நெருக்கடிகளால் நிறைந்தது மானுட வாழ்வு. பல்வேறு குழப்பங்கள், தடுமாற்றங்கள், தவறுகள் போன்ற பல தடைகள் மனித வாழ்க்கை முழுவதும் ததும்பிக் கொண்டே இருக்கின்றன. எல்லோருக்கும் நிம்மதியாக மகிழ்வாக வாழ வேண்டுமென எண்ணம் இருக்கிறது. ஆனால் வெறிக் கொண்ட மிருகம் போல நாம் ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டம், மனித உணர்வுகள் இயல்பாக அடைய வேண்டிய எல்லா இன்ப உணர்ச்சிகளையும் தடுத்து மனித வாழ்க்கையை நரகப் பள்ளத்தாக்கில் தள்ளி விடுகின்றன. பொருளாதாரத்திலும், அதிகாரத்திலும் வலிமையானவர்கள் கூட தங்கள் வாழ்க்கை ஏன் நிறைவில்லாமல் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கையை அவரவர் கொண்டிருக்கின்ற அனுபவங்கள் வாயிலாக, அல்லது பிறர் மூலம் அடைகிற கற்பிதங்கள் வாயிலாக அணுக முயன்று ஏதோ ஒன்று குறைகிறதே என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.

வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகும் போதெல்லாம் நாம் பற்றிக்கொள்ள நம்பிக்கை மிகுந்த ஒரு கரம் நமக்கு இருந்தால் எப்படி இருக்கும் என ஒவ்வொரு மனித மனமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. அப்படி ஒரு காலத்தில் தான் நான் ஆசானை சந்தித்தேன்.

முதலில் அவர் துறவி அல்ல. காவி கட்டிக்கொண்டு கழுத்து நிறைய மாலை மணிகள் அணிந்து கொண்டு கண்மூடி தியான நிலையில் இருக்கும் ஒரு குருவை நீங்கள் தேடி சென்றீர்களானால் கண்டிப்பாக ஏமாற்றம் அடைவீர்கள்.

அவர் ஒரு இயல்பான மனிதர். குடும்பத்தோடு திருச்சி தஞ்சை சாலையில் அமைந்துள்ள செங்கிப்பட்டி அருகே உள்ள மிகச் சிறிய சிற்றூரில் வாழ்ந்து வருபவர். மனித வாழ்வின் எல்லா பாடுகளையும் நம்மோடு சேர்ந்து அவரும் அனுபவிப்பவர். எல்லாவித சுய துக்கங்களில் இருந்தும், மனித வலிகளில் இருந்தும் நம்மையெல்லாம் காப்பாற்ற வந்த மீட்பராக அவர் தன்னை முன்னிறுத்துவதில்லை.

அவர் இயல்பில் அவர் இருப்பார். நாம் நம்முடைய அனைத்து உணர்ச்சிகளையும் கொட்டிக் கொண்டிருக்கின்ற அந்த நொடிகளில் பதறாமல் அமைதியாக நம்மை கவனிப்பார். சில செய்திகளை நம்மோடு ஒரு சிறிய உரையாடல் மூலம் பகிர்ந்து கொள்வார். அந்த செய்திகள் கூட அறிவுரைகள் போல போதனைகள் போல இல்லாமல் சக மனிதனின் எளிமையான கருத்து போல நம் ஆன்மாவை ஊடுருவதை நாம் உணரும் அந்த அதிசய கணத்தில் தான் அவர் நமக்கு ஆசானாக மாறிப் போவார்.

ஆசான் செந்தமிழன்- சமகாலத்தில் இது பெயர் மட்டுமல்ல. எண்ணற்ற பலருக்கும் ஒரு பாதையாக அவர் மாறி இருக்கிறார். மனித அறிவு முழுக்க மண்டி கிடைக்கின்ற தகவல் குப்பைகளால் மானுட வாழ்வு நாசமாகி போன பின்பு மீள் எடுப்பதற்கு இவர்கள் வைத்திருக்கும் பகுத்தறிவு பலனளிக்காது என்று மென்மையான குரலில் சொல்லும் ஆசானை உண்மையில் உணர்வுபவர்கள் யாரும் நேசிக்காமல் இருக்க முடியாது. தொடர்ச்சியாக ஆசானின் படைப்புகள் செம்மை வெளியீட்டகம் சார்பில் இருபதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் வெளியாகி இருக்கின்றன. இயற்கையை, இயல்பை நோக்கி மீண்டும் மனிதன் தன்முகமாக உள் திரும்புதலை “ஊர் திரும்புதல்” என அழைக்கும் ஆசான் செந்தமிழன் எழுதிய மிக முக்கியமான படைப்பு “வேட்டல்”. அதாவது விருப்பத்தில் நிலை பெறுதல்.

“தேடுதல் என்பது எதையோ தொலைக்கும் முயற்சிதான் ..” என மூன்றாம் பக்கத்திலேயே மிரட்டும் அந்த நூல் இதுவரை வெளிவந்திருக்கிற மெய்யியல்/ சுய முன்னேற்ற நூல்களில் தனித்துவமானது மட்டுமல்ல தலையானது.

வேட்டல் என்றால் வேண்டுதல் என்று பொருள். வேண்டுதல் என்பது விரும்புதல் என்பதன் வேறு சொல். என இந்த நூலின் மூலமாக நம் செவிக்கருகே வந்து தோழமை மிகுந்த குரலில் பேசத் தொடங்கும் ஆசான், “எது வேண்டாம் என்பதை சிந்திக்காதீர்கள் அந்த சிந்தனை உங்களை சிதைக்கும். இதுதான் படைப்பின் மறைபொருள்.”

என்கிறார்.

இதுவரை நம் வாழ்வில் கட்டி அமைக்கப்பட்ட எல்லா கருத்துக்கோட்டைகளையும் தன் உண்மையின் அறம் கொண்டு உடைத்தெரிகிறார். அவரது எழுத்துக்களை படிக்கும் போது உள்ளுக்குள் நம்மை இறுக்கி வைத்திருக்கின்ற ஒவ்வொரு கயிராய் அவிழ்ந்து நீண்ட நாட்களாக சுமக்கும் பாரம் நீங்கி மிதக்கும் உணர்வு கொண்ட மனிதர்களாக, சுமையற்றவர்களாக

நாம் மாறுவதை உணர்வது தான் இந்த நூல் விளைவிக்கும் அதிசயம்.

காட்சிக்கும், பார்வைக்கும் உள்ள வேறுபாட்டை பற்றி விவரிக்க தொடங்கி, விருப்பத்திற்கும், ஆசைக்குமான வேறுபாட்டை ஆசான் விளக்கும்போது நாம் வியக்காமல் இருக்க முடியாது.

“விருப்பம் என்பது உணர்வு. ஆசை என்பது உணர்ச்சி. உணர்வுக்கும், உணர்ச்சிக்குமான வேறுபாட்டை அறிந்து கொண்டால் மாயையை கடப்பது எளிதாகிவிடும். உணர்வு முழுமையாக அக வயப்பட்டது, உணர்ச்சி என்பது புறவயப்பட்டது.” என விவரிக்கும் ஆசான்,” உணர்வு வலியுறுத்தும் தேவைகள் அனைத்தும் விருப்பங்கள். உணர்ச்சி தூண்டும் தேவைகள் அனைத்தும் ஆசைகள்.” என நிறுவும் போது படிப்பவர் ஒவ்வொருவரும் தனக்குள் தானே பயணித்துக் கொண்டிருப்பதை உணரும் அத் தருணம் வேறு எந்த புத்தகம் படிக்கும் போதும் கிடைக்காதது.

அவரது மற்றொரு நூலான இயற்கையியல் கட்டுரைகள் அடங்கிய சிறு நூல் “முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை” . அந்த நூலின் முதல் கட்டுரையான “நீங்கள் பார்க்காததும் இங்கு தான் இருக்கிறது” என்பதன் முதல்வரி யான ” நியூட்டன் பார்ப்பதற்கு முன்பும் ஆப்பிள்கள் தரையில் விழுந்து கொண்டு தான் இருந்தன” என்ற சிந்தனையிலேயே ஆசான் தான் யார் என்று காட்டி விடுவார். அதிலும் அறிவிற்கும் அதாவது பகுத்தறிவுக்கும், மெய்யறிவுக்கும் உள்ள வேறுபாட்டை பற்றி அவர் விளக்குகின்ற பக்கங்கள் தங்கச் சொற்களால் நிரம்பியவை. ஒவ்வொரு மனிதனும் மனனம் செய்து கொள்ள வேண்டியவை. அந்தத் தொகுப்பில் என்னை கவர்ந்த மிக முக்கியமான கட்டுரை “அவ்வப்போது மரமாக மாற கற்றுக் கொள்ளுங்கள்” என்பதுதான். இயற்கையின் பேராற்றலின் வெளிப்பாடாக மனிதன் திகழ வேண்டும் என்பதற்கு மரத்தை உருவகப்படுத்தி வெவ்வேறு செய்திகளை , நமக்கு உணர்த்தி நாம் யார் என்று அந்த புத்தகத்தை முடிக்கும் போது உணர வைப்பதில் ஆசான் மகத்துவம் நிரம்பியவர்.

இன்றும் செங்கிப்பட்டிக்கு அருகே இருக்கின்ற செம்மை வனத்திற்கு நீங்கள் உங்களது வழிபாட்டிற்குரிய, போதனை பொழியும் ஒரு தாடி வைத்த ஒரு குருவை தேடி செல்லும் போது அவர் அங்கே கிடைக்க மாட்டார். ஆனால்,அங்கே ஒரு பழுப்பேறிய பேண்ட் அணிந்து இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கின்ற ஒரு நடுத்தர நபரை சந்திப்பீர்கள். அவரது மகிழ்ச்சி நிறைந்த கண்களை உற்று நோக்குங்கள். பிறகு நீங்களே பேசி விடுவீர்கள். அவர்தான் ஆசான் ம.செந்தமிழன்.

அவரது மெய்யறிவு குறித்த சிந்தனைகள் அனைத்துமே ஆவணப்படுத்தப்பட்டு செம்மை வெளியிட்டகத்தால் புத்தகங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் மானிட வாழ்விற்கான அற்புதங்களின் திறவுகோல்கள்.

அவரிடம் இதைக் குறித்தெல்லாம் பேசினால் எல்லாம் “அம்மையப்பர்” அருளியவை என மெல்லிய சிரிப்போடு சொல்லிவிட்டு கடந்து விடுவார். அவர் அப்படி சொன்ன கணத்தில் அவர் சொன்ன “அம்மையப்பர்” அவரில் நாம் காணத் தொடங்குவோம்.

வேட்டல்- ஆசான் ம. செந்தமிழன்.

பக்கங்கள் 96 விலை 90

முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை – ஆசான்

ம. செந்தமிழன் பக்கங்கள் 88 விலை 80

ஆசான் செந்தமிழன் அவர்களது நூல்கள் அனைத்தையும் வெளியிடுவது- செம்மை வெளியீட்டகம், தஞ்சாவூர்.

9791490365.