[youtube]https://www.youtube.com/watch?v=8k7UufYdlZc&feature=youtu.be&fbclid=IwAR3oSNGKuGUgr82umcMOGlj7KVfBK7hV1xr5iHomzuly_xD_8aeSzRm9yM8[/youtube]
அந்த உயரமான படிகளை பார்க்கும்போது ஏறிட முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அருகிலிருந்த தம்பி செந்தில் நாதனிடம் எனக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டேன். எப்போதும் என்னை போன்ற நபர்களுக்கு படிக்கட்டுகள் மிகவும் ஆபத்தானவை. படிக்கட்டுகள் இல்லாத ஒரு உலகம் எங்கேனும் இருக்குமாயின் அங்கே போய் அமைதியாக வாழ்ந்து விட வேண்டும் என உள்ளுக்குள் ஆழ்ந்த ஆசை.
என் திருமணத்தின் போது கூட திருமண மண்டபத்தில் இருந்த படிகட்டுகளில் முதல் நாளே சென்று ஏறி இறங்கி பயிற்சி எடுத்துக் கொண்டு தான் திருமணத்திற்கு சென்றேன். எந்த இடத்திற்கு போனாலும் என் கண்கள் தேடுவது அங்கே இருக்கின்ற படிக்கட்டுகளின் உயரத்தை தான்.
வெளிநாடுகள் என்னை போன்றவர்களுக்கு கருணை செய்கின்ற நிலங்களாக எனக்குத் தெரிகின்றன.வெளிநாட்டு பயணத்தின் போது நான் எங்கேயும் படிக்கட்டுகளை அதிகம் எதிர் நோக்கவில்லை. நடக்க முடியாதவர்களுக்கு.. முதியவர்களுக்கு உகந்த வகையில் கட்டிடங்களை அலுவலகங்களை விமான ரயில் நிலையங்களை அமைப்பதில் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிடம் இதுபோன்ற கருணையையோ அக்கறையையோ நாம் எதிர்பார்க்க முடியாது.
நாம் தமிழருக்கு வந்த பின்னர் … என் தம்பிகளின் தோள்கள் எனக்கு படிக்கட்டுகளை கடக்க உதவும் சிறகுகளாக மாறின. என்னோடு நெருங்கிப் பழகும் அனைவரின் தோள்களிலும் நான் பயணித்திருக்கிறேன். அண்ணன் சீமான் ,அண்ணன் ஹீமாயூன் போன்ற வயதில் மூத்தவர்கள் கூட நான் எங்கேயும் விழுந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமும் தாய்மையும் கொண்டிருப்பதை நான் நெகிழ்ந்து அனுபவித்து இருக்கிறேன்.
சமீபத்தில் மைத்துனர் அருள்மொழித் தேவன் திருமண நிகழ்வின் போது கூட அண்ணன் சீமான் அவர்கள் கூட்டத்திற்கு நடுவே நான் தடுமாறி விடக் கூடாது என்பதற்காக என்னை இறுகி பிடித்துக்கொண்டது நினைவுக்கு வருகிறது.
என் தம்பிகள் பலர் என்னை சுமந்து திரிந்திருக்கிறார்கள். வனங்களில் வெளிநாடுகளில், சுற்றுலாத் தலங்களில் நடக்கமுடியாத தொலைதூரங்களில் ஏறமுடியாத படிக்கட்டுகளில் என் தம்பிகள் என்னை தூக்க தயார் ஆகி விடுவார்கள்.அவர்களில் சிலர் மிகவும் புகழ் பெற்றவர்கள். அவர்களைக் காண பலர் காத்திருப்பார்கள். புகைப்படம் எடுக்க நின்று கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் என்னை கவனமாக அழைத்து வருவதில் மிகத் தீவிரமாக இருப்பதை நான் பல நேரம் அறிந்து என் இடையூறை எண்ணி நொந்திருக்கிறேன். அவர்களின் பெயரை எல்லாம் சொல்லி விட தோன்றுகிறது தான். ஆனாலும் சொல்லிவிட முடியாத அளவிற்கு நிறைந்திருக்கிற அவர்களது பெயர்களில் ஏதேனும் ஒன்றை நான் தவற விட்டுவிடக் கூடாது என்கின்ற கவனம் எனக்கு இருக்கிறது.
மிகுந்த உடல் உழைப்பு தேவைப்படுகிற அரசியல் களத்தை என் வாழ்வின் முக்கிய அங்கமாக நான் தேர்ந்தெடுத்தது குறித்து நான் என்றுமே கவலைப்பட்டதில்லை. அதற்கு காரணம் என் தம்பிகளும், என் அண்ணன்களும்.. என் மைத்துனரும்.
ஆனாலும் வாழ்வின் ஓட்டத்தில் எந்தக் கணக்கும் பிசகி விடக்கூடியது தானே.. அன்றும் அப்படித்தான் நடந்தது. ஒரத்தநாட்டில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில்.. பேசுவதற்காக தம்பிகள் உதவியோடு நான் மேடை படியேறும்போது… நான் பிடித்திருந்த தம்பியின் கை வேர்வையால் நனைந்திருந்தது. வேர்வை வழுக்கி படியில் கீழே விழுந்து விட்டேன். தம்பிகள் துரைமுருகன் செந்தில்நாதன் கரிகாலன் சரவணன் இராசமோகன் உள்ளிட்ட பலர் ஓடி வந்து என்னை தாங்கிப் பிடித்தனர். பிறகு எழுந்து மேடையேறி பேசி விட்டும் வந்து விட்டேன். அப்போது வலி ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. இரவு வீட்டிற்கு வந்த பிறகுதான் முதுகிலே கடுமையான வலி ஏற்பட்டது. நேற்றைய தினம் முழுக்க அதற்கான சிகிச்சை, வலி தொந்தரவு என பொழுது கழிந்து விட்டது.
இதுபோன்ற தருணங்கள் நம் வாழ்வில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நான் மிக கவனமாக இருப்பேன். தேர்தல் நேரம். கட்சிக்கு என்னால் முடிந்த உழைப்பை நேர்மையாக செய்து விடவேண்டிய தருணம். இந்த நேரத்தில் இதுபோன்ற தடுமாற்றங்களை நான் எதிர் கொள்ளக் கூடாது தான். என்னை விட கடுமையாக உடல் நலம் பாதித்தவர்கள் நடக்க முடியாதவர்கள் கூட எப்படியாவது இந்த இன நல அரசியல் வெல்ல உழைத்துக் கொண்டிருக்கும் போது.. நான் வலியை காரணம் காட்டி ஓய்வெடுத்து விடக்கூடாது. இது போன்ற பதிவுகள் உங்கள் மனதில் என் குறித்து ஏதேனும் அனுதாபத்தினை ஏற்படுத்தினால் நான் தோல்வியுற்றவனாக உணர்வேன். பல்வேறு சங்கடங்களுக்கு மத்தியில் போராடும் ஒரு தலைமுறையின் வாதையை பற்றியே நான் உங்களோடு மனதார உரையாட விரும்புகிறேன்.
தம்பி குடவாசல் மணிகண்டனை நினைத்துக் கொண்டேன். அதேபோல அதிராம்பட்டினத்தில் இருக்கிற என்னுயிர் சகோதரனை நினைத்துக்கொண்டேன். இன்னும் பலர் நினைவுக்கு வந்தார்கள். ஊருக்கு ஊராக பல்வேறு உடல் குறைகளோடு உழைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருப்பவர்களை விட நான் உயர்ந்தவன் அல்ல.
முதுகு வலி குறைந்தது போல தோன்றுகிறது. இன்று மாலை மீண்டும் களத்திற்கு திரும்பி விடுவேன்.
நாங்கள் தடுமாறலாம்.
கீழே விழலாம். அது ஒரு பொருட்டே அல்ல.
ஆனாலும் எம் தமிழ்ச்சமூகம் நிமிர வேண்டும்.