நினைத்துப் பார்ப்பதற்குள் கார்த்தி காற்றோடு காற்றாய் கலந்து விட்டான்.
அவனை முதன்முதலாக பார்த்த அதே மகாமகக் குளக்கரையில் அவனை இடுகாட்டில் வைத்துவிட்டு வந்து தனியே இந்த அந்தியில் நின்று கொண்டிருக்கிறேன். சமீபகாலமாக என்னைச் சுற்றி சூழ்ந்துக் கொண்டிருக்கிற மரணங்கள் என்னை முற்றிலுமாக உருக்குலைத்து போட்டிருக்கின்றன. இரவு நேரங்கள் மிகக் கொடியதாக நீண்டதாக சகிக்க முடியாத துயரம் நிரம்பியதாக மாறிவிட்டன.
என் வாழ்வில் என்னோடு அனைத்திலும் இணைந்து இயங்கியும், ரசித்தும், சிரித்தும், மகிழ்ந்தும், சிந்தித்தும், கலங்கியும் கலந்து இருந்தவன் கார்த்தி. நான் நம்பிக்கையோடு திரும்பிப் பார்க்கும் தருணங்களில் எல்லாம் கார்த்தியின் புன்னகை என்னை தொடர்ந்து வந்த நாட்களில் நான் வென்ற வண்ணம் இருந்திருக்கிறேன். எது குறித்தும் இதுவரை நான் அச்சப்பட்டதில்லை. எல்லா இடமும் நான் தொடக்கூடிய உயரத்தில் தான் இருக்கிறது என்று எனக்கு ஒரு உன்மத்தம் உண்டு. ஆனால் ஒரு மரணத்தின் மூலம் அனைத்து சமன்பாடுகளையும் சரித்துப் போட்டுவிட்டு சாய்ந்து விட்டான் கார்த்தி.
எப்போதும் அவன் மேடையில் நின்றதில்லை. திருச்சியில் நடந்த மாநில பொதுக்குழுவில் கலந்துகொள்ள வந்தவன் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அந்தப் பொறுப்பை அன்று ஏற்று நடத்திய ஆசைத்தம்பியோடு இணைந்து அனைவருக்கும் இறுதிவரை பரிமாறிக் கொண்டு இருந்தான்.
இறுதிவரை என்றால்.. கார்த்தியைப் பொறுத்தவரை இறுதிவரை தான். நடுவில் ஏதோ காரணம் காட்டி நகர மாட்டான். ஒரு வழியாக அனைவருக்கும் சாப்பாடு போட்டு விட்டு பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு.. அவன் வேர்வையும் அழுக்குமாக திரும்பி வந்தபோது என்னிடம் சொன்னது.. சீமான் அண்ணனுக்கு என் கையால் சாப்பாடு போட்டேன் அண்ணா என்று பெருமைப்பட்டுக் கொண்டான்.
அவன் ஒரு முழுமையான சீமான் தம்பி. தத்துவமோ, கொள்கை முடிவுகளோ, அரசியலோ எதுவாக இருந்தாலும் அவனுக்கு அண்ணன் சீமான் சொன்னால் அதுதான் வேதவாக்கு. அண்ணன் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கை. அதைக் கூட பழகும் தம்பிகளிடமும் அவன் விதைத்துக் கொண்டே இருப்பான்.
எங்களது கும்பகோணம் நாம் தமிழர் கட்சி எத்தனையோ சரிவு களையும் உயர்வுகளையும் கண்டிருக்கிறது. உடன் இருந்த பலரை இந்த பயணத்தில் நாங்கள் இழந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை நாங்கள் இழப்பிலிருந்து, கட்சியில் அரசியல் வாழ்க்கையில் ஏற்படும் சரிவுகளிலிருந்து மீள் வர துடித்து எழுந்திருக்கிறோம். சரிந்து விழுந்த தருணங்களில் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் கைகோர்த்துக்கொண்டு மீண்டும் எழுந்து நிற்க துணிவோம். அவ்வாறு நாங்கள் எழுந்து நிற்க துணியும்போதெல்லாம் முதலில் எங்களில் எழுவதற்காக உயரே நீளுகின்ற கை கார்த்தியினுடையது.
எல்லா சரிவிலிருந்து கட்சியை காப்பாற்றி அதை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடிய ஒரு காலத்தை நோக்கி அழைத்துச் சென்றவன் கார்த்தி.
ஆனால் கொடுங் காலம் எங்களுக்கு இழைத்துவிட்ட இத்தருணத்து சரிவிலிருந்து நாங்கள் எப்படி மீளப் போகிறோம் என்று எங்களுக்கே தெரியவில்லை.
கட்சி தொடங்கிய நாளிலிருந்து.. தனி நபர்கள் மீது.. தனிநபர்கள் சார்ந்து அமைக்கப்படும் அணிகள் மீது.. நம்பிக்கையற்று அண்ணன் சீமானின் சொல் எங்கே இருக்கிறதோ அங்கே இருந்தவன் கார்த்தி. நான் இங்கே இருக்கும் யாரையும் பார்த்து கட்சிக்கு வந்தவன் அல்ல அண்ணா.. நான் சீமான் அண்ணனைப் பார்த்து வந்தவன். அவர் எங்கு இருக்கிறாரோ அங்கே நான் இருப்பேன் என்று தனது நிலைப்பாட்டை நிர்ணயித்து உறுதிப்படுத்திக் கொண்டவன் கார்த்தி.
நிறைய என்னோடு பயணித்து இருக்கிறான். என்னிடம் கேட்டு கேட்டு ரசனைகளை உருவாக்கிக் கொள்வான். மகேந்திரன் படங்களாக பார்த்து கொண்டு இருக்கிறேன் அண்ணா.. ஒருநாள் அவன் என்னிடம் சொன்ன போது ஆச்சரியமாக பார்த்தேன். கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தில் வந்தாளே அல்லிப்பூ என்ற பாட்டைப் பற்றி சிலாகித்து ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தேன்.
மறுநாள் எங்கோ அந்தப்பாடலை தேடி எடுத்து தேர்ந்த ஒலித் தரத்தில் மறுபதிப்பு செய்து எனக்கு வந்து பரிசளித்துவிட்டு போனான்.
புது வீடு கட்டினான். கனவு போல ஒரு வாழ்க்கையை அமைக்க உழைத்துக் கொண்டிருந்தான். எல்லோருடனும் கூடி வாழ ஒரு வாழ்க்கை.. மகிழ்வாக, அர்த்தமுள்ளதாக.. உருவாக்க ஓடிக்கொண்டிருந்தான். வெண்மை நிறமுள்ள அந்த வீடு இவ்வளவு சீக்கிரம் இருள் அடைந்து போகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
அவனுடன் பழகிய பல பேரை எனக்கு அறிமுகம் செய்திருக்கிறான். அவரில் பல பேருக்கு பிழைக்க ஏதோ ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருக்கிறான்.
பார்ப்போரை எல்லாம் நாம் தமிழர் ஆக மாற்ற இடைவிடாது முயற்சிகள் செய்து கொண்டே இருப்பான்.
இன்று இடுகாட்டில் அவனது உடல் தகனம் செய்ய வைக்கப்பட்ட பொழுதில்… கட்சி முறைப்படி நாங்கள் அகவணக்கம் வீரவணக்கம் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். எங்கள் அனைவரின் மனதிற்குள்ளும் தாங்க முடியாத வலியும்.. எதிர்காலம் குறித்த இனம் புரியாத பயமும் நிறைந்திருந்தன. எங்கள் கண்கள் நீரால் நிறைந்திருந்த அப்பொழுதில்.. நாங்கள் ஒருவருக்கொருவர் கைகளை இறுக்க பற்றிக் கொண்டோம் . அந்த உறுதியில் கார்த்தி இன்னும் உயிரோடு இருக்கிறான் என நாங்கள் நம்பத் தொடங்கிவிட்டோம்.
அவன் இல்லாத அரசியல் வாழ்வு ஒன்றை நாங்கள் அனைவரும் வாழ்ந்துதான் ஆகவேண்டும். இனி ஏதாவது ஒன்றென்றால் அலைபேசியில் அனிச்சையாக அவன் பெயரை தொடும் எனது விரல்கள் தட்டுத்தடுமாறி பழகிக்கொள்ள இன்னும் சில நாட்கள் ஆகும்.
இப்போதைக்கு அவன் நினைவுகள் மட்டும் தான் எங்கள் அனைவரின் மனதிலும் ததும்பிக் கொண்டே இருக்கிறது.
அதைத் தாண்டி ஏதாவது யோசித்தால்..
வெறும் இருட்டு.. இருட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை.