[youtube]https://www.youtube.com/watch?v=3nisKz887rU[/youtube]

இரவின் சிறகுகளால் மூடப்பட்டிருந்த அந்த பேருந்து நிலையத்தில் நீயும் நானும் நின்று கொண்டிருந்தோம். அது ஒரு வழக்கம் போல ஒரு இயல்பான வழியனுப்பல் தான் என படபடத்து, துடிதுடித்து அலைமோதிக் கொண்டிருந்த நம் மனதிற்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டோம். அது ஒரு நிரந்தர பிரிவாக அமைந்து விடுமோ என்கின்ற பயத்தில் இருவருக்குமே பேச முடியவில்லை. பேச முடியா அந்த மௌனம் ஒரு இறுகிப்போன கனத்த ஒரு உலோகச் சுவராக நம்மிடையே அருவமாக எழுந்து நின்றது. ஏதோ பேச வேண்டும் என்பதற்காக “தண்ணீர் பாட்டில் வேண்டுமா” என நான் கேட்க..அவள் வேண்டாம் என்பதுபோல தலையசைத்தாள். அதைத்தாண்டி பேசுவதற்கு எதுவுமில்லை.அது சொற்கள் தீர்ந்த தருணம். எல்லாவற்றையும் இந்த வாழ்க்கையில் நாம் கொட்டி முடித்திருக்கிறோம். நாம் வாழ்ந்தது ஒரு வாழ்க்கை என்று அர்த்தப்படுத்திக் கொள்வதா.. அல்லது நிகழும் வாழ்க்கையில் இதுவும் நிகழ்ந்தது என உணர்ந்து கொள்வதா என்பதில் எப்போதுமே எனக்கு மனக்குழப்பம் உண்டு. ஆனாலும் அக்கணத்தில் நாம் சாகாமல் உயிர்ப்புடன் இருந்தோம் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஒரு கனவு போல நிகழ்ந்து விட்டிருக்கிறது என்றெல்லாம் நீயும், நானும் நிகழ்ந்தவைகள் அனைத்தையுமே ஒரு கனவாக கடந்துவிட முடியாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் கடக்கவே முடியாத ஒரு பெரும் பாலைவனமாக நம் நினைவுகள் மாறிவிட்டன என்பதை அக்கணத்தில் நாம் உணர்ந்தே இருந்தோம். ஆளரவமற்ற அந்தப் பாலைவனத்தில்.

அலைச்சலும் உளைச்சலும் நிரம்பிய இந்தக் கொடும் வாழ்வினை தணித்துக்கொள்ள ஒரு இசையமைதி வேண்டி நாம் அலையப் போகிறோம் என்பதுதான் நாம் எதிர்கொண்டிருந்த இந்த வாழ்வின் மீதான பெரும் அச்சம். உண்மைதான். உனது விழிகளில் நான் அடைந்த அந்த இசையமைதி இதுவரை நான் எங்கும் அடையவில்லை என்பதும்.. அதைத் தேடி அலைந்து திரிவதை தான் இந்த வாழ்க்கையின் கொடும் விதி என நான் அர்த்தப் படுத்திக் கொள்கிறேன் என்பதும் நான் அறிந்தது தான். என்னவோ தெரியவில்லை. அன்று நாம் எதிர்நோக்கியிருந்த அந்தப் பேருந்து வெகு நேரமாகியும் வரவில்லை. அந்தக் கால தாமதத்தை காலம் நமக்கு காட்டிய அன்பின் வரமா.. அல்லது ஈவு இரக்கமற்ற வாழ்வின் கடைசித்துளி கருணையா என்றெல்லாம் அப்போது என்னால் ஆராய முடியவில்லை. ஆனாலும் பேரவலம் நிறைந்த ஒரு நரகத்திற்குள் நாம் திரும்பிச் செல்வதற்காக கையறு நிலையில் நின்று கொண்டிருந்தோம் என்கிற ஒத்த மன உணர்வில் நாம் உறைந்திருந்தோம். எந்தவிதமான சம்பிரதாய விடைபெறுதல்களும் நமக்குள் அன்று நடைபெறவில்லை என்பது தான் இன்றும் நான் அடைந்திருக்கிற மிகப் பெரிய ஆறுதல். என்னை நீ பார்த்துக் கொண்டே இருந்தாய். நான் வேறு எங்கோ கவனித்துக் கொண்டிருப்பதாக உனக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக அருகே யார் தோளிலோ தூங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். இடம்/ காலம்/ சூழல் மறந்த ஒரு குழந்தையின் உறக்கம் தான் எவ்வளவு புனிதமானது… இனி நமக்கு வாய்க்கவே போவதற்ற அந்த உறக்கம் தான் நான் அந்த நொடியில் கண்டடைந்த மகத்தான மானுட தரிசனம். இறுதியில் தாமதமாக போன அந்த பேருந்தும் வந்தது. மீண்டும் அதே கேள்வியை நான் கேட்டேன். “தண்ணீர் பாட்டில் வேண்டுமா…” எத்தனை முறை இதே கேள்வியை கேட்பாய் என்பதுபோல என்னை நீ நிமிர்ந்து பார்த்தாய். அந்த நிமிடத்தில் பொங்கி வருகின்ற எல்லாவற்றையும் ஏதோ ஒரு கேள்விக்குள் அடக்க முயலும் அபத்தம் எனக்கும் புரிந்தது. என்னிடமிருந்த உன் பையினை மெலிதாக வாங்கிக்கொண்டு தோளில் மாட்டிக் கொண்டாய். என் கையில் இருந்த பையை வாங்கும் அந்த நொடியில் உன் விரல்கள் எனது விரலோடு உரசி விடக்கூடாது என்கின்ற மிகுந்த எச்சரிக்கை உன்னிடம் இருந்தது குறித்து எனக்கு இதுவரையில் எந்த ஆச்சரியமும் இல்லை. அந்த ஒற்றை உரசல் போதும். அந்த சின்னஞ்சிறு தீப்பொறி உனக்கு அது வரை நிகழ்ந்த அனைத்தையும் ஒருமுறை திரைப்படமாக காட்டிவிடும் என்பதையும்… அந்தப் பொழுதில் தன் வாழ்வையே ஒரு திரைப்படமாக பார்க்க நீ அஞ்சினாய் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. செல்கிறேன் என்பது போல மெலிதாக தலையசைத்தாய். எனது கண்கள் கலங்கியிருந்தன. இனி மீளவே முடியாத ஒரு பாதையில் உன்னை அனுப்பி வைத்துவிட்டு இந்த வாழ்வு முழுக்க நான் தனியே வாழ வேண்டும் என்கின்ற பெரும் சாபம் வெயில் அடிக்கும் நிலத்தில் உயரப் பறக்கும் ஒரு கழுகின் நிழல் போல எனக்குள்ளும் துளிர்த்தது.

அக்கணத்தில் ஏதோ சொல்ல நினைத்தாய் என இன்றளவும் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நல்லவேளை நீ எதுவும் சொல்லவில்லை. போய் வருகிறேன் என்றோ, போய் எப்படியாவது தொடர்பு கொள்கிறேன் என்றோ , போய் அலைபேசியில் அழைக்கிறேன் என்றோ எந்த வாக்குறுதிகளும் இல்லாத ஒரு வெறுமை விடைபெறுதல் அது. ஏதாவது சொல்லி விட்டுப் போயிருந்தால். அந்த சொல்லையே பிடித்துக்கொண்டு நான் அலைந்து தீர்ப்பேன் என உனக்கும் தெரியும் தானே. படிக்கட்டுகளில் ஏறும் போது கலங்கி இருந்த என் கண்களின் ஊடாக எனக்குத் தெரிந்த காட்சி நீ என்னை திரும்பி பார்ப்பதான ஒரு தோற்றம். நீ உள்ளே ஏறி சென்று விட்டாய். பேருந்து நகரத் தொடங்கியது. நான் அதே இடத்தில் நின்று கொண்டே இருந்தேன். பேருந்து என்னை விட்டு விலக.. விலக.. பிரிக்க முடியாத என் ஆன்மாவின் ரத்தமும் சதையும் நிரம்பிய துண்டு ஒன்று என்னை விட்டு விலகுவது போன்ற வலி. மெதுவாக நான் காரில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன். எனக்குச் சற்று முன்னால் அந்த பேருந்து சென்று கொண்டே இருந்தது. நானும் பின்னால் சிறிது நேரம் போய்க்கொண்டே இருந்தேன். சட்டென ஒரு வளைவில் அந்த பேருந்து எதிர்ப்புறம் பயணிக்க. நான் அப்படியே காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த முச்சந்தியில் இறங்கி நின்றேன்.

அந்த நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது எதேச்சையான ஒரு நிகழ்வு என இந்த நொடி வரை நான் நம்பவில்லை.