❤️
அண்ணன் திருமா அவர்களைப் பற்றிய சித்திரம் அண்ணன் சீமானது மதிப்பு மிகுந்த வார்த்தைகளால்தான் எனக்குள் உருவானது. அதற்கு முன் தமிழ்ப்பாதுகாப்பு இயக்க மேடைகளில் அவரை நான் பார்த்திருந்தாலும் அண்ணன் சீமான் தான் தொல். திருமா என்கிற தனிமனிதரின் முழு உருவத்தை, எனக்குள் வரைந்தார்.
உண்மையில் சமூகத்தின் கடைக்கோடி எல்லையிலிருந்து ஒரு மனிதன் உருவாகி, பலதரப்பட்ட அனுபவங்களை உள்வாங்கி, ஒரு ஆற்றல் மிக்க தலைவராக மாறுவதென்பது மிக மிக அபூர்வம். அதுவும் சமீப நாட்களில் நாம் காண நேர்கிற அவரது நேர்காணலை பார்க்கும் போது ஏதோ ஒரு ‘மென்மை’ அவரது சொற்களின் மீது படர்ந்து இருப்பதாக தோன்றுகிறது. அதை அனுபவங்கள் தந்த பக்குவம் என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
அது ஒருவகை நிதானம். ஆவேசமாக மேடைகளில் முழங்கி, போராட்டக் களங்களில் அதிகார உச்சங்களோடு மோதி, திமிறி எழுந்து, அடங்க மறுத்து, ஆர்ப்பரித்த, ஒரு காலத்து திருமா தற்போது சற்றே பக்குவம் அடைந்து நிதானப்பட்டிருப்பதை பார்க்கும்போது வாழ்க்கைத் தரிசனம் குறித்தான முக்கியச் செய்தி ஒன்றை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது.
அவரது தீவிரமான வாசிப்புத் தன்மையை அண்ணன் சீமான் விவரிக்கும்போது நான் வியந்திருக்கிறேன். அண்ணன் சீமான் அவர்களே மிக மிக தீவிரமான புத்தக வாசிப்பாளர். இரவு பகலாக புத்தகம் படிப்பதில் அதில் ஆழ்ந்து முழ்குவதில் தேர்ந்தவர். அப்படிப்பட்ட சீமான் அண்ணன் அவர்களே திருமா அண்ணனின் வாசிப்பு பழக்கத்தை சொல்லும்போது வியப்பான மொழிகளில் விவரிக்கிறார்.
சமீபகாலங்களில் பௌத்தத்தை நோக்கி அவர் நகரத் தொடங்கும் நுட்பமான புள்ளிகளை கவனிக்கும்போது அவரின் ஒட்டுமொத்த அரசியல்- பண்பாட்டு வாழ்விற்கான இறுதி இலக்கினை நோக்கி நகர்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.
அவரது அரசியல் சமரசங்களில் நமக்கு எத்தனையோ முரண்படும் புள்ளிகள் உண்டு. இதுபோன்ற முரண்பாட்டு புள்ளிகள், சமரசத் தருணங்கள் போன்ற விசித்திரங்கள் அண்ணல் அம்பேத்கர் அரசியல் வாழ்விலும் ஏற்பட்டிருக்கிறது. அதை ஒரு நேர்காணலில் மிகுந்த சங்கடத்தோடு எதிர்கொள்ளும் அண்ணன் திருமா அவர்கள் அவற்றை ‘ஒரு கையறு நிலை’ என வலியோடு சொல்கிறார்.
“எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள் எதையாவது பிடித்துக்கொண்டு மேலெழும் முயற்சிகள் அவை” என்கிறார். இந்தப் பார்வை இந்த ஒட்டுமொத்த சாதியச் சமூகத்தின் மீதான அவரது காத்திரமான விமர்சனம் எனலாம்.
நீட் தேர்வு கொடுமையால் இறந்துபோன தங்கை அனிதாவின் மரணத்தின் போதும், முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ட முனைவர் நடராசன் அவர்களின் மறைவின் போதும் அண்ணன் திருமா அவர்களை நேரடியாக சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அண்ணன் சீமான் தான் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவரது கைகளில் எல்லாம் நிறைய காயங்கள். நகக்கீறல்கள்.என்ன என்று கேட்டதற்கு ‘பேரன்புத் தம்பிகள் வழங்கிய விருதுகள்’ என்று சிரித்தபடியே சொன்னார்.
உண்மையில் சாதிப் பிடிமானம் மனித உளவியலிலும், சமூகத்திலும் வலிமையாக இருக்கின்ற இக்காலகட்டத்தில் அண்ணன் திருமா அவர்களின் இருப்பு, அவரது சாதி மறுப்புக் கருத்தியல், சனாதன தர்மத்திற்கு எதிராக அவரின் நகர்வுகள் ஆகியவை மிகு முக்கியத்துவம் பெறுகின்றன.
சாதிப்படி நிலைகளின் வலிமை, அதன் உள்ளார்ந்த அரசியல் அதிகாரம் , சாதி அடுக்கு பல்வேறு அதிகாரங்களாக மருவி காலம் காலமாக நீண்டு தொடர்ந்து காலத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளும் அதன் ஆற்றல் ஆகியவைகளை கல்வியாகவும்,அனுபவமாகவும் பயின்றவர்கள் அண்ணன் திருமாவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வார்கள்.
அந்த ஒரு மனநிலையில்தான் அரசியல் முரண்பாடுகள்,தேர்தல் நிலைகள், இவற்றையெல்லாம் தாண்டி தொல் திருமாவளவன் என்கின்ற தனிப்பெரும் மனிதனை, அவர் நாம் சாராத இன்னொரு கட்சியின் தலைவர் என்ற நிலையிலும், நம், அண்ணன், நம் உடன்பிறந்தவர் என்றெல்லாம் அவரது பிறந்த நாளில் நாம் கொண்டாடி மகிழ்கிறோம். வாழ்த்திப் பெருமை அடைகிறோம்.
அந்தப் புரிதலை எங்களிடத்தில் ஏற்படுத்தி உலகமெங்கும் வாழும் நாம் தமிழர் தம்பிகள் இன்று அண்ணன் திருமா அவர்களை வாழ்த்தும் பெருமித மனநிலையை ஏற்படுத்தியது அண்ணன் சீமான் அவர்கள்தான்.
❤️
விடுதலை சிறுத்தைகளின் தலைவர் நம் அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு.. மனம் நிறைந்த
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மறுமொழி இடவும்