவர் உள்வாங்கி உருக்குலைந்த நாட்களில் தனி ஒருவனாகத்தான் இருந்தார். எல்லாம் அழிந்து முடிந்த காலகட்டத்தில், இனி ஏதாவது ஒன்று செய்ய வேண்டுமே என்ற பதைபதைப்பில், அடுத்து என்ன செய்யலாம் என்று அனைவரும் கைப்பிசைந்து நிற்கும்போது, சீமான் என்கின்ற அந்தத் தனி ஒருவன் தான் தனித்தக் குரலில் சொன்னான். முள்வேலி கம்பிகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்க மதுரையில் கூடுவோம். “அறுத்தெறிவோம் வாரீர்.” 2011 – ஒரு நூற்றாண்டு கடந்த ஒரு பேரியக்கம். பலம்வாய்ந்த ஆளும் கட்சியோடு கூட்டணி சேர்ந்து நிற்கிறது. எம் இனத்தை துடிக்கத் துடிக்க அழித்த காங்கிரஸ் 63 இடங்களில் தமிழ்நிலத்தில் துணிச்சலாக போட்டியிடுகிறது. இப்போது இருக்கின்ற கூட்டம் போல கூட இல்லை நாங்கள். ஒருவித மனச்சோர்வு அந்த நேரத்தில் எங்களை சூழ்ந்திருந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என அனைத்து தரப்பிலும் இருந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன. காங்கிரஸின் உதிரம் படிந்த கை மீண்டும் தமிழ்நாட்டில் எழுந்தால்.. நாம் தமிழர் என நாங்கள் கூடி முழங்கி எழுந்ததற்கு பொருளில்லை என்கின்ற அச்சம் எங்களால் மனதில் குடிகொண்டிருந்தது. ஏனெனில் நாங்கள் அன்று ஒரு கட்சி அல்ல. ஊருக்கு ஊர் சிறு குழுக்களாக திரண்டு கொண்டிருந்தோம் அவ்வளவுதான். 63 இடங்கள். வலு வாய்ந்த திமுக காங்கிரஸ் கூட்டணி. எப்படி எதிர்ப்பது என எங்கள் யாரிடத்திலும் எந்த திட்டமும் இல்லை. முன்னணி நிர்வாகிகள் சிலர் சொன்னார்கள். தேர்தலில் போட்டியிடாத வைகோவிடம் சென்று அவரையும் அழைத்துக்கொள்வோம் என்றார்கள். இவர்கள் பேசியது அறிந்த வைகோ அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு படுத்து விட்டது வேறு கதை. எதுவும் எங்களுக்கு சாதகமாக இல்லாத சூழல் அன்று.எங்களுக்கு முன் அமர்ந்திருந்த சீமான் என்கின்ற அந்தத் தனி ஒருவன் தான் சொன்னான். “இது வெறும் தேர்தல் அல்ல. சோனியா காந்தி மகன் ராகுல் காந்திக்கும் பிரபாகரனின் தம்பி சீமானுக்கும் நடக்கின்ற யுத்தம்.” “தமிழினத்தின் உதிரம் படிந்து சிவந்து இருக்கிற காங்கிரசின் கையை வெட்டி வீழ்த்துவோம், காங்கிரஸைக் கருவறுப்போம்” என்று முதலாவதாக அந்தத் தனி ஒருவன் தான் எழுந்து நின்று சொன்னான். தலைவரை தத்துவமாகக் கொண்டு அவர் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். காங்கிரசை வீழ்த்த அன்று எடுத்த முடிவு சீமான் என்ற தனி ஒருவன் எடுத்த முடிவு. முடிவில் காங்கிரஸ் முடிந்தது.

புலிக்கொடி தமிழக மண்ணில் எழுந்து பறந்தது. 2016. பல கட்சிகளிடமிருந்து அழைப்பு. ஆனால் சீமான் என்ற தனி ஒருவன் எங்கள் யாரிடமும் கேட்கவில்லை. தனித்துப் போட்டி என தன்னம்பிக்கையோடு அறிவித்தான். அவன் கரம் பிடித்து நடக்கிற எங்களுக்கு கூட அந்த முடிவு ஒரு அதிர்ச்சி தான். சென்னையில் நடந்த பொதுக்குழுவில் அந்த முடிவை அறிவித்தபோது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதன்மையான எட்டு பேர்களில் நானும் ஒருவன். ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறேன். இந்த முடிவு சரியா தவறா என்று எனக்கு தெரியாது. என் மனதிற்குள் கடுமையான போராட்டம். அந்த இரவில் அண்ணன் அலைபேசியில் வந்தான். “எதற்கும் கவலைப்படாதே. நான் இருக்கிறேன். என் தம்பி தங்கைகளுக்காக நான் ஓடுவேன். வாக்கு கேட்பேன்‌. துணிந்து நில்.” என்றான். அப்போதும் அவன் தனி ஒருவன் தான். வேட்பாளர்களாக நின்ற நாங்கள் யாரும் அடையாளம் அற்றவர்கள். புதியவர்கள். எதுவுமில்லாத இளையவர்கள்.வரலாற்றின் வீதிகளில் முகமற்ற எங்களுக்கு சீமான் என்கின்ற தனி ஒருவன்தான் முகவரியாகிப் போனான். பொதுத் தொகுதிகளில் ஆதித் தமிழர்கள் நின்றார்கள். பெருமங்கை ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு திருநங்கை சகோதரி களத்தில் நின்றார். வேட்பாளர்கள் யாருக்கும் அவரவர் சாதி பெரும்பான்மை இருக்கின்ற இடத்தில்
இடமில்லை. பொதுத் தொகுதியில் எப்படி ஆதித்தமிழரை நிறுத்தலாம் என்பதான கேள்விகள். அவன் சாதி பார்த்து நீ வாக்களிக்க யோசித்தால் என்றால்.. உன் ஓட்டு எனக்கு வேண்டாம். உன் ஓட்டு எனக்கு தீட்டு என கம்பீரமாக அந்த தனி ஒருவன் தான் அறிவித்தான். ‌ அந்த தனி ஒருவன் தான் வீதிக்கு வீதி ஓடினான். எதுவுமற்ற தம்பி தங்கைகளுக்கு எல்லாமாகவும் இருந்து வாக்குகள் சேகரித்தான். இப்படித்தான் 2016ல் படைத்தோம் புதிய அரசியல் வரலாறு.

2019 பாராளுமன்றத் தேர்தல். சட்டமன்ற தேர்தலை விட இன்னும் கடுமையான களம். கட்சியின் பலத்தை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம்.பலமான வேட்பாளர்களை நிறுத்துவோம் என அனைவரும் முடிவெடுக்கிறோம். அந்தத் தனியன் அப்போது அமைதியாக இருக்கிறான். நாங்கள் எல்லோரும் பேசி முடிக்கிறோம். இறுதியாக பேச எழுந்த அவன் மொத்தம் 40 இடங்களில் 20 இடம் ஆண்களுக்கு 20 இடம் பெண்களுக்கு. என அறிவிக்கிறான்.
வழக்கம் போல் நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம். ஆனாலும் அந்த சீமான் என்ற தனி ஒருவன் வற்றாத தன்னம்பிக்கையோடு 20 பெண்களையும் 20 ஆண்களையும் வேட்பாளராக நிறுத்துகிறான். அப்போதும் அவன் தனி ஒருவன் தான். இப்படித்தான் 2016ல் பெற்ற நாலரை லட்சம் வாக்குகள் அடுத்த மூன்றே வருடங்களில் நான்கு மடங்காக உயர்ந்து 17 லட்சம் ஆனது. உண்மையின் கனல் வீசி தமிழின் அனல் பூசி முழங்கிய அந்த தனி ஒருவனது முழக்கங்களால் தான்
அடையாளமற்ற ஒரு இளைஞர் கூட்டம் அரசியல் அதிகாரம் நோக்கி அணியமாகி வருகிறது. எப்போதும் அவன் தனி ஒருவனாகத்தான் இருக்கிறான். அரசியலுக்காக கூட யாரிடமும் கூட்டு வைப்பதில்லை. அவன் அவனது அண்ணன் போலவே யாரிடமும் சேராமல் தனித்தே தனி ஒருவனாய் நிற்கிறான். இனம் காக்கின்ற இப்பணியை அவன் செய்யத் தொடங்கும்போது இன்று உடன் நிற்கின்ற நாங்கள் யாரும் அன்று அவனுடன் இல்லை. நாளையே நாங்களும் நகர்ந்தாலும் அவன் காலம் கையளித்த இப்பணியை கட்டாயம் செய்து பயணித்துக் கொண்டுதான் இருப்பான். எவரையும் நம்பி இல்லை அவன். ஆனால் அவனை நம்பி எண்ணற்ற இளம் புரட்சியாளர்கள் இலட்சியப் புன்னகையோடு அவன் பின்னால் நிற்கிறார்கள். கூடி நிற்கிறோம். ஆனால் முன்னால் அவன்தான் நிற்கிறான் கூடி வாழ்கிறோம். ஆனால் அவன்தான் தலைமையேற்கிறான். தீர்மானங்களையோ முடிவுகளையோ யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் தலைவனாக அவன் தான் வழி காட்டுகிறான். ஆளாளுக்கு முடிவெடுத்தால் போகிற பயணம் முடியாது. சரியான தனி‌ ஒருவன் தலைமை ஏற்க மறுத்தால்.. எந்த இனமும் விடியாது. கூடிப் பேசிக் கொண்டிருந்தால் விவாதம் மட்டுமே மிஞ்சும். கடமையாற்ற களம் செல்பவர்கள் மனதில் தலைவன் சொல் மட்டுமே எஞ்சும். கூட்டுத்தலைமைகளால் இனத்திற்கான விடுதலைக் கூடு கட்ட முடியாது. வானத்தின் எல்லையைத் தொட்டு பறக்கும் வல்லூறு ஒன்றின் வலிமை கொண்ட தனி ஒருவன்தான் இனத்திற்காக நாடு கட்ட தகுதியானவன். இது தனி மனித துதிபாடல் அல்ல. இலட்சிய உறுதியில் மாறாமல் நீண்டகாலம் பயணித்து எப்படியும் இனத்தின் விடுதலை இலக்கை வென்று முடிக்கின்ற , எப்போதாவது வரலாற்றின் போக்கில் தமிழ்த்தேசிய இனத்தில் தோன்றுகிற தனி ஒருவன் பற்றிய தேடல்.அது குறித்த புரிதல். இதையெல்லாம் அறிந்து தான் இறுமாப்போடு சொல்கிறோம். சீமான் என்கின்ற ஒருவன் தான் எழுதப்பட இருக்கிற நாளைய நம் இனத்தின் வரலாறு.