மனித இன வரலாற்றில் தொன்மை இனமாக அறியப்படுகிற தமிழர் என்கின்ற தேசிய இனம் மற்ற இனங்களைக் காட்டிலும் நாகரீக வளர்ச்சியிலும் பண்பாட்டு முதிர்ச்சியிலும் அறிவுசார் இனமாக விளங்குகிறது என்பது பெருமித கதையாடல்கள் அல்ல , தொல் அறிவியல் ஆய்வுகள் மூலம் வரலாற்றின் போக்கில் தொடர்ச்சியாக நிறுவப்பட்டு வருகிற உண்மை என்பதை சமீபத்திய பல ஆய்வாளர்கள் உரிய ஆதாரத்தோடு நிரூபித்திருக்கிறார்கள்.
தொன்ம இனமான தமிழர் இனம் வாழ்ந்து வருகிற இந்த நிலம் வெறும் மண்ணும், காடும், கடலும், மலைகளும் நிரம்பிய சக்கை குவியலல்ல. இந்த மண் ஆதிகாலம் முதல் இடையறாது அறுந்துவிடாது தொடர்ந்து வரும் பண்பாட்டு விழுமியங்களால் செழிப்புற்று உயிர்த்திருக்கின்ற மிகப்பெரிய ஆய்வுக் களமாக, மனித இனத்தின் தோற்றம் பற்றியும் பண்பாட்டுத் தொடர்ச்சி பற்றியும் ஆய்வு செய்கிற பண்பாட்டு ஆய்வாளர்கள் முன்னால் விரிந்திருக்கிறது.மனித இனத்தின் நம்பிக்கைகளின் தொட்டிலாய் ஆதி நிலமான தமிழர் நிலம் விளங்குகிறது. ஆதி மனிதன் தோன்றிய காலகட்டத்தில் தன்னை இயற்கையோடு இணைந்து தகவமைத்து தக்க வைத்துக் கொள்வதில் அவனது பண்பாடு சார்ந்த நம்பிக்கைகள் மிகப்பெரிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக தமிழன் பலவிதமான சமயங்கள், பல்வகையான வழிபாட்டு முறைகளை கொண்ட மாபெரும் சமூக இனமாக திகழ்ந்து வருகிறான்.
ஒரு தொன்ம இனத்தின் ஒவ்வொரு நம்பிக்கையும் மிகப்பெரிய ஆய்விற்குரியதாக, வரலாற்றின் விசித்திர முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான சூட்சமங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.நவீன அறிவுசார் வெளியில் பண்பாட்டினை ஆய்வு செய்தல் என்பது முக்கியமான வகைமையாக விளங்கி வருகிறது. நமது பண்பாட்டு விழுமியங்களை குறித்து இதுவரை நிகழ்ந்த ஆய்வுகள் அனைத்துமே அயல் நிலங்களில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் விதிகளையும், அயலக தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்டே நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.
இந்த வழக்கமான ஆய்வு முறையினை தகர்த்து தனது வேறுபட்ட விசாரணை முறைகளால் ஆய்வுத் துறையில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியவர் மறைந்த பண்பாட்டு ஆய்வாளர் முனைவர் தொ. பரமசிவன் அவர்கள்.வழக்கமான ஆய்வுகளுக்கு பயன்படுத்தும் காரணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு சமூக அடித்தட்டில் வாழ்கின்ற எளிய மனிதர்களின் வாழ்வின் மரபிலிருந்து தன் ஆய்விற்கான தரவுகளை எடுத்தாண்டு ஆய்வு செய்தது தான் பேராசிரியர் தொ.ப அவர்கள் தமிழ் ஆய்வு உலகத்திற்கு அளித்த மாபெரும் கொடையாகும்.தமிழர் ஆய்வு மரபு என்பது நா. வானமாமலை, மயிலை சீனி வேங்கடசாமி, ராகவையங்கார், கார்த்திகேசு சிவத்தம்பி என நீண்ட தொடர்ச்சி கொண்டது. அதில் பேராசிரியர் முனைவர் தொ பரமசிவன் மிகமிக தனித்துவமானவர்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட “கோயில்களில் ஆடு மாடு கோழி பலியிட தடை சட்டம்” என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட போது இந்து மத அரசியல் அடையாளமாகத் திகழ்கிற இராம கோபாலனும், அதற்கு நேர் எதிர் அரசியலான திராவிட இயக்க அரசியல் அடையாளமாக திகழ்கிற திக தலைவர் கி வீரமணியும் ஒரே நேரத்தில் வரவேற்றபோது, தன் வாழ்நாள் முழுவதும் தன்னை மார்க்சிய பெரியாரிய ஆதரவாளராக விளங்கிய ஐயா தொ.ப அவர்கள் கடுமையாக எதிர்த்தார். ஒரே நேரத்தில் தமிழரின் பண்பாட்டு விழுமிய அடையாளங்களை அழிப்பதில் ஆரியமும், திராவிடமும் காட்டிய தீவிரத்தன்மையை எளிய மக்களின் வாழ்வியலில் இருந்து தான் கண்டறிந்த ஆய்வுத் தரவுகளை ஆயுதமாகக் கொண்டு தொ.ப எதிர்த்து நின்றார்.”சங்கரமடத்தில் கிடாய் வெட்ட சொல்லி கட்டாயப்படுத்தவும் முடியாது . அதேபோல எங்கள் சங்கிலி கருப்பன் கோவில் சர்க்கரை பொங்கல் மட்டும் தான் வைக்க வேண்டும் என சண்டித்தனம் செய்யவும் கூடாது” என தனது அறிவார்ந்த குரலால் எதிர்த்து நின்றார்.
அவரது மிக முக்கிய நூலான பண்பாட்டு அசைவுகள்(காலச்சுவடு வெளியீடு) என்கின்ற ஆய்வு நூலானது அவருடைய “அறியப்படாத தமிழகம்” மற்றும் “தெய்வங்களும் சமூக மரபுகளும்” என இரு நூல்களில் உள்ள கட்டுரைகள் மற்றும் புதிய கட்டுரைகளை உள்ளடக்கியதாகும். அந்த நூலில் தமிழ், வீடும் வாழ்வும், தைப்பூசம், பல்லாங்குழி, தமிழக பௌத்தம், பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும், கருப்பு என்கிற ஏழு தலைப்புகளில் தண்ணீர் தொடங்கி இறப்புச் சடங்கு வரையிலான தமிழரின் ஒவ்வொரு பண்பாட்டுத் துளிகளையும் அவர் ஆய்வுக்குட்படுத்தி எளிய மொழியில் விவரித்து இருந்தது என்பது தமிழ் ஆய்வுத் துறையில் மிகப் பெரிய பாய்ச்சலை உருவாக்கியது.நவீன தமிழியல் ஆய்வின் முக்கிய பேராசிரியரான ஆ.இரா. வேங்கடாசலபதி “ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் வடிவமாக படிந்துள்ளன என்பதை பண்பாட்டு அசைவுகள் என்ற நூலில் இடம் பெற்றிருக்கின்ற ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. உப்பு எண்ணெய் தேங்காய் வழிபாடு விழாக்கள் உடை உறவுமுறை உறவுப்பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக் கொண்டு தமிழ் சமூகத்தின் ஈராயிரம் 3000 ஆண்டு வரலாற்று அசைவியக்கம் கோடிட்டு காட்டப்படுகிறது..” என பேரா.தொ.ப எழுதிய பண்பாட்டு அசைவுகள் என்கிற நூலை புகழ்ந்திருக்கிறார்.
அதேபோல அவரது மற்றொரு நூலான “சமயங்களின் அரசியல்” ( விகடன் வெளியீடு) இந்திய தத்துவ வரலாறு என நாம் அறிந்து இருக்கின்ற வரலாறு வர்ணாசிரம மேலடுக்கில் இருந்து மற்ற சாதிகளை ஒடுக்குகிற மேல் சாதிக்கும், ஒடுக்கப்படுகின்ற சாதிகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டம் என்பதை சமயங்களின் அரசியல் என்கின்ற 65 பக்க நீள் கட்டுரை ஒன்றாலும் , ஆய்வாளர் சுந்தர்காளி அவர்களுடனான எழுத்து வடிவிலான நீண்ட உரையாடல் ஒன்றின் மூலம் நிறுவியிருக்கிறார்.தமிழ்நாட்டின் வரலாறு என நாம் அறிந்திருக்கிற சங்க காலம் தொடங்கி பின்னிடைக்காலம் வரையிலான பல வரலாற்று நிகழ்வுகளை ஆதாரப்பூர்வமாக கையாண்டு கோயில்கள் என்கின்ற நிறுவனங்களின் அதிகார உச்சங்களையும், வீழ்ச்சிகளையும் பற்றி மாபெரும் ஆய்வு ஒன்றை இந்த நூலில் அவர் நிகழ்த்தி இருக்கிறார்.
பேரா. முனைவர் தொ.ப அவர்களின் ஆய்வுகள் இந்துமத மேலாதிக்க அதிகாரத்தை சுக்கு நூறாக உடைத்தெறிவதற்கு மாபெரும் கருவிகளாக பயன்படுகின்றன. இந்து மதம் என்கின்ற ஓர்மை படுத்துவதின் அரசியல் எவ்வாறு வர்ணாசிரமத்தையும், மனு நீதியையும் நுட்பமாக காப்பாற்றுகிறது என்பதை அவர் தனது தீவிர வாசிப்பின் மூலம், சங்கப்பாடல்கள் தொடங்கி நவீன இலக்கியம் வரையிலான தனது பரந்துபட்ட அறிவின் மூலம் அம்பலப்படுத்தினார்.அவரது புகழ் பெற்ற கட்டுரை “காஞ்சி மடமும், கைதான மடாதிபதியும்”(உரைகல், கலப்பை வெளியீடு) வாதப்பிரதிவாதங்களை அறிவுத்தளத்தில் ஏற்படுத்தியது. இந்து மதம் என்கின்ற திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட நிறுவனத்தின் உச்ச அதிகார பீடமாக இருக்கக்கூடிய காஞ்சி சங்கர மடத்தின் வரலாற்றை , அதன் செல்வாக்கு பரவலாக்கப்பட்ட மோசடி தனத்தை மறுக்கவே முடியாத தரவுகளால் நிறுவிய தொ.ப வின் பங்களிப்பு தமிழக அரசியல் வெளியில் இன்னமும் ஆதிக்கம் செலுத்துகிற பல்வேறு குருட்டுத்தனங்களுக்கு எதிராக முழங்கிக் கொண்டே இருக்கிறது.
நாட்டார் வழக்காற்றியல் குறித்து அவர் செய்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. சாதாரண உரையாடலின் போது கூட தொ.ப வெளியிடுகிற அறிவாய்ந்த வீச்சுக்கள் எதிர்நின்ற பலரை ஆச்சரியப்பட வைக்கிறது.தமிழ் இலக்கியத் துறையிலும் அவர் நிகழ்த்திய ஆய்வுகள் தமிழ் மொழிக்கும் இலக்கியத் துறைக்கும் புது ரத்தத்தை பாய்ச்சியவை. அவர் எழுதிய கல்லெழுத்துகள்( நாள் மலர்கள், பாவை பப்ளிகேஷன்ஸ்) என்கின்ற கல்வெட்டுகளை பற்றிய கட்டுரை இலக்கியத்திற்கும், வரலாற்றுக்கும் இடையிலான நுட்ப இடைவெளியை வைத்துக்கொண்டு செய்யப்பட்ட சாதனையாகும்.1950ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த பேராசிரியர் தொ பரமசிவன் அவர்கள் மானுடவியல், சமூக பண்பாட்டுத் துறை, இலக்கியம் போன்ற துறைகளில் நிகழ்த்திய ஆய்வுகள் தமிழ் சமூகத்தின் தொல் பெருமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவை. ஒரு முது இனத்தின் பண்பாட்டு விழுமியங்களின் அறிவு என்பதே அந்த இனம் பெற்றிருக்கின்ற நாகரீக வளர்ச்சி என தொ.ப தன் ஆய்வுகள் மூலம் நிறுவினார்.
பண்பாட்டுக்கூறுகள் அழிந்தால் இனம் அழிந்து போகும், அடையாளத்தை இழந்து போகும் என எச்சரித்த அவர் இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி, மதுரை தியாகராயர் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய உயர் கல்விப் புலங்களில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர். எதையும் வெளிப்படையாக பேசி விடுகின்ற அவரது கருத்துக்கள் மிகவும் ஆழம் மிக்கவை. இறுதிக்காலத்தில் தமிழம் வலையொளிக்கு அவர் வழங்கிய செவ்வியில் “திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் முற்றுப்பெற்றுவிட்டது.”என ஏறக்குறைய இந்துத்துவா சார்போடு இயங்குகிற சமகாலத்து திராவிட இயக்கங்களை கடுமையாக அவர் விமர்சித்தார்.முனைவர் பட்டத்திற்கான அவரது அழகர் கோவில் பற்றிய ஆய்வேடு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பற்றி செய்யப்படும் அனைத்து ஆய்வுகளுக்கும் இந்த நூல்தான் ஒரு முன்னோடியாக இருக்கிறது. தொலைந்து கொண்டிருக்கும் தமிழ் பண்பாட்டின் மிச்சங்களை ஆவணப்படுத்தி, ஆய்வு படுத்தி தமிழினத்தின் தொல் அறிவு, முதுமை, பெருமித செழுமை ஆகியவற்றை அரும்பெரும் நூல்களாக தமிழின எதிர்கால சந்ததிக்கு பெரும் கொடையாக அளித்து விட்டு மறைந்திருக்கிறார் பேராசிரியர் முனைவர் தொ பரமசிவன் அவர்கள்.
எண்ணற்ற அவரது மாணவர்கள் ஆய்வுத் துறையில் அவரது வழியில் தொடர்ச்சியாக பயணப்பட்டு நம் மொழி கலாச்சார பண்பாட்டு துறைகளுக்கு மாபெரும் பங்களிப்பினை வழங்கி வருகிறார்கள். இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரியில் அவரிடம் கல்வி பயின்றது தான் தனது சமூகப் பார்வைக்கு ஒரே காரணமென அவர் மறைந்த நாளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தன் ஆசிரியரை உணர்ச்சி பூர்வமாக நினைவு கூர்ந்தது படிக்கின்ற ஒவ்வொரு வாசிப்பாளனும் உணர்வான்.அறிவுலக இழப்பாக நிகழ்ந்திருக்கிற அவரது மறைவு ஈடு செய்ய இயலாத ஒன்று தான். ஆனால் பண்பாட்டு அசைவுகள், பரண், நாள் மலர்கள், விடுபூக்கள், இந்து தேசியம் என நீளுகின்ற இருபதுக்கும் மேலான அவரது நூல்களில் அவர் வெளிப்படுத்துகின்ற கருத்துக்கள் எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிப்பாதையில் வெளிச்சம் காட்டும் அறிவுச்சுடர் களாக திகழும்.