
❤️
புத்தகங்கள் தரும் போதை போல் வேறு எதுவும் போதை தருவதில்லை. வாழ்வின் கிளர்ச்சியான மது புத்தகப் பக்கங்களில் தான் ஒளிந்து இருக்கிறது. வாங்குகின்ற எல்லா புத்தகங்களையும் படிக்கிறோமோ இல்லையோ புத்தகங்களுக்கு நடுவில் வாழ்வது என்பது பேரின்பத் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்களை வாங்குகிறோம். சில சமயம் நம் சேமிப்பில் உள்ள நாம் படிக்காமல் விட்ட புத்தகத்தை கூட மறதியாய் மீண்டும் வாங்கி வந்து விடுகிறோம். ஆனாலும் அதையும் வைத்து இது வேறு பதிப்பு, இது வேறு புத்தகம் என்று சமாதானம் ஆகிக்கொள்கிறோம்.
புத்தகங்களை யாராவது இரவல் கேட்டால் நான் பதட்டம் ஆகி விடுவேன். அந்த சூழ்நிலையை எப்படிக் கடப்பது என தவிப்பேன். ஏனெனில் இரவல் கொடுத்து நிறைய நல்ல புத்தகங்களை நான் இழந்திருக்கிறேன். அதே சமயத்தில் இரவல் வாங்கி வந்து சில நல்ல புத்தகங்களை அடைந்திருக்கிறேன்.
இன்னொன்று.. இரவல் கொடுத்து நல்லப் புத்தகங்களை இழப்பது என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. ஒருமுறை தஞ்சை வழக்கறிஞர் அண்ணன் நல்லதுரை அவர்களிடம் நக்சல் பாரிகளை பற்றிய “ரெட்சன்” என்கின்ற புத்தகத்தை இரவல் கொடுத்திருந்தேன். நீண்ட காலம் அவரிடம் திருப்பிக் கேட்க நானும் மறந்து விட்டேன். பிறகு அவரும் கட்சியில் இருந்து விலகி தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார். இப்போது அவரிடம் போய் கேட்டால் அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என்கின்ற சிந்தனையும் எனக்கு இருந்தது. மேலும் அவரும் எனக்கு “பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு” நூலை இரவலாக கொடுத்திருந்தார். இதற்கும்,அதற்கும் சரியாகிவிட்டது எனது சமாதானப்படுத்திக் கொண்டாலும், “ரெட் சன்” என்ற அந்தப் புத்தகம் இல்லாத எனது நூலக அறை ஏதோ குறைபாட்டுடன் இருப்பதாக எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.
சென்ற வருடம் புத்தக கண்காட்சியில் மீண்டும் அந்த புத்தகத்தை விலைக்கு வாங்கி என் அலமாரியில் வைத்த பிறகு தான் என் தவிப்பு தணிந்தது. புகழ் பெற்றவர்களின் புத்தக சேமிப்புகளை பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அண்ணல் அம்பேத்கரின் புத்தக சேமிப்பு மிக புகழ் பெற்றது. ஜவர்கலால் நேரு முக்கியமான புத்தகங்களை பெரிய மரப்பெட்டிகளில் அடுக்கி வைத்து பாதுகாத்ததாக சொல்வார்கள். உலகத்தின் மிக முக்கியமான புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை இப்போது படிப்பில் கூட இல்லாத அபூர்வ புத்தகங்களை எழுத்தாளர் கோணங்கி மிக கவனமாக சேகரித்து பாதுகாத்து வருகிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அண்ணன் சீமான் வீட்டு நூலகத்திலும் இது போன்ற பல முக்கியமான அபூர்வமான பதிப்பில் கூட இல்லாத புத்தகப் பொக்கிஷங்களை நான் கண்டேன்.
அறை முழுக்க நிரம்பி வழியும் புத்தகங்களுக்கு நடுவில் அமர்ந்திருக்கும் நேரங்களில் ராஜ தர்பாரில் ஒரு பேரரசனாய் அமர்ந்திருப்பது போல உணர்வு. சங்க காலப் புலவர்கள் தொடங்கி தற்கால எழுத்தாளர்கள் வரைக்குமான பலரும் நம் வீட்டு ராஜ அவையில் நம் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள் என்பதும், உலக வரைபடத்தில் நம் காணாத நிலங்களை எல்லாம் ஒளிப்படரும் புத்தகப் பக்கங்களின் மூலமாக நீளும் கற்பனை விரல்களால் நம்மால் தொட முடிகிறது என்பதும், எல்லாவற்றையும் தாண்டி புத்தகங்கள் கால எந்திரங்களை விட கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் வேகமாக பயணிப்பவை என்பதும் எவ்வளவு சுவாரசியமானது..???
ஒவ்வொரு புத்தகத்திற்கும் நமக்குமான உறவு வெகு அந்தரங்கமானது. ரகசிய காதலி தரும் கிளர்ச்சியை விட மேலானது. ஒவ்வொரு புத்தகத்திற்கு பின்னாலும் அது தந்த அனுபவங்களை சார்ந்து விவரிக்கப்பட வேண்டிய கதைகள் ஏராளம் உண்டு. வாசகர் ஒருவரிடம் இரவல் தந்த புத்தகத்தை மீண்டும் வாங்கப் போன எஸ். ராமகிருஷ்ணனின் அனுபவத்தை அவர் மிக அற்புதமாக “துணையெழுத்து” என்ற அவரது புத்தகத்தில் எழுதி இருப்பார்.
ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த, சொல்லப்போனால் மெல்லிய காதலும் பூத்திருந்த, ஒரு பெண்ணிடம் அந்தக் காலத்தில் நான் உருகி உருகிப் படித்த ப்யோதர் தாஸ்தாவெஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” புத்தகத்தை இரவல் கொடுத்திருந்தேன். பிறகு வீடு மாறுதல் அடைந்த கால ஓட்டத்தில் அந்த நேசிப்பு தொலைந்து போய், அந்தப் பெண்ணோடு சுத்தமாக எவ்வித தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. புதையல் போன்ற அற்புதமான புத்தகத்தை இரவல் கொடுத்து தொலைத்து விட்டோமே என்று பலமுறை சிந்தித்து எனக்குள்ளேயே குமைந்திருக்கிறேன்.
இப்போது எல்லா இடங்களிலும் அந்த புத்தகம் கிடைத்தாலும் நான் இரவல் கொடுத்த புத்தகம் இப்போது கிடைப்பதில்லை. அது சோவியத் ரஷ்யாவின் “ராதுகா பதிப்பகம்” வெளியிட்ட செவ்விலக்கிய பதிப்பு. தாள்கள் அப்படி பிரமாதமாக இருக்கும். கனமான அட்டையில் பைண்ட் செய்யப்பட்டு
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கட்டிடங்கள் பொன்னிற ஓவியமாய் அட்டை முகப்பில் வரையப்பட்டிருக்கும். அந்த கதையோடு தாஸ்தாவெஸ்கியின் மேலும் இரண்டு கதைகளும் அந்த நூலில் உண்டு. அப்படிப்பட்ட அபூர்வமான புத்தகத்தை நாம் மீண்டும் ஒருபோதும் சந்திக்க வாய்ப்பில்லாத ஒருவரிடம் இழந்து விட்டோமே என்கிற வலி எனக்கு எப்போதும் உறுத்திக் கொண்டே இருந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஏதோ ஒரு தேடலில் முகநூல் கணக்கில் அந்தப் பெண்ணை சரியாக கண்டுபிடித்து விட்டேன் . அவளுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தன. குடும்பத்தோடு பண்டிகை கொண்டாடுவது போல சில புகைப்படங்களை முகநூலில் அவள் பதிவிட்டிருந்ததை கண்டேன். எனக்குள் எவ்விதமான உணர்ச்சி அலையும் அந்த நொடியில் பொங்கவில்லை என்பது எனக்கே வேதனையாக இருந்தது. அவளிடம் ஒரு காலத்தில் கொடுத்த புத்தகத்தை மீண்டும் கேட்கலாமா என வெகு நேரம் யோசித்தேன். அவளும் தொலைத்திருந்தால் என்ன செய்வது என்றெல்லாம் யோசித்து விட்டு இறுதியாக அவளுக்கு மெசேஞ்சரில் ஒரு சிறிய செய்தி ஒன்றை அனுப்பினேன்.
“வணக்கம். என்னுடைய வெண்ணிற இரவுகள் புத்தகம் உங்களிடத்தில் இருக்கிறது. அதைத் தர முடியுமா..”
என்று கேட்டிருந்தேன் .
அவள் அடிக்கடி முகநூல் பக்கம் வராதவள் போல. என் செய்தியை அவள் பார்க்கவே இல்லை. நான் தினந்தோறும் மெசேஞ்ஜரை திறந்து பார்த்துவிட்டு ஏமாற்றம் அடைந்து கொண்டிருக்கும் போது தான் ஒரு நாள் திடீரென்று ” யூவர் அட்ரஸ் ப்ளீஸ்..” என அவளிடம் இருந்து ஒரு செய்தி.
நானும் என் முகவரி அனுப்ப, அடுத்த மூன்று நாட்களில் எனக்கு கொரியர்.
ஆவலுடன் பிரித்துப் பார்த்த போது அதே புத்தகம். எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. எங்கோ தொலைந்து போன என் காதலி எனக்கு மீண்டும் கிடைத்து விட்டது போன்ற பெரு மகிழ்ச்சி. அட்டைப் போட்டு பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்திருக்கிறாள்.
புத்தகத்தை புரட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். பின் அட்டையின் உட்புறத்தில் சிவப்பு வண்ண பென்சிலால் வரையப்பட்ட ஒரு சிவப்பு இதயம். அதன் கீழே நான் இரவல் கொடுத்த தேதியை குறித்து வைத்திருந்தாள்.
முதன்முறையாக இரவல் தந்த புத்தகத்தை மீண்டும் அடைந்த மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து லேசாக வலித்தது.
அதற்குப் பிறகு அவளும் முகநூல் கணக்கில் இல்லை.
❤️
Arafath
உங்கள் அனுபவமே புத்தகம் படிப்பது போலதான் இருக்கிறது…..