எனது அன்பு அண்ணன்
ராபர்ட் பயஸ் அவர்களுக்கு..

ஒரு பொன்னான விடியலின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் தாய் மண்ணில் கால் வைத்திருப்பீர்கள். 33 வருடங்களுக்கு முன்பாக பிரிந்த தாயின் கருவறைக்கு மீண்டும் ஒரு சேய் போய் சேர்ந்திருக்கிறது. நீங்கள் உங்கள் தாய் மண்ணை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘விடுதலைக்கு விலங்கு’ எழுதிய காலங்களில் இன்று விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை அன்று இல்லை. சிறைக்குள் இருந்து கொண்டே உங்கள் தாய் மண்ணைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டே இருந்தீர்கள். உங்கள் நிலத்திலிருந்து நீங்கள் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும் உங்கள் உதட்டோரம் ஈழத்துத் தமிழை சற்றே தேக்கி வைத்திருந்தீர்கள்.

ஒரு நாள் என் தாய் மண்ணிற்கு திரும்புவேன் என்கிற உங்களது நம்பிக்கையை எழுத்தில் வடித்த உரிமையோடு இந்த இரவில் இன்பமுருகிறேன்.ஆம். உங்கள் நம்பிக்கையுடன் கலந்த என் எழுத்து நிஜமாகிவிட்டது. இவற்றையெல்லாம் நாம் சிந்தித்த நாட்களில் இதுவெல்லாம் நடக்குமா என்று கூட நமக்குத் தெரியாது. ஆனாலும் ஒரு மன உறுதி கொண்ட தீர்க்கதரிசி போல நீங்கள் விடுதலை நாளொன்றின் பொன் கிரகணங்களுக்காக காத்திருந்தீர்கள். உங்கள் மீது அது இன்று படும் பொழுதில் நான் கண்கலங்க உங்களை என் நினைவுகளால் முத்தமிடுகிறேன்.

நமக்குள்ளாக எவ்வளவோ உரையாடல்கள் இருந்திருக்கின்றன. பகிர்ந்து கொள்ள முடிந்த அனைத்தையும் நாம் பகிர்ந்திருக்கிறோம். சில சமயங்களில் எவரிடமும் பகிர முடியாத சிலவற்றை உங்களோடு மட்டும் நான் பகிர்ந்திருக்கிறேன். நின்று நிதானித்து எனக்கு நீங்கள் திசை காட்டியிருக்கிறீர்கள். என்னைக் காணும் போதெல்லாம் புன்னகை பூக்கும் உங்கள் முகம் என் ஆன்மாவில் ஒரு சித்திரமாக உறைந்து இருக்கிறது. குறிப்பாக நீங்கள் பரோலில் வந்த போது என் மைத்துனர் பாக்கியராசன் இல்லத்தில் நாம் இருந்த பொன்னான பொழுதுகள் தேன் வடியும் நினைவுகள்.

இனி உங்களது சிறகு விரும்பிய திசையெல்லாம் விரியட்டும். நிறைய வானம் பார்ப்பீர்கள். கடந்த காலங்களில் நத்தைப் போல ஒரு நாள் ஒன்று நகர்வது இனி குதிரை போல மாறும். கால மாறுதல்களின் வேகம் குறித்து நிறைய சிந்திப்பீர்கள். ஆனாலும் நள்ளிரவில் திடுக்கிட்டு விழிக்கும் போது எங்கே இருக்கிறோம் என்கிற மனப்பதட்டம் உங்களுக்குள் விரியும். உங்கள் அருகில் இருக்கும் அண்ணியும், அம்மாவும் உங்களுக்கு ஆறுதலை தருவார்கள். இதையெல்லாம் குறித்து என் வாழ்நாள் முழுக்க நான் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். என் நினைவுகளால் உங்களைப் பின்தொடர்ந்து கொண்டே இருப்பேன்.

நாம் வெவ்வேறல்ல.. ஒரே நினைவின் இரண்டு பிரதி என்றே உணர்கிறேன். அதனால்தான் உங்களின் உணர்வுகளை நான் உள்வாங்கி எழுத முடிந்தது என நிறைவுக் கொள்கிறேன்.

இந்த மகிழ்வான சமயத்தில் நம் மூத்தவர் தெய்வப் பெருமகன் தடா சந்திரசேகர் இல்லை என்கிற குறை மட்டும் எனக்கு ஏக்கமாய் தேங்கி நிற்கிறது. உங்களுக்கும் அது இருக்கும் தான். என்ன செய்ய.. மூத்தவரின் நிறைவேறாத ஆசையான உங்களது விடுதலை நிறைவேறி விட்ட மகிழ்வில் அவரது ஆன்மாவும் அமைதி அடைந்திருக்கும் என்று நினைவில் நாம் நிலைத்திருப்போம்.

இந்த சமயத்தில் விடுதலை கனவோடு நம்மிடமிருந்து விடைபெற்ற அண்ணன் சாந்தனை நினைவு கூர்கிறேன். அவர் இன்னும் சில காலம் நலமோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அண்ணன்கள் முருகன் ஜெயக்குமார் ஆகியோர் குடும்பங்களோடு இணைகிற இப்பொழுதுகளில் அவர்களது நலமும் வளமும் நீடிக்கட்டும்.

சொந்த ஊருக்கு சென்றவுடன் குலதெய்வம் கோவிலுக்கு போய் வாருங்கள். நம் மூதாதை உங்களுக்காக அங்கே காத்துக் கொண்டிருப்பார். படையல் போடுங்கள். பரவசமாய் இருங்கள்.
பழையன கழித்து புது வாழ்வு ஒன்றை புத்துணர்ச்சியோடு வாழுங்கள். உங்கள் வலி துயர் தியாகம் ஆகியவற்றை உணர்ந்த எல்லாம் வல்ல தெய்வங்கள் உங்களை காப்பார்கள்.

போய் வாருங்கள் அண்ணா. உங்கள் பால்யத்தில் நீங்கள் திரிந்த நதிக்கரையில் பால் நிலா பொழுதுகளில் காலார நடந்து செல்லுங்கள். நீங்கள் நேசித்த தாய் மண்ணை உங்கள் நினைவுகளின் கண்ணீரில் குழைத்து நெஞ்சில் பூசிக்கொள்ளுங்கள்.

சுருங்கிவிட்ட இந்த உலகில் என்றாவது ஒரு நாள் மீண்டும் நாம் சந்தித்தே தீருவோம். அந்த நாளுக்காக இங்கே நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். இந்த பூமியின் ஏதோ ஒரு இடத்தில் கடற்கரை ஓரத்தில் மகிழ்வான பொழுதில் நாம் நினைத்து சிரித்துப் பேச நிறைய செய்திகள் அன்று பூத்துக் குலுங்கும்.

அன்றைய நாளுக்காக … இனி நாங்கள் காத்திருப்போம்.

நெகிழ்வான நினைவுகளோடும்.. நெஞ்சம் முழுக்க பேரன்போடும்..

என்றும் உங்கள் தம்பி..
மணி செந்தில்.