🌑
மௌனம்
ஒரு
திரவம்.
உள்ளுக்குள்
ஊறி
உதடுகளில்
உறைகிறது.
🌑
மெளனம்
ஒரு
பசுங்கொடி.
அகத்தினில்
செழித்து
புறத்தினில்
படர்கிறது.
🌑
மெளனம்
சொல்லலை
வற்றிய
மனக்கடல்.
நடுநிசி
நிலவினில்
தனித்து
கொதிக்கிறது.
🌑
மெளனம்
உள்ளக்காட்டில்
திரிகிற
ஒளி வண்டு.
இருண்மையின்
நிழல் கிழிக்க
வெளிச்சத்தின்
வாள் வீசுகிறது.
🌑
மெளனம்
ஒரு முத்தம்.
காற்றின் நுனி
கூட
நுழைய முடியாத
இடைவெளிக்குள்
இறுகப்பற்றும்
இதழ்களின்
இறுக்கம்.
🌑
மெளனம்
ஒரு கொலை.
யாரையோ
எங்கோ கொல்ல
தூக்குகயிறை
தன் கழுத்தில்
தானே மாட்டி
இழுக்கும் குயுக்தி.
🌑
மெளனம்
ஒரு தந்திரம்.
நிறைவின்மை
நிறத்தை மறைக்க
அமைதியை
அரிதாரம் பூசும்
முகம்.
🌑
மெளனம்
ஒரு ஞானம்.
தெரிந்ததை
தெரியாதது போல
அறிந்ததை
அறியாதது போல
புரிந்ததை
புரியாதது போல
பாவித்து
அடவு பிடித்தாடும்
அறிவின் கூத்து.
🌑
மொத்ததில்
மெளனம்
என்பது
பேசாதிருத்தல்
அல்ல.
🌑
மறுமொழி இடவும்