🟥

காலம் ஒரு வெறி கொண்ட மிருகம். உன்மத்த வெறியோடு காலம் ஓடும் ஓட்டத்திற்கு பலியாகாதவர்கள் யாரும் இல்லை‌. குறிப்பாக மனித நினைவுகள் மீது காலம் நிகழ்த்தும் வன்முறை போல வேறு எதுவும் கொடுமை இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பாக மறைந்த மருத்துவர் அண்ணன் சித்தார்த்தனோடு மூணாறு சென்றிருந்தபோது நினைவுத் தவறிய ஒரு பெரியவரை சந்தித்தோம். ஒரு மலைப்பாறையில் அமர்ந்து கொண்டு சதா முணுமுணுத்துக் கொண்டு இருந்த அவர் 1970 களை விட்டு தாண்டவே இல்லை எனவும், சொல்லப்போனால் அவரது நினைவுகள் காலத்தின் விசித்திர புள்ளி ஒன்றில் தேங்கி விட்டன என்றும் அவரது மகள் மூலம் தெரிந்துக் கொண்டோம். அவரது மகள் முகச்சாடையில் இருந்த தன்னுடைய பேத்தியை அவர் மகளாக நினைத்து பேசுவதையும் நேரில் பார்த்தோம். அவரைப் பொறுத்தவரையில் காலம் உறைந்துப் போன ஒரு பனிக்கட்டியாக இறுகி விட்டது. கூட இருந்த அண்ணன் சித்தார்த்தன் “அவரவருக்கு பிடித்த காலத்தில் அப்படியே இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..” என என்னிடம் கேட்டபோது என்னிடத்தில் அப்போது பதில் இல்லை.

உண்மைதானே. எல்லோருக்கும் பிடித்தமான காலம் என்ற ஒன்று மனதோரம் ஒரு சுழலும் இசைத் தட்டு போல இசைந்துக் கொண்டே இருக்கிறது. சமகாலத்தில் எப்போதெல்லாம் காயங்களால் கீறப்பட்டு உலர்ந்து விடுகிறோமோ, அப்போதெல்லாம் நாம் வாழ்வதற்கான ஈரத்தை அங்கிருந்து தானே எடுத்துக் கொள்கிறோம்..!

யாரையும் காலம் விட்டு வைப்பதில்லை.காலம் என்ற கருணையற்ற மிருகம் பிடித்தமான காலத்திலிருந்து நம்மைப் பிய்த்து எறிகிறது. எங்கோ இடம் பொருள் ஏவல் தெரியாமல் தூக்கிப் போடுகிறது. வன்முறையாய் நமது மீது காலம் நிகழ்த்தும் நகர்வுகளால் “பிடித்த காலம்” என்பது ஒரு நினைவு போல மாறிப் போய் அந்த நினைவுகளும் கூட மறதியின் தூரிகையால் மங்கலாக்கப்பட்டு விடுகின்றன.

“மூன்றாம் பிறை” திரைப்படத்தில் நினைவுப் பிசகும் கதாநாயகி அவளது சிறு வயதிற்கு சென்று விடுவாள். சிறுவயதில் தலையில் நிறைய முடி இருந்த தந்தை முகம் தான் அவளது நினைவேட்டில் பதிந்திருக்கும். தன்னை கண்டுபிடித்து வந்து நிற்கும் நிகழ்காலத் தந்தை அவளுக்கு யார் என்றே தெரியாது. அவளைப் பொறுத்த வரையில் காலம் நகரவே இல்லை.

அப்படியே அதற்கு எதிர்மறையாக “ஒரு கல்லூரியின் கதை” என்ற திரைப்படத்தில் நினைவுப் பிசகும் கதாநாயகனுக்காக உடன் படித்த அனைவரும் மீண்டும் ஒரு கல்லூரி காலத்தை உருவாக்கி அவனுக்கு முன்னால் ஒரு காலத்தை பின்னால் நகர்த்தி மீண்டும் நிகழ்த்தி காட்டுவார்கள்.

காலத்தின் கொடிய விதி எது தெரியுமா…நம்மைக் கடக்கும் காலத்தின் சிறு துளியைக் கூட நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. கால எந்திரங்கள் என்கிற திரைப்படங்களின் வசீகர கற்பனைகள் ஒருவேளை சாத்தியப்பட்டால் யாருமே நிகழ்காலத்தில் இருக்க விரும்ப மாட்டார்கள்.

என் வாழ்வின் ஏறக்குறைய 25 வருடங்கள் வாழ்ந்த மன்னார்குடிக்கு சென்றிருந்தபோது நான் பள்ளி முடித்து என் வீட்டிற்கு திரும்பும் வீதியை பார்க்க வேண்டும் என விரும்பினேன். வீதி பெரும் மாற்றத்தைச் சந்தித்திருந்தது. நான் பார்த்த எந்த முகங்களும் இப்போது இல்லை. என்னுடைய டியூஷன் வாத்தியார் காசிநாதன் சார் வாழ்ந்திருந்த வீடு சீரமைக்கப்பட்டு வடிவம் மாற்றப்பட்டிருந்தது. புதிய கேட் மாற்றப்பட்டிருந்தது.
நிறைய புதிய கட்டிடங்கள். தெருமுனைகளில் தென்படும் கோவில்கள் மட்டும் மனித நம்பிக்கைகளின் காரணமாக இடிக்கப்படாமல் இருந்தது மனதிற்கு ஏனோ ஆறுதலாகப் பட்டது.

அதைத் தாண்டி வந்த போது , என் குடும்பத்தோடு நான் பல ஆண்டுகள் வசித்து வந்த என் வீடு அமைந்திருந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் கட்டிடங்கள் முற்றிலுமாக இடிக்கப்பட்டு கற்குவியலாக இருந்ததை கண்டபோது ஒரு நொடியில் உறைந்து போனேன்.

“ஏ பிளாக் ஐந்தாம் நம்பர் வீட்டின்” (A-5) கற்கள் ஏதாவது அங்கே இருக்குமா என தேடிப் பார்க்க கூட எனக்குத் தோன்றியது.

உண்மையில் வீடு என்பது வெறும் கற்களால் கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமல்ல. நினைவுகளின் சேகரம். கனவுகளின் தாழ்வாரம். உணர்ச்சிகளின் பத்தாயம்.

அந்த வீட்டிற்குள் எனக்கு எவ்வளவோ நடந்து இருக்கிறது. எல்லாவற்றுக்கும் அந்த வீட்டின் சுவர்கள் சாட்சியாக இருந்திருக்கின்றன. என் வீட்டின் பின்பக்கம் ஒரு பால்கனி இருக்கும். அதில் நான் கை வைத்து நின்று கொண்டிருக்கும் இடம் கூட இன்றும் என் நினைவில் அப்படியே இருக்கிறது. அந்தப் பால்கனியில் தொட்டியில் புதைத்து வளர்த்த ஒரு சிறிய மாஞ்செடியை வீட்டை காலி செய்து புறப்படும் போது தொட்டியோடு எடுத்து வந்து இப்போது நான் வசிக்கும் வீட்டில் தோட்டத்தில் புதைத்து வைத்தேன். அது பெருமரமாக நிற்கிறது. இந்த இரவில் அதுவும் சோகத்தால் விம்மி கொண்டிருக்கும் என நான் உணர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் கட்டிடத்தின் மொட்டைமாடி. சிவப்பு கற்கள் பாவித்த அந்த மொட்டை மாடி முழுக்க என் கனவுகள் இறைந்து கிடந்தன. புகை போக்கி கூண்டின் மீது படுத்து கொண்டு வானத்தைப் பார்த்து கிடந்த பொழுதுகளை வானம் கூட மறந்திருக்காது.

எங்கள் வீடு இருந்த அந்த வீட்டு வசதி வாரிய கட்டிடம் இடிந்து கிடந்தது கைவிடப்பட்ட ஒரு அரண்மனை சாய்ந்து கிடந்தது போல ஒரு காட்சி. உண்மையில் அந்தக் கட்டிடம் ஒரு அரண்மனை தான். அந்தக் கட்டிடத்தில் பதவிகளில் அதிகாரத்தில் வலம் வந்த அரசர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இணையாக நிறைய கதைகள் பேசிக் கொண்டு மகாராணிகள் உலவினார்கள். வேகமாக காற்றைக் கிழித்து பயணப்படும் இளவரசர்கள் இருந்தார்கள். சுற்றிலும் நறுமணம் மிதக்க நீல விழி இளவரசிகள் வெள்ளை உடை அணிந்து உலா வந்த பொழுதுகள் இருந்தன. எல்லோரும் கூடி நின்று கொண்டாடிய நிலா காலங்கள் இருந்தன. பகிர்ந்து கொள்ள உணவும் உறவும் நேசமும் இருந்தன. அந்தக் கட்டிடத்துக்குள் ஒரு அரண்மனை மட்டும் அல்ல, ஒரு சாம்ராஜ்யமும் அதற்கே உரிய கம்பீரத்தோடும் வீரத்தோடும் காதலோடும் சோகத்தோடும் இருந்தது.

ஆனால் சாம்ராஜ்யங்களை சரிப்பது தானே காலத்தின் தீரா விளையாட்டு.. காலத்திற்கும், நம் நினைவுகளுக்கும் நடக்கின்ற பகடை ஆட்டத்தில் காலம் எப்போதும் சகுனியைப் போல் வென்று விடுகிறது. எப்போதும் தோல்வியை தருகிற அந்த முடிவிலா பகடையாட்டத்தில் எல்லாவற்றையும் இழந்தவனாய், ஒரு கட்டிட இடிபாடுகளுக்குள் ஒரு அரண்மனையைத் தேடி நிற்பது பெரும் துயரமாக இருக்கிறது.

ஏன் எல்லாவற்றையும் இழந்தேன் என்று இப்போதும் எனக்கு புரியவில்லை. இப்போது அடைந்திருப்பது அனைத்தும் அந்த இழப்பினால் தான் என்கிற சமாதானமும் எனக்கு போதவில்லை. உள்ளுக்குள் கழிவிரக்கம் ஒரு வற்றாச் சுனை போல ஊறிக் கொண்டே இருக்கிறது. துயரம் மேலேழும்பி என்னை நானே வெறுக்கும் அவலமும் நடக்கிறது.

மொத்தம் ஆறு வீடுகள் இருந்த அந்த கட்டிடத்தில் மையப் பகுதியில் ஏறி வர எட்டு படிக்கட்டுகள் ஆறு முறை அமைந்திருக்க மூன்று அடுக்குகளில் அந்தக் கட்டிடம் உயர்ந்திருக்கும். குறிப்பாக என்னுடைய தனிப்பட்ட நூலகத்துடன் கூடிய அறை இசை கேசட்டுகளால் நிரம்பி வழியும். மர செல்ஃபில் நிரம்பி வழியும் புத்தகங்கள். 90களில் புகழ்பெற்ற இஷா கோபிகர் என்கிற ஒரு நடிகை உண்டு. அவரின் புகைப்படம் மற்றும் கோபுர வாசலிலே கார்த்திக்கின் புகைப்படம், இளையராஜா ஆர்மனியத்தோடு அமர்ந்திருக்கும் புகைப்படம், மேசையில் வைக்கப்பட்டிருக்கும் பெரியாரின் புகைப்படம் , ரஷ்ய புரட்சியாளர் லெனினின் ஓவியம் என ஒரு மியூசியம் போல அந்த அறையை நான் அலங்கரித்து இருப்பேன். வடக்கு திசையில் இருக்கும் ஜன்னல் கதவு எனக்கு விசேடமானது. அதை திறக்கும் போதெல்லாம் அதன் வழியாக ஒரு ஏணியை கொண்டு வானத்தில் ஏறி விடுவேன். மனமெல்லாம் சிறகு முளைக்க வைக்கும் அந்த ஜன்னல் இன்று இல்லை என நினைக்கும் போது சிறகு தொலைத்த பறவையாய் துவள்கிறேன்.

The Shawshank Redemption (1994) என்கிற புகழ்பெற்ற திரைப்படத்தில் வரும் சிறை நூலகர் கதாபாத்திரம் மிகவும் பிரசித்தமானது. வாழும் காலம் முழுக்க சிறையில் ஒரு நூலகராக இருந்து விட்டு விடுதலையாகி வெளியே வரும்போது காலத்தின் கோர ஓட்டம் தாங்க முடியாமல் மீண்டும் சிறைக்குத் திரும்ப முயற்சிக்க, அதுவும் தோல்வி அடைந்து அவர் தன்னைத்தானே தற்கொலை செய்து கொள்கின்ற காட்சி இதுவரை வெளிவந்த திரைப்படங்களிலேயே மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. யாராலும் தனக்கு பிடித்த காலத்திற்கு திரும்ப முடியாது என்பது தானே காலத்தின் கொடும் விதி..

The Last Emperor (1987) என்கிற புகழ்பெற்ற ஆஸ்கர் விருது வாங்கிய திரைப்படத்தில் நாட்டில் நடந்த அரசியல் புரட்சியால் தன் அரண்மனையை இழந்த அடையாளம் இழந்த ஒரு இளவரசன், பார்வை பொருளாக மாற்றப்பட்டு விட்ட தன் அரண்மனையை தானே சுற்றி பார்க்க வரும் காட்சி மறக்க முடியாதது.

அதுபோல இடிந்துக் கிடக்கும் என் வீட்டினை கடந்த போது கண்கலங்கி விழிகளை மூடினேன். இளையராஜாவின் பின்னணி இசை இசைக்கத் தொடங்க, காலம் ஏதோ ஒரு கருணையால் ஒவ்வொரு துளியாக பின்னகர்ந்து
இடிந்த கட்டிடம் துளித்துளியாய் மேலெழும்ப, அப்படியே இடிந்தவை அனைத்தும் அந்தந்த இடத்தில் பொருந்த ஏற்கனவே குடியிருந்தவர்கள் அனைவரும் மீண்டும் அங்கே குடியிருக்க திரும்ப, அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டிருக்க நான் ஒரு மூன்றாம் பார்வையாளன் போல அந்தக் காட்சிகளை பார்த்துக்கொண்டே இருந்தேன்.

The Last Emperor படத்தில் வரும் தன் அரண்மனையை தானே பார்க்க வரும் இளவரசன் போல.

தனக்குப் பிடித்த அரண்மனையில் வாழ்வாங்கு வசித்தவர்கள் யாவரும் இளவரசர்கள் தானே…!

❤️