“அந்தக் காகிதங்கள் நனைந்த போது நானும் நனைந்தேன். அந்த காகிதங்கள் போல நானும் மிருதுவாக இருக்கிறேன். ஆனாலும் இந்த பெரு மழையிலும் என் புத்தகங்கள் நனைந்தனவே ஒழிய, என் ஒரு சொல் கூட நனையவில்லை. காகிதத்தை தான் மழையால் நனைக்க முடியுமே ஒழிய, எனது சொற்களை அல்ல”
சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக எழுத்தாளுமை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரி பதிப்பகம் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்தது. பல நூறு புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து வீணாகி விட்டன. இது பற்றிய ஒரு உருக்கமான பதிவினை எஸ்.ரா சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இந்த சம்பவத்தை குறித்து அவரது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதுதான் தன் சொற்களைப் பற்றிய மேற்கண்ட கருத்தை எஸ் ராமகிருஷ்ணன் பேசியிருந்தார்.
எழுத்தாளன் என்பவன் சொற்களால் ஆனவன்.எழுத்துக்களின் கூட்டிசைவினால் உருவாகும் சொற்களின் வெளிச்சம் எழுத்தாளனின் அகத்திலும் ஒளிர்ந்துக் கொண்டே இருக்கிறது.
நெல்மணிகளை சேகரித்து வைத்திருக்கும் பழங்காலத்து பத்தாயம் போல எழுத்தாளன் சொற்களை தானியங்களைப் போல சேகரித்தும் அவற்றை உரிய இடத்தில் விதைத்தும் காலத்தின் வீதிகளில் நடந்து கொண்டே இருக்கிறான்.
எஸ்.ரா சொற்களால் ஆனவர். தன் படைப்புகளில் உள்ளார்ந்த ஆழமும், எளிமையின் வசீகரமும் கொண்ட சொற்களால் நிறைந்தவர். 90களில் தமிழ் உரைநடையில் நிகழ்ந்த பின் நவீனத்துவம் மற்றும் மாய எதார்த்தவாதம் போன்றவைகளின் தாக்கத்தினால் தமிழ் நவீன இலக்கிய உலகில் பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தான் சில சிறுகதை தொகுதிகளை வெளியிட்டிருந்த எஸ் ராமகிருஷ்ணன் தனது முதல் நாவலான ‘உப பாண்டவம்’த்தை வெளியிடுகிறார். கதை நம் அனைவருக்கும் தெரிந்த மகாபாரதக் கதை தான். அந்த கதை சம்பவங்களை வைத்துக்கொண்டு மகாபாரத இதிகாசத்தின் மீது தன் வசீகரமான மொழியில் புனைவு உலகு ஒன்றினை எஸ்.ரா உருவாக்கி இருக்கிறார். மகாபாரத இதிகாசத்தின் கதாபாத்திரங்கள் அவரவருக்கான நீதியையும், துயரங்களையும், ஆசைகளையும், மன ஓட்டங்களையும் ஏக்கம் வலியும் நிறைந்த மொழிகளில் வெளிப்படுத்தும் இந்த நாவல் தமிழ் நாவல் உலகில் தனித்துவமானது. அடர்த்தி நிறைந்த சொற்கள் மூலம் வடிவமைக்கப்படும் கதைக்களம் ஒரே சமயத்தில் நாட்டார் வழக்காற்றியல் தளத்திலும், புராண இதிகாச தளத்திலும் பயணிப்பது இந்தப் படைப்பை தமிழில் முக்கியமான ஒன்றாக மாற்றுகிறது.
இந்தப் படைப்பில் காணப்படும் ஒரு சித்திரம்..
“நாய்க்கு அடையாளம் குரல். குரலற்ற நாய் ஓடிக்கொண்டே இருந்தது”
இப்படி பக்கத்திற்கு பக்கம் ஆழமான சொற்கள் மூலம் ஒரு படைப்பை பிரம்மாண்டமானதாக மாற்றி இருக்கிற எஸ்.ரா இன்று தமிழின் மிக முக்கியமான எழுத்தாளுமை.
எனக்கு அவரது படைப்புகளில் மிகவும் பிடித்தது அவரது இரண்டாவது நாவலான “நெடுங்குருதி”. தன் வெப்பம் மிகுந்த கரிசல் மண்ணை பற்றி எஸ்.ரா எழுதிய முதல் நாவல் இது. எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு கிராமமாக வேம்பலை என்கின்ற ஒரு புனைவு சிற்றூரினை உருவாக்கி வெக்கை நிறைந்த அந்த ஊரின் மக்களாக திருட்டு கொள்ளைகளுக்கு பேர் போன வேம்பர்கள் என்கிற கூட்டத்தை உருவாக்கி , சுவாரசியமும், வினோதமும் நிறைந்த கதை மாந்தர்களை எஸ்.ரா தன் படைப்பு முழுக்க உலவ விட்டிருப்பார்.
எறும்புகள் கூட ஊரை விட்டு விலகும் வெக்கை நிறைந்த ஒரு கோடைகால பகல் பொழுதை விவரிக்கின்ற காட்சி தமிழில் வேறு எந்த படைப்பிலும் காண முடியாதது.
“தெருக்களிலும் வீட்டு உத்திரங்களிலும் வேம்பிலும் அழிந்து கொண்டிருந்த எறும்புகள் சில நாட்களாகவே ஊரை விலக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. காலை நேரத்தில் அவை மண் சுவர்களை விட்டு மெதுவாக கீழ இறங்கி தலையை செலுத்தியபடி தெருவில் நீண்ட தனிமையில் பயத்தோடு கால்கள் பரபரக்க ஊர்ந்து செல்வதை பார்த்துக் கொண்டே இருந்தான்.”
ஆகச் சிறந்த ஊர் சுற்றியான எஸ.ரா இந்திய பெருநிலம் மட்டும் இல்லாமல் உலகத்தின் முக்கியமான பகுதிகளுக்கு பயணப்பட்டு இருக்கிறார்.
எஸ் ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் காட்சி மொழியிலானவை. திரைமேதை பாலு மகேந்திராவின் கேமராவில் பதிவு செய்யப்படும் காட்சிகள் போல பேரழகும் , தெளிவும் நிரம்பிய முகங்களை கொண்டவை.
தமிழில் முதன்முதலாக எஸ் ராமகிருஷ்ணன்தான் அதிதீவிர வாசகர்கள் மட்டுமே படிக்க முடிகிற நவீன இலக்கியத்திற்கும், எளிய வாசகர்கள் படிக்கும் வெகுஜன படைப்புகளுக்கும் உள்ள இடைவெளியை அழித்தவர். அவரது நவீன இலக்கிய செழுமை நிறைந்த “துணையெழுத்து” கட்டுரைத் தொடர் வெகுஜன பத்திரிக்கையான ஆனந்த விகடனில் வெளியாகி பெரும் புகழ் அடைந்தது . அதன் பிறகு அதே பத்திரிக்கையில் தமிழின் நவீன இலக்கிய முகங்களை பற்றி அவர் எழுதிய “கதாவிலாசம்” அதுவரை வெகுஜன வாசகர்கள் அறியாத தமிழின் முக்கிய எழுத்தாளர்களை, அவர்களது படைப்புகளை தமிழகம் முழுக்க கொண்டு சேர்த்தது.
‘துணையெழுத்து’ தொடர் விகடனில் வெளியான காலத்தில் ஒவ்வொரு வாரமும் படித்துவிட்டு பல மணி நேரம் உறைந்து, அமர்ந்து விடுவேன். பல சமயங்களில் நெகிழ்ச்சியுடன், கண்கலங்கி இந்த உலகத்தில் இத்தனை வகை எளிய மனிதர்கள் அறத்தோடு இருக்கிறார்கள் என்பதை நினைத்துக் கொண்டே சிலிர்த்த பொழுதுகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. அப்படி வாசகர்களை சிலிர்க்க வைத்து தன் வயப்படுத்திய எஸ்.ரா தமிழில் உலக சினிமா குறித்து மிகப் பெரிய தரவுகள் கொண்ட 700 பக்கங்களுக்கும் மேற்பட்ட “உலக சினிமா” என்கின்ற மிக முக்கியமான நூலை இயற்றியவர். அது திரைத்துறையை ஆழ்ந்து நேசிக்கும் அனைவருக்குமான என்சைக்ளோபீடியா.
அவரது புகழ்பெற்ற நாவலான “சஞ்சாரம்” அழிந்து போன கரிசல் மண்ணின் நாதஸ்வர கலைஞர்களை பற்றியது. 2018 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வாங்கிய இந்த நூல் சாதியச் சமூகம் கலைஞர்களிடம் நுட்பமாக கடைபிடிக்கும் ஏற்றத்தாழ்வுகளை இலக்கியத் தன்மையோடு பேசிய தமிழின் மிக முக்கியமான நாவல்.
அவரது ‘இடக்கை’ மறைந்த மன்னர் அவுரங்கசீப்பை பற்றியது. நீதி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவரின் குரலாக ஒலிக்கும் இந்த நூல் செவ்வியல் தன்மை கொண்டது. திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட இடக்கைப் பழக்கம் உடைய சாமர் இனத்தைச் சேர்ந்த தூமகேது என்ற ஆட்டு தோல் பதப்படுத்துபவன், மன்னர் ஔரங்கசீப்பின் அந்தப்புரத்தின் பணியாள், திருநங்கை அஜ்ரா பேகம் என்பவரை பற்றியும் பேசும் இந்த நூல் “the king can do no wrong” (அரசு அதிகாரம் தவறு இழைக்காது/அரசு அதிகாரம் தவறிழைத்தாலும் அது சரியே) என்ற முதுமொழியை பற்றி விவாதிக்கிறது. இந்த நூல் முழுக்க பண்டைய இந்தியாவின் நீதி முறைகளை பற்றி விவாதிக்கும் எஸ்.ராவின் மொழி அசாத்தியமானது.
2021 இல் வெளிவந்த “மண்டியிடுங்கள் தந்தையே” தமிழில் வெளியான ரஷ்ய நாவல். புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் பண்ணையில் நிகழ்பெற்ற சம்பவங்களை முன்வைத்து ரஷ்யாவில் அன்று நிலவிய குளிர்கால பருவநிலை, பண்ணை சூழல், அடிமைமுறை, காதலின் துயர் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த படைப்பு போல இந்திய மொழிகளில் வேறு ஏதும் இதுவரை எழுதப்படவில்லை.
இவை மட்டும் இல்லாமல் துயில் நிமித்தம், பதின், உறுபசி என பத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், 20க்கும் மேற்பட்ட சிறுகதை தொகுப்புகளையும் , உலகத் திரைப்படம், சிறார் இலக்கியங்கள், உலக இலக்கியங்கள், பல நாட்டு எழுத்தாளர்களின் வாழ்வியல் போன்ற பல துறைகளை சார்ந்து பல கட்டுரை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களின் படைப்பாளர்.
எனது இந்தியா,மறைக்கப்பட்ட இந்தியா என்கிற இரண்டு முக்கிய புத்தகங்கள் இந்திய பெருநிலத்தின் வரலாறு மற்றும் முக்கிய செய்திகளை உள்ளடக்கியவை. இந்தியாவை தமிழில் புரிந்து கொள்ள இதுவரை இது போன்ற இரண்டு தொகை நூல்கள் தமிழில் இல்லை. சண்டைக்கோழி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய அவர் தமிழின் நூறு சிறுகதைகளை தேர்ந்தெடுத்து இரண்டு பாகங்களாக தொகை நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சிறந்த படைப்புகளை தொகுத்து “என்றும் சுஜாதா” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். அட்சரம் என்கின்ற அவர் நடத்திய இலக்கிய இதழ் தயாரிப்பு வடிவத்திலும், உள்ளடக்க அழகிலும் இன்றும் ஒரு எடுத்துக்காட்டு. அவரது நூல்களை “தேசாந்திரி பதிப்பகம்” வெளியிட்டு வருகிறது.
தன் கதைகளைப் பற்றி எஸ்.ரா “வெற்றி தோல்வியை பற்றி கவலை இல்லாமல் மீண்டும் மீண்டும் எதிர்பாரான்மையை சந்திக்கும் இந்த உலகோடு ஆடிய ஒரு தீரா விளையாட்டான பகடை ஆட்டம்” என்கிறார்.
தமிழின் ஆகச்சிறந்த எழுத்துக்களை படிக்க விரும்பும் ஒரு எளிய வாசகனுக்கு ஒரு மிகச்சிறந்த வாயிலாக எஸ் ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் மிளிர்கின்றன. அவரது வாசகன் என்கிற முறையில் எனக்கு அவரைத் தவிர வேறு யாரும் அவரைப் போல என் வாசிப்பு பசியை ஆற்றுவதில்லை. ஒவ்வொரு முறையும் அவரது எழுத்துக்களுக்காக நான் காத்திருக்கிறேன். அவரும் என்னை மட்டுமல்ல என்னை போன்ற பலரை பசியாற்றிக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் அவர் ஏந்தும் அவரது இலக்கியம் ஒரு வகையான காப்பிய மணிமேகலை ஏந்திய அமுதசுரபி தான்.
அவர் எழுதிய உப பாண்டவத்தில் ஒரு பத்தி “
அஸ்தினாபுரம் ஒரு கனவு. எங்கள் நாக்கு அசைய அசைய இந்த நகரம் விரிவு கொள்கிறது. நாவின் நடமாட்டம் நின்றால் நகரம் விழுந்து விடும். அஸ்தினாபுரம் என் நாக்கில் இருக்கிறது.”
அப்படித்தான் எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற உள்ளொளி மிகுந்த எழுத்தாளர்களும். எழுத்தாளர்களின் விரல்கள் எழுதப்படாத வெற்றுத் தாளில் அசைய அசைய வாசிப்பவரின் இதயம் விரிவு கொள்கிறது .விரிவு கொண்ட இதயம் கொண்ட மனிதர்கள் தான் இந்த உலகை இயக்குகிறார்கள். எனவே எழுத்தாளர்களின் விரல்களின் அசைவில் தான் உலகத்தின் இயக்கம் உறைந்திருக்கிறது.
எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய அனைத்து நூல்களும் கிடைக்கும் இடம்: தேசாந்திரி பதிப்பகம், கங்கை அபார்ட்மெண்ட்ஸ், 80 அடி சாலை, சாலிகிராமம், சென்னை.
மறுமொழி இடவும்