25- 8 -2024 ஞாயிற்றுக்கிழமை மாலை செந்துறை பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி நடத்திய “சாதிவாரி கணக்கெடுப்பும், சமூக நீதியும்” என்ற தலைப்பிலான கூட்டத்தில் அண்ணன் சீமான் அவர்கள் பேசிய பேச்சு என்பது மிக மிக முக்கியமானது.

முதலில் சாதி என்கின்ற மனநோய் சமூகத்தை எவ்வாறு பாதித்திருக்கிறது..? சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன.. சாதி மறுப்பு பேசும் தமிழ் தேசியர்கள் எதனால் சாதி வாரி கணக்கெடுப்பு கோருகிறார்கள் என்பதற்கான விளக்கம்.. சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழக அரசின் துரோகங்கள்.. மண்டல் கமிஷன் பரிந்துரை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஐயா வே ஆனைமுத்து அவர்கள் செய்த முயற்சிகள்.. படையாட்சிகளும் பறையர்களும் சாதி கடந்து தமிழர்களாக இணைய வேண்டிய தேவை.. அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு எவ்வாறு வழங்கப்பட வேண்டும்.. சாதிய உணர்ச்சி எவ்வாறு சாகடிக்கப்பட வேண்டும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் நிகழும் வஞ்சகங்கள், என பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய அண்ணன் சீமான் அவர்களது உரை ஆதாரங்களுடன் நிகழ்த்தப்பட்ட ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரின் ஆய்வுக்கு நிகரான கட்டமைக்கப்பட்ட வரலாற்று பேருரை.

குறிப்பாக இசைஞானி இளையராஜாவை பற்றி, இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பற்றி, இந்திய குடியரசுத் தலைவர் திரோபதி முர்மு பற்றி, அவர்கள் சாதியின் பெயரால் இழிவுபடுத்தப்பட்ட கொடுமை பற்றி எரியும் நெருப்பின் மொழியோடு அவர் நிகழ்த்திய பேருரை உலகத் தரமானது.

இத்தனைக்கும் அந்தப் பேச்சு அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை அப்படியே கட்டிப்போட்ட சுவாரசியமான மொழி நடையில் , சித்தர் பாடல்கள், அவ்வையார் பாடல்கள், பாரதியார் கவிதைகள், திருக்குறள் என பல இலக்கிய மேற் காட்டல்களோடு அமைந்த மிகச்சிறந்த உரை.

நிறைய செய்திகள். நிறைய தரவுகள். பேச்சாற்றலின் பேரழகும், உணர்ச்சி கொந்தளிப்பின் தாண்டவமும் நிறைந்த அந்த உரை நூலாக்கப்பட வேண்டிய முக்கியமான ஆவணம்.

சமகாலத்தில் அண்ணன் சீமான் போல் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு, அது தொடர்பாக ஆய்வு செய்து தரவுகளோடு, வெகுஜன அரசியல் மேடையில் மக்களை கலைய விடாமல் நிறைய செய்திகளோடு மிகுந்த சுவாரசியமாக பேசும் ஆளுமைகள் யாரும் இல்லை.

அதற்கு அவர் எப்படி தயாராகிறார் என்பது தான் நாமெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது. இரவு பகல் பார்க்காமல் நிறைய படிக்கிறார். படித்ததை மனதில் நிறுத்தி வைத்துக் கொள்கிறார். நிகழ்கால செய்திகளோடு, இலக்கிய தொன்மை வரலாற்று தகவல்களோடு இணைப்பது குறித்து தெளிவான அடுக்குகளை மனதிற்குள் தயாரிக்கிறார்.

ஒரு கூட்டத்திற்கு தயாராவது என்பது, “ஒரு மாபெரும் வீரன் ஒரு போர்க்களத்திற்கு தயாராவது போல..” நேர்த்தியாக தயாராகி அவர் நிகழ்த்துகின்ற சொற்பொழிவு வேறு எந்த அரசியல் மேடையிலும் எந்தப் பேச்சாளராலும் நிகழ்த்தவே முடியாத அதி உச்ச ஆற்றலின் வடிவம்.

எனக்கு அருகில் அமர்ந்திருந்த என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் கிடம் கூட நான் சொன்னேன். “சாதிக்கு எதிராக அவர் பேசும் சொற்கள் அவர் ஆன்மாவிலிருந்து ஒலிப்பது. அது அடிமைப்படுத்தப்பட்ட ஒரு இனத்தின் ஆவேசம். அதனால்தான் அவரது பேச்சு அவ்வளவு நேர்மையாக, சீர்மை தன்மையோடு, கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் ஒரு தேர்ந்த இசைக் கலைஞன் நிகழ்த்துகிற இசை வடிவம் போல மேஜிக்கலாக இருக்கிறது…” என்றேன்.

பேச்சு கேட்டு வீட்டிற்கு வந்த பிறகு மீண்டும் ஒருமுறை அவரது பேச்சை கேட்டு பார்த்து சிலிர்த்துப் போனேன். நேரில் நான் கேட்டபோது எந்த அனுபவத்தை நான் அடைந்தேனோ, அதே அனுபவம் வீட்டில் நான் கேட்ட போதும் எனக்குள் நிகழ்ந்தது. அதுதான் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய உலக தரம் வாய்ந்த ஒரு சொற்பொழிவுக்கான இலக்கணம்.

ஓய்வு பெற்ற தமிழ்த்துறை பேராசிரியர் என் தந்தை முனைவர் ச.மணி அண்ணன் சீமான் அவர்களது இந்த பேச்சைக் கேட்டுவிட்டு ” இது போன்ற பேச்சை எல்லாம் நான் அண்ணா காலத்திற்குப் பிறகு இப்போது தான் கேட்கிறேன்” என்றார்.

நானெல்லாம் அண்ணா பேச்சை கேட்டதில்லை.

அண்ணன் பேச்சு கேட்கிறேன்.

நீங்களும் அந்த வரலாற்று பேருரையை கேட்க ‌‌…

❤️