❤️

அந்த நாள் மட்டும் ஒரு மஞ்சள் நிற சுடிதாரால் இன்னும் நிறம் மங்காமல் அப்படியே சலவையோடு கசங்காமல் இருக்கிறது.

காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ அலைவுகளில் எதை எதையோ தவறவிட்ட நான் முதல்முதலாகப் பார்த்தபோது அந்தக் கதவு இடுக்கின் வழியாக தென்பட்ட அந்த மஞ்சள் நிற சுடிதாரின் அசைவினை மட்டும் மறக்க முடியவில்லை.

ஆனாலும் காலம் வலிமையானது தான். என்னையே மறக்கின்ற களைப்பினிலும், உச்சபட்ச களிப்பினிலும் சில நேரங்களில் அந்த மஞ்சள் நிற சுடிதார் கூட மரத்துப்போனதுண்டு.

ஆனாலும்..அவ்வப்போது ஏதேனும் நினைவுகள், அல்லது சில பாடல்கள், சில காட்சிகள், நீண்ட தூர பயணங்கள் என வாழ்வின் ரசனைமிக்க மயிலிறகுகள் ஆன்மாவை வருடும் போதெல்லாம் அந்த மஞ்சள் நிற சுடிதார் உயிர் பெற்று விடுகிறது.

பண்டிகைக்கால துணிகள் எடுப்பதற்காக ஜவுளிக் கடைக்குப் போனபோது கலைத்துப்போட்ட பட்ட துணிகளில் ஒரு மஞ்சள் சுடிதாரை மட்டும் உறைந்த பார்வையால் நான் பார்த்துக்கொண்டிருந்தை பார்த்த கடைக்காரப் பெண் புரியாமல் விசித்திரமாக பார்த்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

யாருக்கு துணி எடுத்தாலும் நான் மஞ்சள் வண்ணத்தில் துணிகள் எடுப்பது குறித்து வீட்டில் இருப்போர் அனைவருக்கும் ஒரு சலிப்பு ஏற்படுவதுண்டு. “மஞ்சள் என்றால் உனக்கு அப்படி பிடிக்குமா அப்பா..? ” என புரியாமல் கேட்கும் என் மகனிடம் நான் எப்படி விளக்குவேன்…?

ஒரு மஞ்சள் நிற சுடிதாருக்கு பின்னால்..சில சூரிய சந்திரர்களும்,தாள கதியில் ஓடும் ஒரு நீரோடையும்,ஆர்ப்பரித்து கொட்டுகிற அருவியும்,நீலம் பாவித்து கிடக்கிற ஒரு கடலும்..பசுமை பூரித்து கிடக்கிற பச்சை வயலும்..பனி இரவுகளும்.. பவுர்ணமி பொழுதுகளும்..இதையெல்லாம் தாண்டி..இந்த வாழ்க்கை முழுக்க நான் நேசித்து பொத்தி வைத்திருக்கிற நினைவின் பசும் அடுக்குகளும் இருக்கின்றன..என்பதையும்,அதற்கான சாத்தியங்கள் என்னைப்போல பலருக்கும் இருக்கும் என்பதையும்..எப்படி விளக்குவேன்..?

இது.. ஒரு மஞ்சள் நிற சுடிதார்ஒரு புடவை ஆகி, சில காலங்கள் என் வாழ்வாகவும் ஆகி, என்னைக் கடந்து நடக்கின்ற ஒரு தென்றலாகவும் ஆகி,அப்படியே முழுமையாக ஆக்கிரமித்து,என்னை புரட்டி போட்டு விட்டு.. எவ்வித காரணமும் இன்றி ஒரு நிழலை போல கரைந்துப் போன கதை.

????