நினைவோ ஒரு பறவை.

♥️

இரவினை போர்த்தியிருந்த அந்த இருட்டு விரல்களால் தொட்டுப் பார்த்து உணரும் அளவிற்கு பிசுபிசுப்பின் அடர்த்தியோடு இருந்தது. அனேகமாக அப்பொழுது நள்ளிரவு கடந்து பின்னிரவின் தொடக்கமாக இருக்கலாம். அப்போதுதான் கண்கள் சோர்வடைய தொடங்கி,கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தில்..விழிப்புக்கும் உறக்கத்திற்கும் நடுவேயான ஒரு கனவு மயக்கத்தில் நான் புரண்டு கொண்டிருக்க, சற்றே அதிர்ந்து அடங்கிய என் அலைபேசியின் ஒலியற்ற அதிர்வொலி இரவின் மௌன இசைக்கு சுருதி பேதம் போல ராகம் தப்பி ஒலித்தது.

களைத்த கண்களுடன் எடுத்துப் பார்க்கையில் அவள் எண்ணிலிருந்து வந்த எந்த எழுத்தும் இல்லாத ஒரு வெற்றுச் செய்தி. இந்த நள்ளிரவில், எதற்காக.. எவ்விதமான எழுத்துக்களோ, வார்த்தைகளோ இல்லாத வெற்றுச் செய்தி என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒரு வேளை தவறி வந்திருக்கலாமோ என யோசித்துப் பார்த்தேன். அது எப்படி திசைமாறி காற்றில் அலைகிற‌ பூ ஒன்று சரியாக என் மடியில் மட்டும் விழுகிறது..?

வேறு வகையில்தான் சிந்திக்க வேண்டும்.இன்னும் அலைபேசியில் என்னை அழிக்காமல் வைத்திருக்கிறானா என ஒரு வேளை.. நம்மை பரிசோதித்து பார்க்கிறாளோ, அல்லது இந்த நள்ளிரவில் உன் நினைவின் பாடலோடு உறங்காமல் விழித்துக் கிடக்கிறேன் என உணர்த்த எண்ணுகிறாளோ என்றெல்லாம் என் மனம் தனக்குத் தானே விசித்திர கோடுகளை வரைந்து பார்த்து வசீகர ஓவியங்களாய் மாற்றத் தொடங்க..ஒரு மாய விளையாட்டு அதுவாகவே நிகழத் தொடங்கியது.

அது வெறும் வெற்றுச் செய்தி. அந்த வெற்றுச் செய்தி‌ அலைபேசியின் ஒளியூட்டப்பட்ட வெண்திரையில் காணும்போது, ஒரு எழுதப்படாத தாளைப் போல இருந்தது. அது ஒருவகையில் வரையப்படாத ஓவியம். நீண்டநாள் விரல்கள் படாது, புழுதியேறி கிடக்கும் பழுப்பேறிய பியானோ ஒன்றின், கருப்பு- வெள்ளை கட்டைகளில் வாசிக்கப்படாமல் உறைந்து கிடக்கும் ஒரு இசைத்துளி.

அது வெறும் ஒரு வெற்றுச் செய்தி என ஏற்றுக் கொள்ளாதே என உள்ளுக்குள் ஏதோ ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.அந்த நொடியில் தான்..நலம் விசாரித்தல்கள் ,அக்கறையும் அன்பும் நிறைந்து வழிகிற சொற்கள்… என கற்பனையில் என் மனம் அதன் போக்கில் எழுதி பார்த்து ஏகாந்தம் கொள்ள.. தொடங்கியது.ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கம் போல..அது ஒரு எழுதப்படாத வசவுவாகக் கூட இருக்கலாம். இனி உன்னை சபிக்க சொற்களே இல்லை என்பதற்கான குறியீட்டு சாட்சியமாக கூட உணர்த்த விரும்பி இருக்கலாம் என்கிற எச்சரிக்கை உணர்வும் எட்டிப்பார்த்தது.ஆனாலும் அது ஒரு வெற்றுச் செய்தி.அதை எப்படி எடுத்துக் கொள்வது.. கால நதியின் கோர ஓட்டத்தில் மண்மூடி புதைந்துவிட்ட நினைவின் விதை ஒன்று வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்துவிட்டு இருக்கிற வெளிச்சத்துண்டால் உயிர்பெற்று துளிர்க்க முயல்கிறது என எடுத்துக் கொள்ளலாமா..அல்லது..உறுதியான முறிவொன்றினை வார்த்தைகளின்றி அறிவிக்க வருகிற மௌன மொழி பூசிய இறுதி அறிவிப்பு என எடுத்துக்கொள்ளலாமா…என்றெல்லாம் யோசித்து குழம்பிய வாறே.. அடைத்துக் கிடந்த என் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத சாலையை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான்.. “நினைவோ ஒரு பறவை” என ஒரு பாடல் தூரத்தில் எங்கோ கேட்டது.யாரோ வயதான தள்ளுவண்டிக்காரர் அவரது பண்பலை வானொலியில் அந்தப் பாடலை ஒலிக்க வைத்தவாறே அமைதியாக ஆளற்ற சாலையில் நியான் விளக்கொளியில் நடந்து செல்ல, எங்கிருந்தோ கசிந்த அந்தப் பாடலின் மர்ம முடிச்சுகளில் இதயம் இடறத் தொடங்கியது.”அதற்காகத்தான் அலைபாய்கிறேன் வந்தேன் தர வந்தேன் நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை நினைவோ ஒரு பறவை…”தள்ளுவண்டியோடு அந்தப் பாடலும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டே சென்று காற்றில் கரைந்து மௌனமாக.. மீண்டும் தனிமையின் போர்வை போர்த்தி தன்னை முடக்கிக் கொண்டது அந்த சாலை.

நான் ஏதோ வெறுமையுடன் என் மேசையின் மீதிருந்த அலைபேசியை உயிர்ப்பித்து அந்த வெற்றுச் செய்தியை எடுத்துப் பார்க்க தொடங்கினேன். அந்த ஒரு நொடியில் தான்..ஒரு நீல நிற சிறு பறவை ஒன்றுஅலைபேசி திரையில் இருந்து கிளம்பி, சிறகடித்தவாறே என் அறைக்குள் சில நொடிகள் சுற்றிசுற்றி பறந்து திறந்திருந்த என் ஜன்னலின் வழியே பறந்து போனது.அதன்பிறகு அலைபேசியை எடுத்துப் பார்க்க ஏனோ அச்சமாக இருந்தது.

♥️