❤️

நீ பேசிய நாட்களை விட
பேசாத நாட்கள் தான்
என்னிடம் பேசிக் கொண்டிருக்கின்றன.

❤️

இப்போதெல்லாம்
சொற்கள் தீர்ந்தவர்களாக
நீரற்ற ஒரு புராதன
கிணறு போல
நாம் மாறி இருக்கிறோம்.
நம் ஆழத்திலிருந்து
காதலின் வெளவால்கள்
பிறர் அறியா
அலை வரிசையில்
அலறிக் கொண்டு மேல் எழும்புகின்றன.

❤️

நம் சொற்கள்
அனைத்தும்
நாம் அலைந்த
இடங்களில்
உறங்கிய படுக்கைகளில்
திரிந்த சாலைகளில்
உதிர்ந்த மல்லிகைகளாய்
காய்ந்து கிடக்கின்றன.
அவற்றை யாரோ
கூட்டி அள்ளி
ஒரு ரோஜா செடியின்
கீழ் கொட்டிக்
கொண்டிருக்கிறார்கள்.
இப்போது அந்த செடியின் ரோஜாக்கள் வண்ணத்துப்பூச்சிகளோடு பேசிக்கொள்ள தொடங்கியிருக்கின்றன.

❤️

நிறைய
பேசியிருக்கிறோம்.
எதுவுமே
நினைவில்லை.
பேசாமல்
இருந்த பொழுதுகள்
மட்டும்
அப்படியே நினைவில்
நிற்கின்றன.

❤️

தனியே நின்று
கொண்டிருக்கிறோம்.
நீ பேசாமல் எதிரே நின்று கொண்டிருக்கிறாய்.
இதைவிட
மிகச் சிறந்த உரையாடல்
வேறு என்ன இருக்கிறது.?

❤️

உன்னிடம் பேச
ஏதுமில்லை என்கிறாய்.
மென்மையாய் சிரித்துக் கொள்கிறேன்.
நிறைய பேச இருக்கிறது
என்பதை உன்னைத் தவிர இவ்வளவு அழகாக யாரால் சொல்லிவிட முடியும்..?

❤️

இனி பேச மாட்டேன் என்று
இறுகிய குரலில்
முகம் சிவந்து சொல்கிறாய்.
மெதுவாய் உன் கைகளைப் பற்றுகிறேன்.
இனி ஏன் பேச வேண்டும்..??

❤️

ஒரு சொல்லுக்கும்
அடுத்த சொல்லுக்கும்
இடையே நீ விடுகின்ற
மௌன இடைவெளியில்
ஒரு கவிதையை நட்டு
விடுகிறேன்.
எப்போதும் அந்தியின்
நீலத்தை சுமந்து கொண்டு
ஒரு ஒற்றைப் பூ
அந்த கவிதையில்
பூத்து விடுகிறது.

❤️

சொற்களால் நிரப்பப்படும்
கவிதைகளை
நான் வெறுக்கிறேன்.
உனக்கும் எனக்கும்
இடையே நிகழும்
சொற்களற்ற தருணம்
கவிதை என உணர்கிறேன்.

❤️

இனி நிறைய நேரம்
பேசாமல் இரு.
நான் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நீயும் நானும்
பேசாமல் இருந்ததை
கவிதைகள் பேசட்டும்.

❤️