🟥
வாழ்வின் அலைகழிப்பெல்லாம் எதற்காக என்று நீங்கள் நினைக்கிறீர்கள்…
எங்கெங்கோ ஓடி ஓடி ஒளிவதும் களைப்படைந்து மூச்சிரைக்க சாய்வதும் எதற்காக என்று நீங்கள் நினைக்கிறீர்கள்…
அது ஒரு பாவனை.
எதையோ மறக்க.. மறக்க முடியாமல் இறக்க.. செல்லும் நடைபாதையில் தானே தன்னையே தொலைக்கும் தோற்றம்.
வாழ்வின் கொடூர விதி என்ன தெரியுமா..
நாம் யாரை எவ்வளவு நேசிக்கிறோமோ… அதன் அளவு நாம் நேசிக்கிறவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாத அளவில் இருப்பது தான்.
இறுதி வரை அது ஒரு மாய விளையாட்டு.
சுவற்றில் வீசப்பட்டும் திரும்பி வராத ரப்பர் பந்து.
மழை நீரில் நனைந்து முழுகி போகும் காகிதக் கப்பல்.
எழுதப்படாத கவிதையை சுமக்கும் வெற்றுத்தாள்.
🟥
இடதுசாரி இயக்கங்களில் பயணித்த போது கட்சி அலுவலகத்திலேயே சதா நேரம் உண்டு உறங்கி வாழ்ந்து வந்த வயது முதிர்ந்த தோழர் ஒருவரை ஒரு காலத்தில் சந்திக்க நேர்ந்தது. கட்சி அலுவலகத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதில் தொடங்கி, வருகின்றவர்களுக்கு பதில் சொல்வதில் இருந்து, தண்ணீர் பிடிப்பது, விருந்தினர்களுக்கு டீ வாங்கி வருவது என அனைத்தும் அந்த முதிய தோழர் தான்.
இத்தனைக்கும் அவருக்கு ஒரு குடும்பம் இருந்ததை நான் அறிவேன். வார இறுதி நாட்களில் அவரை மாலை நேரங்களில் சந்தித்து விட்டு செல்லும் அவரது மகள் மற்றும் பேரக்குழந்தை ஆகியோரின் நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அவர் வீட்டுக்கு செல்வதில்லை. சொந்தமாக வீடு இருந்தது என்று கூட சொன்னார்கள். மகன் அரசு வேலையில் இருந்ததாகவும் இவரை அன்பாக பார்த்துக் கொள்ள முயற்சித்ததாகவும் சொன்னார்கள். ஆனாலும் அவர் கட்சி அலுவலகத்திலேயே இருந்தார். அது ஒரு வகையான மூர்க்கம். கட்சி அலுவலகத்தின் இரவு நேர தனிமை அவருக்கு வேண்டியதாக இருந்தது. அன்பும் நெருக்கமும் இல்லாத மேலோட்டமான உறவு நிலை அவருக்கு ஆறுதலாக இருந்தது. இதையெல்லாம் கவனித்த நான் ஒரு நாள் அவரிடம் பேச தொடங்கினேன்.
தோழர்..
சொல்லுங்க தோழர்.. தாமரை வந்திருக்கு படிச்சிட்டீங்களா..
தோழர்..உங்ககிட்ட தான் பேசணும்..
என்கிட்ட பேச ஒன்னும் இல்லையே.. என இறுகத் தொடங்கினார்.
ஏன் தோழர் வீட்டுக்கு போகாம இங்கேயே இருக்கீங்க.. என கேட்ட என்னிடம், டீ சாப்பிடுறீங்களா.. என பேச்சை மாற்று நோக்கில் மேலோட்டமாக கேட்டார்.
நான் நின்று நிதானித்து “சேர்ந்து டீ சாப்பிட போவோமா.. ” என்ற எனது கேள்வியில் லேசாக தோழர் பதட்டமானார்.
இல்லை.. நீங்கள் இருங்கள்.. நான் போய் டீ வாங்கி வருகிறேன் என்றார்.
சேர்ந்தே போவோமே.. என சொன்னதற்கு அவர் சட்டென என்னை பார்த்து.. ” தொல்லை செய்யாதீர்கள் தோழர்..! போய் வாருங்கள்..” என சொன்னார் .
அதிலிருந்து அவர் என்னிடம் பேசுவதில்லை. என் முகத்தை பார்ப்பதையே தவிர்த்தார்.
எனது நெருக்கம் அவருக்கு தொந்தரவாக இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். ஆனாலும் அதற்கு என்ன காரணம் என என் மனம் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.
பிறகு இதைப் பற்றி அவர் வயது கொண்ட இன்னொரு தோழரிடம் கேட்டபோது..
“அவன் அப்படித்தான். மனைவிகிட்டயும் இப்படித்தான் இருந்திருக்கிறான். அந்த அம்மாவும் புலம்பிக்கொண்டே போய் சேர்ந்துடுச்சு. யாரிடமும் அவன் அன்பா இருக்க முடியாது. கனிவா பேசிட முடியாது. யாராவது கனிவா பேசினா அவனுக்கு பயம் வந்துரும். தன் மீது யாரும் அன்பு பாராட்ட கூடாது என்பதில் அவன் ரொம்ப தீவிரமா இருப்பான். சின்ன வயசுல அவன் ஒரு பொண்ண விரும்பி இருக்கிறான். அந்தப் பொண்ணும் இவன தீவிரமா விரும்பி இருக்கு. இது வீட்டுக்கு தெரிஞ்சுப் போய் தகராறு ஆன உடனே கூப்பிட்டு வச்சு கேட்டதற்கு அந்த பொண்ணு சும்மா தான் பேசினேன் இவர் தப்பா நினைச்சுக்கிட்டாரு.. என சொல்ல அன்னிக்கு வெறுப்ப குடிக்க ஆரம்பித்தவன் தான். ஆயுசு முழுமைக்கும் யாரிடமும் ஒட்ட முடியாமல் வெயில் போல தகிச்சிகிட்டே இருக்கான். எண்ணெயில மிதக்கிற தண்ணி போல ஒட்டாம உலகத்தோட விலகி நிக்கிறான்”
கடைசியா கட்சியை விட்டு விலகும் போது அவரிடம் சொல்லிக் கொள்ள சென்ற போது அவர் என்னை நிமிர்ந்து பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.
வெளியே வெயில் தகித்துக் கொண்டிருந்தது.
அவருக்கு உள்ளேயும்.
🟥
எனது அணுக்க நண்பர் Suresh Kamatchi தயாரிப்பில், இயக்குனர் ராம் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்திருக்கிற “ஏழு கடல் ஏழுமலை” திரைப்படத்தின் சந்தோஷ் நாராயணன் குரலில், மதன் கார்க்கி வரிகளில், இப்பாடலை கேட்டபோது ஏனோ மனித வாழ்வின் அலைகழிப்பைப் பற்றியும், அந்தத் தோழரை பற்றியும் உள்ளுக்குள் நினைவுகள் சுரந்துக் கொண்டே இருந்தன.
நல்ல படைப்பின் நோக்கம் அதுதானே…
உள்ளுக்குள் ஏதோ ஒன்றே செய்ய வேண்டும்.
இந்தப் பாடல் செய்கிறது. கேளுங்கள்.
❤️
மறுமொழி இடவும்