———————————————————-

வரலாற்றில் சொற்கள் மிகப்பெரிய பங்கினை வகித்திருக்கின்றன. முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்று இருந்த சமயத்தில் ஹிட்லர் போன்ற உணர்ச்சிகரமான பேச்சாளர்களின் சொற்களே ஜெர்மனியை மீள் எழும்ப வைத்தன. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் தோல்வி முனையில் இருந்த போது அதன் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் பேசிய சொற்களே பிரிட்டனை நிமிர வைத்தன. ரஷ்ய புரட்சிக்கு புரட்சியாளர் லெனின் தொழிலாளர்களுக்கு மத்தியில் விதைத்த நம்பிக்கை மிகுந்த சொற்களே காரணம். கியூபா புரட்சிக்கு நீதிமன்றத்தில் நின்று புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ “வரலாறு எம்மை விடுதலை செய்யும்..” என முழங்கிய சொற்களே மூலக் காரணம். இப்படி வலிமை உடைய சொற்களைக் கொண்டவர்கள் கரங்களால் தான் வரலாறு காலங்காலமாய் எழுதப்பட்டுக் கொண்டே வருகிறது.

இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் நாடகங்கள்/ திரைப்படங்கள் மூலமாக திராவிட இயக்கங்கள் எழுச்சி நிலைக்கு வந்த போது அதன் நட்சத்திர பேச்சாளர்கள் தான் ‘அரசியல் அதிகாரம்’ என்கின்ற அடுத்த நிலைக்கு அந்த அமைப்புகளை எடுத்துச் சென்றார்கள். இலக்கிய மேற்கோள்களும், அடுக்கு மொழி வசனங்களும் தான் பாமர மொழி கொண்டிருந்த படிக்காத மேதை காமராஜரை வீழ்த்தி திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது.

மக்கள் மொழிகளின் ஊடாகத்தான் தங்களுக்கான தலைவர்களை மக்கள் அடையாளம் காணுகிறார்கள். எளிய மக்களை பொருத்த வரையில் மேடை என்பது கருத்துக்களை கேட்டுவிட்டு கடந்து போகும் இடம் அல்ல. தங்களுக்கான அடுத்த தலைவனை தேர்வு செய்கிற மாபெரும் களம். அந்தத் தலைவன் அந்த மேடையை எப்படி கையாளுகிறான், எது போன்ற மொழியை உதிர்க்கிறான், அவனது கோபம், உணர்ச்சி,அன்பு,கனிவு, ஆற்றல் அனைத்தும் அவனது மொழி மூலம் எப்படி வெளிப்படுகிறது என்பதை மக்கள் கவனிக்கிறார்கள்.

கடந்த 2009 ஆண்டு இராமேஸ்வரத்தில் தமிழ்நாடு திரைப்படத் துறையினரால் நடத்தப்பட்ட மாபெரும் பேரணி பொதுக்கூட்டத்தில் தமிழக அரசியலில் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கான பாய்ச்சல் குரல் ஒன்று ஒலித்தது.

அதுவரை பேச்சுத் தமிழ் என்று கட்டமைத்து வைத்திருந்த அனைத்து இலக்கண விதிகளையும் அடித்து நொறுக்கி பாமர மொழியில், பைந்தமிழ் அழகில் கேட்போர் உணர்ச்சியின் உச்சத்தில் துடிக்க, உக்கிர குரல் ஒன்று துயரத்தின் உன்மத்தத்தில் பிறந்தது. மேடைக்கும்-பார்வையாளனுக்கும் இடையே இருக்கின்ற மகத்தான இடைவெளியை உண்மையின் கனல் சுமக்கும் அந்தக் குரலின் உணர்ச்சி இட்டு நிரப்பியது. திராவிட இயக்கத்தின் ‘அண்ணாவிற்கு’ பிறகு, தமிழ்த் தேசிய தத்துவத்திற்கான “அண்ணன்” பிறந்த வரலாற்றுப் புள்ளி அதுதான்.

“பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறந்தது..” என அந்த குரல் கர்ஜித்த போது உண்மையிலேயே தமிழரின் ஆழ் மனதில் ஒளிந்து கொண்டிருந்த

இன உணர்வின் சிறுத்தை வெளியே வந்தது. “என்ன வியப்படா.. நாங்கள் தமிழர்கள்.. என்று அந்த குரல் முழங்கிய போது காலங்காலமாய் அடிமைப்பட்டுக் கிடந்த அன்னைத் தமிழினம் பெருமித உணர்ச்சியால் தலை நிமிர்ந்தது.

இப்படி தனி மனிதனாய் தமிழக வீதிகள் முழுக்க பேசி பேசி இன அரசியலுக்கான ஒரு இளைஞர் கூட்டத்தை உண்டாக்கி விட முடியும் என நிரூபித்துக் காட்டியதில் அண்ணன் சீமான் ‘தனி ஒருவன்’ தான்.

அவரது சொற்கள் தான் தமிழகத்தின் அரசியல் வீதிகளை தீப்பிடிக்க எப்போதும் வைக்கின்றன. காயம் பட்ட இனத்தின் வலி சுமந்து வரும் அந்த சொற்கள் மேடையின் ஒழுங்கிற்கு ஆட்பட்டதல்ல. பற்றி பரவும் நெருப்புத் துண்டினைப் போல, திசை வெளி அற்ற, அந்த சொற்கள் தமிழக அரசியல் பரப்பில் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சம் அல்ல. ஒரே நேரத்தில் திமுக/ காங்கிரஸ்/பிஜேபி/அதிமுக என எல்லா திசைகளிலும் காற்று போல பரவி, அநீதியின் கழுத்தைப் பிடித்து வினாக்களை தொடுக்கும் அவரது சொற்கள் எதிரிகளை நிம்மதி இழக்கச் செய்கின்றன. “எம் இனத்தை அழித்தது காங்கிரஸ் என்றால், அதற்கு துணை போனது திமுக..” என்று ஒரு பக்கத்தில். “ஜெயலலிதா என்ன ஆங்கான் சுகியா, அன்னை தெரேசா வா..” என மறுபக்கத்தில். “நீ பேனா சிலை கட்டு அதை இடிக்கிறேனா இல்லையா என்று பார்..” என்று இன்னொரு பக்கத்தில். “காங்கிரஸ் தமிழ் இனத்தின் எதிரி என்றால்,பாஜக மனித குலத்தின் எதிரி..” என்று எதிர்பக்கத்தில்.

எல்லா திசைகளிலும் அனல் குறையாத வெப்ப வீச்சு மாறாத ஒரே அலை வரிசையில் அனல் மொழிகள்.

யாரிடமும் சமரசம் கோராத, ஒருபோதும் மண்டியிடாத, நியாத்திற்காக சண்டையிடும் அவரது சொற்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ஏந்துகின்ற ஆயுதங்களாக மாறி விட்டன.அவரது சொற்கள் எப்போதும் எதிரிகளை பதட்டத்திலும், நடுக்கத்திலும் ஆழ்த்துகின்றன.

நேற்று கூட வள்ளுவர் கோட்டத்தில் நடந்த மணிப்பூர் கலவரத்திற்கான போராட்டத்தில் அண்ணன் சீமான் பேசிய சொற்களை அறிவாலய ஒட்டு திண்ணைகள் வெட்டியும், ஒட்டியும், அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப பரப்பிய போது, அவரது முழுமையான பேச்சை நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை வெளியிட்டுள்ளார்கள்.

வேதனையும் ஆற்றாமையும் பொங்கி வழிந்த அவரது பேச்சு ஒரு எளிய மனிதனின் கோபம். 18 சதவீத வாக்குகளை கொண்ட கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் பாஜகவிடமிருந்து திமுக காப்பாற்றும் என நம்பி எப்போதும் இழைக்கின்ற வரலாற்றுப் பிழையினால் நாம் எவ்வளவு இழக்கிறோம் என்பதை அவர் உடைத்து பேசியிருந்தது இதுவரை தமிழக அரசியல் பரப்புகளில் இருந்த சமன்பாடுகளை கலைத்து போட்டு இருக்கிறது. தேவாலயங்களிலும் பள்ளி வாசல்களிலும் பாவங்களுக்குக்காக மன்னிப்பு தேடி ஒன்று கூடுகிற நம்மவர்கள் செய்கிற ஆகப்பெரும் பாவம் பிஜேபி க்கு எதிரி திமுக என நம்பி வாக்களிப்பது. ஏனெனில் முதன் முதலாக பிஜேபியை கைப்பிடித்து தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே திமுக தான். ஆர் எஸ் எஸ் ஒரு சமூக இயக்கம் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் ஏ ரைட் மேன் இன் ராங் பார்ட்டி என வாஜ்பாய்க்கு பாராட்டு பத்திரம் வாசித்தது, பிள்ளையார் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தது ,சிபி ராதாகிருஷ்ணனை வைத்து நல்லக் கண்ணுவை தோற்கடித்தது என திமுகவின் குற்றப்பட்டியல் மிக நீண்டது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்குண்டு பன்னெடுங்காலமாக சிறைக்குள் வாடி வருகிற அப்பாவி இஸ்லாமியர்கள் விடுதலைக்கு திமுக எத்தகைய தடைகளை விதித்து வருகிறது என்பதை அண்ணன் சீமான் தான் தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி வருகிறார்.

ஒருபோதும் திமுக பாஜகவிற்கு எதிரி அல்ல. பாஜக விடம் இருந்து திமுக யாரையும் காப்பாற்றாது. சொல்லப்போனால், தன்னை காப்பாற்றிக் கொள்ள அது யாரையும் பலியிடும் என்பதை தான் அண்ணன் சீமான் தன் சொற்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். அநீதிக்கு துணை போவதும் அநீதியே என்று அவர் முழங்கியது

அந்தப் பேச்சை அறிவாலயத்து அறிவாளிகள் அப்படியே கடந்து போய் இருக்கலாம் தான். ஆனால் விதி… அதை வெட்டி ஒட்டி பரப்ப, உண்மையான பேச்சை நாடெங்கிலும் இருக்கின்ற நாம் தமிழர் இளைஞர்கள் பரப்பி வருகிறார்கள். எட்டு திக்கிலும் அண்ணன் சீமானின் மொழி காற்றில் பரவிக் கொண்டே கொள்கை விதைக்கிறது.

வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் ஒரு வசனம் உண்டு.

“அவனை எல்லாம் அப்படியே விட்டிடனும்..”

அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

விட்டு இருந்தால், இதுவும் ஒரு பேச்சு என அண்ணன் சீமானின் நேற்றைய ஆர்ப்பாட்டப் பேச்சு அமைதியாய் கடந்திருக்கும். பற்ற வைத்தவர்கள் இப்போது பதறிக் கொண்டிருக்கிறார்கள். அது காட்டுத்தீ போல பரவிக் கொண்டிருக்கிறது.

மெய்மையின் தீ அது. காலம் முழுக்க அறம் பாடி நடந்த ஒரு இன கூட்டத்தின் அடிநெஞ்ச குமுறல் அது.

அதில் இது தவறு அது தவறு அது பிழை இது சரி என்றெல்லாம் கணக்கு பார்த்தீர்கள் என்றால் , காலம் எழுதும் வரலாற்றுக் கடனில் நீங்கள் கரைந்து போவீர்கள்.