உடைந்த என் மனம் பெருமழைக் காலத்தில் பசுங்கொடியேறிய கோவில் சுவற்றோரம் நடுநடுங்கி நிற்கும் நனைந்த ஒரு நாய்க்குட்டி.
அதன் பரிதாபக் கண்களுக்கு பின்னால் இருக்கும் சிராய்ப்புகள் குறித்து ஆராயாதே.
நீ ஆழ் மனதில் சேகரித்து வைத்திருக்கிற இரக்கத்தின் ரொட்டித் துண்டுகளை அதை நோக்கி வீசாதே.
உலர்ந்த உன் சொற்களைக் கொண்டு அதன் துயரத்தை துவட்ட நினைக்காதே.
அதன் காரணக் காரியங்களை ஆராய காரிருள் காயங்களின் மீது உன் மெய்யறிவு மின்மினிகளை வீசாதே.
வலி போக்கும் வாஞ்சை நிறைந்த உன் பாடல். கூடவே உன் பச்சாதாபம் தங்கத்துகள்களாய் மிதக்கும் கரிசனையின் மது. துன்பம் வருட காற்றிலலையும் உன் தயாளத்தின் இசைத் துண்டு. பரவசமூட்டும் உனதன்பின் சாரல் அணிந்த ஒரு ரோஜா.
என எதுவும் வேண்டாம் அதற்கு.
இப்போதைய தேவை.
எவ்வித விளக்கமும் கோராத ஒரு சிறிய மெளனம்.
பிறகு ..
கதகதப்பாய் ஒரு பார்வை.
அவ்வளவே.
இந்த அளவில் கருணை, இந்த அளவில் ஆறுதல், இந்த இரவுக்கு போதுமானது.
நீ பேசிய நாட்களை விட பேசாத நாட்கள் தான் என்னிடம் பேசிக் கொண்டிருக்கின்றன.
❤️
இப்போதெல்லாம் சொற்கள் தீர்ந்தவர்களாக நீரற்ற ஒரு புராதன கிணறு போல நாம் மாறி இருக்கிறோம். நம் ஆழத்திலிருந்து காதலின் வெளவால்கள் பிறர் அறியா அலை வரிசையில் அலறிக் கொண்டு மேல் எழும்புகின்றன.
❤️
நம் சொற்கள் அனைத்தும் நாம் அலைந்த இடங்களில் உறங்கிய படுக்கைகளில் திரிந்த சாலைகளில் உதிர்ந்த மல்லிகைகளாய் காய்ந்து கிடக்கின்றன. அவற்றை யாரோ கூட்டி அள்ளி ஒரு ரோஜா செடியின் கீழ் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அந்த செடியின் ரோஜாக்கள் வண்ணத்துப்பூச்சிகளோடு பேசிக்கொள்ள தொடங்கியிருக்கின்றன.
❤️
நிறைய பேசியிருக்கிறோம். எதுவுமே நினைவில்லை. பேசாமல் இருந்த பொழுதுகள் மட்டும் அப்படியே நினைவில் நிற்கின்றன.
❤️
தனியே நின்று கொண்டிருக்கிறோம். நீ பேசாமல் எதிரே நின்று கொண்டிருக்கிறாய். இதைவிட மிகச் சிறந்த உரையாடல் வேறு என்ன இருக்கிறது.?
❤️
உன்னிடம் பேச ஏதுமில்லை என்கிறாய். மென்மையாய் சிரித்துக் கொள்கிறேன். நிறைய பேச இருக்கிறது என்பதை உன்னைத் தவிர இவ்வளவு அழகாக யாரால் சொல்லிவிட முடியும்..?
❤️
இனி பேச மாட்டேன் என்று இறுகிய குரலில் முகம் சிவந்து சொல்கிறாய். மெதுவாய் உன் கைகளைப் பற்றுகிறேன். இனி ஏன் பேச வேண்டும்..??
❤️
ஒரு சொல்லுக்கும் அடுத்த சொல்லுக்கும் இடையே நீ விடுகின்ற மௌன இடைவெளியில் ஒரு கவிதையை நட்டு விடுகிறேன். எப்போதும் அந்தியின் நீலத்தை சுமந்து கொண்டு ஒரு ஒற்றைப் பூ அந்த கவிதையில் பூத்து விடுகிறது.
❤️
சொற்களால் நிரப்பப்படும் கவிதைகளை நான் வெறுக்கிறேன். உனக்கும் எனக்கும் இடையே நிகழும் சொற்களற்ற தருணம் கவிதை என உணர்கிறேன்.
❤️
இனி நிறைய நேரம் பேசாமல் இரு. நான் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீயும் நானும் பேசாமல் இருந்ததை கவிதைகள் பேசட்டும்.
புகழ்பெற்ற இயக்குனர் ராஜமவுலியை பற்றி “Modern Masters -S.Rajamouli “என்ற பெயரில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஒரு ஆவணப்படம் வந்திருக்கிறது . ஏறக்குறைய 1 1/4 மணி நேரம் ஓடக்கூடிய இந்த இந்த ஆவணப்படத்தில் ராஜமவுலியின் திரைப்படங்கள், அவை உருவான விதம், அவரது தனிப்பட்ட வாழ்க்கை என பல செய்திகள் கிடைக்கின்றன.
ராஜமவுலியின் திரை உலகம் இந்திய சமூகம் நீண்ட காலமாக நம்பி வருகிற புராண- இதிகாச மரபுகளை சார்ந்தது. கற்பனை வாத, பெருமித இந்து தேசியவாத பின்புலங்களைக் கொண்டது. குறிப்பாக இராமாயணம், மகாபாரதம் என்கின்ற இரு பெரும் இதிகாசங்கள் தான் அவரது பிரம்மாண்ட படங்களுக்கு மூல காரணமாக இருந்திருக்கின்றன. தன்னை நாத்திகர் என வெளிப்படுத்திக் கொள்ளும் அவர் இந்திய சமூகத்தின் சாதிய அடுக்கு முறையின் நுட்பமான மூல வேரான சனாதனத் தர்மத்தை நம்புவது நகை முரண்.
புராதன இந்திய கலாச்சாரத்தின் நம்பகராக தன்னை வெளிப்படுத்துகிற ராஜமவுலி, அவசியம் அம்பேத்கரை படிக்க வேண்டும் என நான் பரிந்துரைப்பேன். எது இந்திய கலாச்சாரம் என்பதிலும் அது யாரால் முன்வைக்கப்படுகிறது என்பதிலும் மிக நீண்ட அரசியல் வரலாறு இங்கே இருக்கிறது. இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களாக கட்டமைக்கப்பட்டிருக்கின்ற இராமாயணம், மகாபாரதம் கூட இந்தப் பெரு நிலத்திற்கு பொதுவானவை அல்ல. ஒவ்வொரு நிலத்திற்கும், ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனித்தனி நம்பிக்கைகள், மெய்யியல் வரலாறுகள் என இங்கே தனித்துவங்களின் எண்ணிக்கை மிக அதிகமானவை. ஒட்டுமொத்த இந்திய தேசம் என கட்டமைக்கப்படும் பெருமித வாதத்தில் சிறு சிறு இனங்களுக்கான தனித்துவங்கள் அழிக்கப்பட்டு வருவதை நாம் கொந்தளிப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் காலம் இது.
அண்ணல் அம்பேத்கர் போல ஒட்டுமொத்த இந்திய பெருநிலத்தினை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, சிந்தித்த ஆற்றல் மிக்க மனிதர் இங்கே வேறு யாரும் இல்லை. அவர் ஆங்கிலேயரால் கட்டமைக்கப்பட்ட இந்திய தேசத்தின் சமயப் பண்பாட்டு மூலக்கூறுகளைப் பற்றி மிக நுட்பமாக ஆய்வு செய்தார். எனவே மிகப் பிரம்மாண்டமாக கதை சொல்லும் ஒருவர் தான் சார்ந்திருக்கும் நிலத்தின் மக்கள் வரலாற்றையும், பண்பாடுகளுக்குப் பின்னால் இருக்கின்ற அரசியலையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் ராஜமவுலியிடம் நிறைய போதாமைகள் இருக்கின்றன. இந்தப் போதாமைகளோடு அவரது கலை அம்சம் வெளிப்படும் போது பிழையான வரலாறுகள் பதிவு செய்யப்படும் அபாயங்கள் தொடர்கின்றன.
குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளமாக காட்டப்பட்ட பாகுபலி கட்டப்பா கதாபாத்திரத்தின் வடிவமைப்பைப் பற்றி, அதன் அடிமை குணாதிசயம் பற்றியும் , மேல் சாதி ஆதிக்கத்தை எந்த நிபந்தனையும்/ எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் அளவற்ற விசுவாசம் பற்றியும் ஒரு விமர்சன கேள்வி இந்த ஆவணப்படத்தில் முன்வைக்கும் போது, ராஜமவுலியால் அதை நேரடியாக எதிர் கொள்ள முடியவில்லை. அதை மக்களின் பொதுவான உணர்ச்சி எனவும் அதுதான் மக்களை ஈர்க்கின்ற அம்சம் எனவும் சமரசப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. காலங்காலமாக தொடர்கிற எந்த அநீதியையும் கேள்வி கேட்காத கலைஞனின் ஆன்மா நேர்மையான படைப்புகளை எப்படி தரும் என்கிற கேள்விக்கு ராஜமவுலியிடம் பதில் இல்லை.
இந்த ஆவணப்படத்தில் புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ராஜமவுலி திரைப்படங்களைப் பற்றி பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜேம்ஸ் கேமரூன் அவதார் வரிசை திரைப்படங்களில் உச்சபட்ச தொழில்நுட்ப சாத்தியங்களோடு தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஆதிக்கங்களுக்கான எதிர்ப்புணர்ச்சி, பூர்வ குடிகளின் எழுச்சி போன்றவை ராஜமவுலி திரைப்படங்களில் இல்லை என்பதும், ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் கூட வெளியான பூர்வ குடிகள் பற்றிய காட்சி அமைப்புகளும் மிக மிக மேலோட்டமானவை மட்டும் அல்ல, வணிக ரீதியிலான திரைப்படங்களுக்கான சமரசங்கள் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அரசியல் உரையாடல்களைத் தாண்டி இந்த டாக்குமென்டரி ராஜமவுலி என்கின்ற தனி மனிதனின் வாழ்வியல் ஒழுங்குகளை பற்றி பேசுவது தான் இந்த ஆவணப்படத்தை நம்மை பார்க்க வைக்கிறது. பிரம்மாண்டமான வெற்றிகளுக்கு பின்னால் ஒரு தனி மனிதனின் கனவும் ஈடுபாடும் தீவிரமும் உழைப்பும் எந்த வகையில் காரணமாக அமைந்திருக்கின்றன என்பதை அறிய தரும் வகையில் இந்த ஆவணப்படம் முக்கியத்துவம் வாய்ந்தது.