❤️

இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு இறுதி நேரத்தில் ஓட்டுனர் கிடைக்காமல் நானே எனது மகிழுந்துவை‌ எடுத்துக்கொண்டு என் தம்பிகளை அழைத்துக் கொண்டு ஓட்டிச் சென்றது வலி மிகுந்த களைப்பாக இருந்தாலும், பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. உடல் வலிமையாக இருக்கிறதா என நானே பரிசோதித்து பார்த்துக் கொண்டது நம்பிக்கை அளித்தது.

இந்த வருடம் புத்தக கண்காட்சியில் தமிழ் மொழியில் நேரடியாக எழுதப்பட்ட படைப்புகள் வழக்கத்திற்கு மாறாக குறைவாக தெரிந்தன. சில அரங்குகளின் பாதைகள் அகலமாகவும் சில பாதைகள் குறுகலாகவும் இருந்தது பல இடங்களில் நெருக்கடியாக இருந்தது. நிறைய அரங்குகளில் மொழிபெயர்ப்புகள் அதிகம் காணப்பட்டன.

அதனால் இந்த முறை மொழிபெயர்ப்புகளில் கவனம் செலுத்தி நிறைய நல்லப் புத்தகங்களை வாங்க தமிழின் நவீன இலக்கிய இளம் முகங்களாக திகழ்கிற எழுத்தாளுமைத் தம்பிகள் லட்சுமி சரவணகுமார், அகர முதல்வன் ஆகியோர் கூடவே அலைந்து உதவி செய்தனர். அவர்களுடன் என் மைத்துனர் பாக்கியராசன், தங்கை வெண்ணிலா, தமிழ் மீட்சிப்பாசறை கார்த்தி உள்ளிட்ட என் உறவுகளோடு ஒரு அட்டகாசமான அசைவ விருந்தை வழங்கிய தன் உணவகத்தில் என் தம்பி குறிஞ்சி பிரபா எனது பேரன்பிற்கு எப்போதும் உரியவன்.

எனது மகள்கள் அபி மற்றும் இசை மற்றும் மகன் பகலவனுக்காக புத்தகங்கள் வாங்க என்னைப் போலவே அலைய தொடங்கி இருக்கும் எனது மகன் சிபிக்கு எனது பேரன்பு.

என்னுடன் கும்பகோணத்தில் இருந்து புத்தக கண்காட்சிக்கு வந்த தம்பிகள் லிங்கதுரை முத்து அருண் எனது மகன் சிபி கௌதம் சென்னையில் இணைந்து கொண்ட தம்பிகள் எங்கள் மாவட்ட செய்தி தொடர்பாளர் தம்பி மணிகண்டன் தம்பி அன்பு ராஜேஷ், அரங்க உரிமையாளர்கள் பதிப்பாளர் சரவணன் தங்கப்பா, தமிழம் செந்தில்நாதன், தம்பி இடும்பாவனம் கார்த்திக் எப்போதும் என்னுடன் இணைந்து இருக்கிற என் மைத்துனர் பாக்கியராசன் என பலரும் புத்தகம் வாங்க அலைந்த போது, நடக்க முடியாத என்னைச் சுமந்து, என்னோடு திரிந்து என்னை ஆசுவாசப்படுத்தி, ஆங்காங்கே அமர நாற்காலிகள் வாங்கி கொடுத்து பல்வேறு பேருதவிகள் செய்தார்கள். அவர்கள் உதவி இல்லை என்றால் எதுவும் சாத்தியம் இல்லை.

இந்த வருடம் எனது கட்டுரை அடங்கிய அன்பு அண்ணன் பாலமுரளி வர்மன் தொகுப்பில் உருவாகி அண்ணன் சீமான் வெளியிட்ட “தமிழ்த்தேசியம் ஏன் எதற்கு எப்படி” என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் சரி, விற்பனையிலும் சரி பரபரப்பை கூட்டியது. தமிழ்த் தேசியத்தின் மீதான அறிவுலகின் நவீனத் தீண்டாமையை பெரும் கருத்துத் சுத்தியல் வைத்து உடைத்த வேலையை சிறப்பாக செய்த அண்ணன் பாலமுரளி வர்மன் அவர்களுக்கு எனது மனமார்ந்தப் பாராட்டுக்கள்.

அதேபோல் எனது கவிதைத் தொகுப்பான “நீல அந்தி” சிந்தனை விருந்தகம் வெளியீடாக அதன் அரங்கில் வெளியானது எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை அளித்தது. நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய எழுத்தாளர்கள் ஆய்வாளர் மன்னர் மன்னன், குணா கவியழகன், அஜிதன், தீபச்செல்வன் ஆகியோரை சந்தித்தது மனதிற்கு நிறைவாக இருந்தது. வழக்கம்போல் அண்ணன் பேரறிவாளன், அம்மா அற்புதம், எனது ஆசான் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரையும் பார்த்து உரையாடி விட்டு வந்தேன்.சில புத்தகங்களை சென்னையிலேயே சிந்தனை விருந்தகம் அரங்கில் விட்டு விட்டு வந்து விட்டேன். அதை பாதுகாத்து பத்திரமாக அனுப்பிய சரவணன் தங்கப்பா அவர்களுக்கும், எனது மாப்பிள்ளை அஜித் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

புத்தகங்களை அள்ளிக்கொண்டு மகிழ்ந்துவை ஓட்டி வரும்போது புத்தகம் சினிமா என உரையாடி நடு இரவில் மிகுந்த களைப்போடு வீடு திரும்பும் போது வாங்கி வந்த புத்தகங்களை அடுக்கி பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் போது களைப்பை மீறி ஒரு ராஜ போதை எழுகிறது அல்லவா… அது எதற்கும் ஈடாகாது.

இவ்வளவு புத்தகங்கள் வாங்கி படிக்கிறீர்களா என சென்ற வருடமும் கேட்டவர்களுக்கும் இந்த வருடமும் கேட்பவர்களுக்கும் சொல்லிக் கொள்ள ஒரே ஒரு பதில் தான்.. நம்மைச் சுற்றி இவைகள் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இவைகளுக்கு மத்தியில் வாழ்தல் என்பது வரம்.பெரும்பாலும் படித்து விடுவேன். சில படிக்க முடியாமலும் போய்விடுகிறது. ஆனால் வாங்காமல் இருக்க முடியவில்லை.பெரும்பாலும் புத்தகங்களை வாங்குவதை தவிர வேறு பெரிய செலவுகள் எதுவும் நான் செய்வதில்லை. எனது நூலகத்தில் இருக்கும் போது தான் என்னை பரிபூரணமாக உணர்கிறேன்.

இந்த வருடம் வாங்கியப் புத்தகங்களின் பட்டியல்.****************

1)யானைகளும் அரசர்களும்- சுற்றுச்சூழல் வரலாறு-தாமஸ் ஆல் ட்ரவுட்மன்.

2) திருக்குறள்- பரிமேலழகர் உரை ( என் அப்பாவிற்காக தம்பி அருண் வாங்கி கொடுத்தது)

3) திருக்குறள்- நாவலர் நெடுஞ்செழியன் உரை

4) சயனைட் – தீபச்செல்வன்

5) நபிகள் நாயகம் சில முக்கிய குறிப்புகள்- ஜியாவுதீன் சர்தார் – தமிழில் முடவன் குட்டி முகமது அலி.

6) ஆராச்சார்- கே ஆர் மீரா. தமிழில் செந்தில்குமார்.

7) குற்றமும் தண்டனையும்- தாஸ்தா வெஸ்கி – தமிழில் சுசீலா

8)கடவுளின் இறுதியாத்திரை- நேர்காணல்கள்- தமிழில் அசதா.

9) கே 3 – குறுங்கதைகள்- தமிழில் கணேஷ் ராம்.

10) 10 இரவுகளின் கனவுகள் – நாட்சுமே சோசெகி. தமிழில் கணேஷ் ராம்

11) மழையில் நனையும் பூனை மொழிபெயர்ப்பு கதைகள்- தமிழில் கோபாலகிருஷ்ணன்.

12) ஆகம்- சிங்கள நாவல்- மனுஷா ப்ரபானி திசநாயக்கா- தமிழில் எம் ரிஷான் ஷெரீப்

13) அன்னா- வாசு முருகவேல்.

14) உரக்கச் சொல்லாத சின்னஞ்சிறிய கதை- மனிஷா ப்ரபானி திசநாயக்கா – தமிழில் ரிஷான் ஷெரீப்.

15) முதல் தமிழ் வீரன் பூலித்தேவன் – துர்கா தாஸ் எஸ் கே ஸ்வாமி.

16) பாயக் காத்திருக்கும் ஓநாய்.-கவிதைகள்- அப்பாஸ் கியாரோஸ்தமி தமிழில் மோகனரங்கன்

17) இந்தியாவின் சுருக்கமான வரலாறு-ஜான் ஜுபர்ஸிக்கி- தமிழில் அரவிந்தன்.

18) வணக்கம் துயரமே- பிரான்சுவாஸ் சகன்.

19) மூன்று ஆண்டுகள்- அந்தோன் செகாவ்

20) சகினாவின் முத்தம்- விவேக் ஷான்பாக்

21) முறிந்த ஏப்ரல்- இஸ்மாயில் கதாரே

22) பெருந்தொற்று- ஆல்பர் காம்யூ

23) சிக்கு பிடித்த துயர்- நவீன் கிஷோர்.

24) அலியும் நினோவும்- குர்பான் சையத்.

25) மகாபாரதம்- கணேஷ் தேவி.

26) நிச்சயக்கப்பட்ட பெண்- ஆன்டன் செகாவ்.

27) பாரிவேள்- கி வ ஜெகநாதன்.

28) ஆன்டன் செகாவ் கதைகள்.

29) ஒளியின் கைகள்- எஸ் ராமகிருஷ்ணன். 30) கவளம்- எஸ் ராமகிருஷ்ணன். 31) கற்பனை அலைகள்- எஸ் ராமகிருஷ்ணன். 32) தபால் பெட்டி எழுதிய கடிதம்- எஸ் ராமகிருஷ்ணன்.

33) மலை பூத்த போது- ஜெயமோகன்

34) நாவலெனும் கலை நிகழ்வு- பி கே பாலகிருஷ்ணன்.

35) சூரியனை அணிந்த ஒரு பெண் கே ஆர் மீரா.

36) சுதந்திரத்தின் நிறம்- கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் வாழ்க்கை வரலாறு.

37) தமிழ்த்தேசியம் ஏன் எதற்கு எப்படி தொகுப்பு பாலமுரளி வர்மன்.

38) தோழர் தமிழரசன் மூன்று அறிக்கைகள்.

39) சிலப்பதிகாரம்- முனைவர் சரவணன்.

40) கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும் – மரியா ஆஞ்சலு.

41) ஒரு பெண்மணியின் கதை- அன்னி என்னோ

42) பட்டு-அலெக்சாண்டோ பாரிகோ.

43) கபிலர்- புலவர் கோவிந்தன்

44) கடலோடியின் மனைவி- லத்தின் அமெரிக்க பெண் எழுத்து

45) கண்ணகியார் அடிச்சுவட்டில் – சி. கோவிந்தராசனார்

46) பெரும் மரங்கள் விழும்போது- என் எஸ் மாதவன் தமிழில் நிர்மல்யா.

47) ஆணவ கொலை சாமிகளும் பெருமித கொலை அம்மன்களும்- ஆ. சிவசுப்பிரமணியன்.

48) கடைசி வருகை மாய யதார்த்த வாத உலகக் கதைகள்.

49) மொழிபெயர்ப்பு கட்டுரைகள் தமிழில் அசதா.

50) எரியும் சமவெளி யுவான் குல்ஃபோ.

51) தமிழரின் அடையாளம் எது? திராவிடம் குறித்த மீளாய்வு கருத்தியல்கள்- தொகுப்பு .ஏர் மகராசன்.

52) கோவில் புலியும் குமாயூன் ஆட்கொல்லியும் – ஜிம் கார்பெட்.

53) ஆத்ம சகோதரன்- தாவித் டியோர்.

54) என் தந்தை பாலையா ஒய் பி சத்யநாராயணா.

55) இஸ்லாமோ போபியா – இஸ்லாமிய வெறுப்பை அழித்தொழித்தல் -சுகைனா மன்சூர் கான்.

56) சொர்க்கத்தின் பறவைகள்- அப்துல்ரஸாக் குர்னா.

57) கொடுங்கோளூர் கண்ணகி – பி ஆர் சந்திரன்- தமிழில் ஜெயமோகன்.

58) ஆயிரம் ஊற்றுகள்- ஜெயமோகன்

59) வேங்கைவனம்- எம் கோபாலகிருஷ்ணன். சிறுவர் நூல்கள் ————————————

60) கயிறு- விஷ்ணுபுரம் சரவணன்.

61) டிராகன் அரசன் உலக நாடோடிக் கதைகள் தமிழில் சுகுமாரன் .

62) மரப்பாச்சி சொன்ன ரகசியம் – பாலபாரதி.

63) வாசிக்கும் கழுதை- உலக நாடோடி கதைகள் தமிழில் சுகுமாரன்

64) என் பெயர் வேனில்- ரமணி

65) கிச்சா பச்சா- விழியன். 66) மீன் காய்க்கும் மரம்- வைசாகன்

67) நீல தேவதை- ரமணா.

68) முத்து காமிக்ஸ் தொகுப்புகள் டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் 3 ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் -1

இதில் சில புத்தகங்களை நான் கேட்டதற்காக புத்தக கண்காட்சியின் கடைசி நாட்களில் அலைந்து திரிந்து வாங்கி பாதுகாப்பாக வந்து என்னிடம் சேர்த்த எனது தம்பி அகரம் அருண், கொற்கை கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.

அன்பினாலானது உலகு.