அழுது அழுது அவனது கண்கள் வீங்கி இருந்தன. பக்கத்தில் அமர்ந்திருந்த எனக்கு என்னவோ போலிருந்தது. குமாருக்கு இது புதிது இல்லை. நிறைய முறை பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்து விடுவான். அப்போது செய்து கொண்டிருந்த பைத்தியக்காரத்தனம் தீவிரமாக ஒரு பெண்ணை காதலித்தது.

குமார் எல்லாவற்றிலும் தீவிரமானவன்தான். எதையும் நிதானமாக அவன் செய்ததாக எனக்கு நினைவில்லை. அது டேப்ரிக்கார்டர்களின் காலம். பாட்டு கேசட்டுகள் சேகரித்து வைத்திருப்பது என்பது அந்தக்காலத்தின் இளைஞர்களின்
பழக்கங்களில் ஒன்று. குமார் அதிலும் தீவிரமானவன்தான். கேசட்டுகளாக வாங்கி தள்ளினான். பக்கத்து வீட்டுப் பெண்ணான சித்ராவை உயிருக்குயிராக விரும்பினான். அவளும் பாட்டு பைத்தியம். இவன் ஒரு பாட்டு போட,.. பதிலுக்கு அவள் ஒரு பாட்டு போட.. அந்தக் காலகட்டத்தில் எங்கள் தெருவே எப்போதும் பாட்டுக் கச்சேரி நடக்கின்ற திருவிழா கோலமாக தான் காட்சியளிக்கும். பாடல்கள்தான் அவனை அவளை காதலிக்க வைத்தது. “பிரியசகி வருவேன் வாசல் தேடி” என ஒரு பாடலை அவன் ஒலிக்க வைத்தால்.. பதிலுக்கு “ராசாவே உன்னை விடமாட்டேன்” என்கின்ற பாடலை அவள் ஒலிக்க வைப்பாள். அங்கே “ஓ.. உன்னாலே பெண்ணானேன்” என்ற பாடல் ஒலித்தால்.. இங்கே “ஒரு காதல் என்பது என் நெஞ்சில் உள்ளது” என்ற பாடல் ஒலிக்கும். இப்படியான தீவிரமான அவர்களது காதல் ஒரு பேருந்து நிலையத்தில் முடிவுக்கு வந்தது. எட்டு வருட காதல். ஏதேதோ காரணங்கள் இருவரும் தயாரித்துக் கொண்டு பிரிவதற்கு தயாராகிவிட்டார்கள். கடைசியான சந்திப்பு பேருந்து நிலையத்தில். நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு பிரிந்தபோது இருவரும் அழவில்லை. கடைசியாக பேருந்து ஏறும் போது ஏனோ அவள் அழுதுகொண்டே ஏற, அதை அமைதியாக பார்த்துக்கொண்டு நின்ற இவன் பேருந்து சென்ற பிறகு, அங்கே இருந்த மர பெஞ்சில் அமர்ந்து அழத்தொடங்கினான். அது ஒரு உக்கிரமான அழுகை. நான் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தேன். அவன் தேறவில்லை. அதன் பிறகு அவன் நிறைய குடிப்பதாகவும், பல ஊர் அலைவதாகவும் நண்பர்கள் சொன்னார்கள். பல நாட்களுக்குப் பிறகு எதிர்பாராதவிதமாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் அவனை நான் நேருக்கு நேர் சந்தித்த போது அவன் வேறு மாதிரி மாறி இருந்தான். ஒரு பழுப்பு நிற ஜிப்பா ஜீன்ஸ், கண்ணில் ஒரு கண்ணாடி, ஷேவ் செய்யாத முகம் என ஒரு இலக்கியவாதிக்கு என்னென்ன முக தகுதிகள் உண்டோ அனைத்தையும் அவன் ஏற்படுத்திக் கொண்டு தயாராக இருந்தான். என்னைப் பார்த்தவுடன் இறுக்கி என்னை அணைத்துக்கொண்டான்.

நிறைய ஊர்களுக்கு செல்வதாகவும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வதாகவும் இலக்கியம் தன்னை ஆற்றுப் படுத்துவதாகவும் கூறினான். நாளை மறுநாள் தான் கோவை செல்வதாகவும் பாமரனை பார்க்கப் போவதாகவும் நீ வருகிறாயா எனவும் கேட்டான். நீண்ட கால நண்பன்.நிறைய இழப்புகளுக்கு பிறகு சரியாகி வந்திருக்கிறான் என நினைத்து அவனது அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன். ரயில் வண்டியில் ஏறிய உடனேயே குடிக்க தொடங்கி விட்டான். கையில் கோணங்கியின் அண்ணிமார் கதை சிறுகதை தொகுப்பு வைத்திருந்தான். சுந்தர ராமசாமியை திட்டினான். தி ஜானகிராமனின் மோகமுள் அவரது சொந்தக் கதை என்றான். சாருநிவேதிதாவின் சீரோ டிகிரி படித்து இருக்கிறாயா எனக்கேட்டான். கரிச்சான் குஞ்சு போல இனி யாராலும் எழுத முடியாதென்றான்.அப்போதெல்லாம் எனக்கு பெரிய இலக்கியப் பரிச்சயம் எல்லாம் எதுவும் இல்லை. பொன்னியின் செல்வன், வைரமுத்து, பாலகுமாரன் என எனக்கென ஒரு சிறிய வட்டத்தை நான் வைத்துக்கொண்டு அதிலேயே மூழ்கிக் கிடந்தேன்.

அப்போதுதான் அவன் சொன்ன பெயர் பிரமிள். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு தான் தானும் அவரைப்போல தீவிர மொழியில் எழுத தொடங்கி இருப்பதாகக் கூறினான்.அதற்கு முன்னால் எனக்கு பிரமிளைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்குத் தெரிந்த வைரமுத்துவை பற்றி நான் பேசத் தொடங்க, என்னை அவன் மிகவும் அலட்சியமாக பார்த்துவிட்டு.. பிரமிள் ஒரு கடல்.. அதற்கு முன்னால் வைரமுத்து எல்லாம் ஒரு ஆளே அல்ல என்பதுபோல பேசத் தொடங்க, தீவிர வைரமுத்து பக்தனான எனக்கு கோபம் ஏற்பட்டு விட்டது.
இரவு நேரம். எங்கள் இருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ரயிலில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென குமார் உக்கிரமாகி தன் உரத்த குரலில்

“பார்த்த இடமெங்கும்
கண் குளிரும்
பொன்மணல்.
என் பாதம் பதித்து
நடக்கும் இடத்தில் மட்டும்
நிழல் தேடி என்னோடு
அலைந்து எரிகிறது
ஒரு பிடி நிலம்.”
என்ற பிரமிளின் கவிதையை அப்படியே ஒப்பித்தான். தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் ஏதோ சண்டை என விழித்து பார்க்க… அவனோ அந்த கவிதையில் இருந்து வெளிவர முடியாமல் அந்தக் கவிதையை சொல்லிவிட்டு என்னை உற்று நோக்கிக் கொண்டே இருந்தான்.
சட்டெனக் கேட்டபோது எனக்கு அந்த கவிதை எதுவுமே புரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று இருக்கிறது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. அவன் கவிதைக்கு என்னிடம் பதில் இல்லை. அவனே என்னைப் பார்த்து புன்னகைத்து விட்டு பிரமிள் படிடா.. பிறகு பேசுவோம் என்றவாறு அவன் அமைதியாகி தூங்கத் தொடங்கினான். எனக்கு தூக்கம் வரவில்லை. பிரமிள் என்ற பெயர் என்னை ஏதோ செய்தது. என் அறியாமை குறித்த வெட்கமும், பிரமிள் என்ற பெயரின் மீதான ஈர்ப்பும் என்னுள் அடர்த்தியாக உள்ளுக்குள் ஒரு திரவம் போல பரவத் தொடங்கியது.

கோவைக்கு சென்று பாமரனை பார்த்துவிட்டு நானும் அவனும் திரும்பும்போது விஜயா பதிப்பகத்தின் புத்தகக்கடையில் எனக்கு முதன் முதலாக பிரமிள் கவிதைகள் என்கின்ற ‌ புத்தகத்தினை வாங்கி குமார் எனக்கு பரிசளித்தான். திரும்பி ஊருக்கு வரும்போது பிரமிள் பற்றியே பேசிக்கொண்டு வந்தான். அவரது கோபம், ஆவேசம், சிறுபிள்ளைத்தனமான சேட்டைகள், சுந்தரராமசாமியின் உடனான அவரது சண்டை என நிறைய கதைகள் அவரைப் பற்றி என்னிடம் அவன் பேசிக்கொண்டே இருந்தான். நான் அவனிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தது.

சித்ராவை எப்படி மறந்தாய் என நான் கேட்டேன்.
தலைகவிழ்ந்து கண்கலங்கிய அமைதியாக உட்கார்ந்திருந்தான். பிறகு மென்மையாக அவனே சொன்னான்..

“மறந்துதான் ஆகவேண்டும். அதற்கு ஒரே வழி. படிக்க வேண்டும். தீவிரமாகப் படிக்க வேண்டும். பிரமிள் போன்ற தீவிர 100 சதவீத உக்கிர எழுத்தாளரின் மொழியை படிக்க வேண்டும்”. இவ்வளவும் செய்தால் மறந்து விடலாமா …?என நான் கேட்டேன். அதற்கு அவன் அமைதியாக “மறக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் உயிர் வாழ்ந்து விடலாம்” என்றான். எனக்கு ஒரே ஆச்சரியம். ஒரு புத்தகம் அல்லது சில வரிகள் உயிர் வாழ்வதற்கான காரணமாக இருக்கக் கூடுமா என்றெல்லாம் நான் சிந்திக்கத் தொடங்கியபோது பிரமிள் இன்னும் எனக்கு அருகில் வர தொடங்கியிருந்தார்.

அந்தப் பயணத்திற்கு பின்னால் குமார் வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்று விட்டதாக சொன்னார்கள்.

கும்பகோணத்தில் மறைந்த கலைவிமர்சகர் தேனுகா அவர்களை முதன் முதலாக நான் சந்தித்தபோது கேட்ட கேள்வி பிரமிளை உங்களுக்கு தெரியுமா..? என்பதுதான். அதற்கு அவர் என்னை மிகவும் விசித்திரமாக பார்த்தார். எங்களது ஆசான் பொதியவெற்பனிடமும் பிரமிள் கவிதைகளைப் பற்றி நான் ஒருமுறை கேட்க.. எனக்கு மிக நீண்ட வகுப்பெடுத்தார்.மதிப்பிற்குரிய எஸ் ராமகிருஷ்ணனின் நட்பு கிடைத்த பிறகு பிரமிள் பற்றி இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ள முடிந்தது.பாரதிக்கு பிந்தைய காலகட்டத்தில் தமிழ் மொழியில் தோன்றிய மாபெரும் கவிஞர் பிரமிள். இயற்பெயர் தருமு சிவராம்.
ஈழத்தமிழர் . திருகோணமலையில் பிறந்தவர். 1960களில் தமிழகத்திற்கு வந்திருக்கிறார். அவருக்கு கலை இலக்கிய உலகத்தின் தலைநகரமான பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் வாழவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அந்த நோக்கத்தோடு தமிழ்நாட்டுக்கு வந்தவர் தமிழகத்திலேயே வாழ்ந்து மறைந்தார். சி.சு. செல்லப்பாவின் “எழுத்து” என்கிற சிற்றிதழ் மூலமாக இலக்கிய உலகிற்கு அவர் அறிமுகமானார். நவீன ஓவியக்கலை, சிற்பக்கலை, சோதிடம் ஆகியவற்றில் அவருக்கு நல்ல தேர்ச்சி இருந்தது.வாழும் காலத்தில் பெரும் கலகக்காரராக, சமரசம் அற்றவராக பிரமிள் வாழ்ந்து இருக்கிறார். தனக்கும், பிரமிளுக்குமான
உறவையும் விரிசலையும் முரண்களையும் பற்றி சுந்தர ராமசாமி நினைவோடை என்கின்ற நூலில் மிக ஆழமாக பதிவு செய்திருக்கிறார். காலச்சுவடு வெளியீடாக வெளிவந்திருக்கிறது.பிரமிள் வாழும் காலத்தில் எந்த மனிதரோடும் சுமுக உறவோடு இருந்ததில்லை. பெரும்பாலும் நேருக்கு நேராக மோதி விடுவதை தனது சுபாவமாக பிரமிள் கொண்டிருந்தார். கோபம் வன்மம் என்பதையெல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு வேறு வடிவத்தில் வெளிப்படுத்தத் தெரியாத உக்கிரமான மனநிலையில் தன் வாழ்நாள் முழுக்க பிரமிள் இருந்தார். தன் கோபத்தை எல்லாம் உடனே எழுத்தில் வடித்து எதிரியின் முகத்தில் அடித்து எறிகிற அச்சமூட்டும் நபராக அந்தக்கால இலக்கிய உலகில் பிரமிள் திகழ்ந்தார்.

“எல்லை” என்ற அவரது கவிதை அவரது மனநிலையை மிகச்சரியாக காட்டும் எடுத்துக்காட்டாக நான் கருதுகிறேன்.

“கருகித்தான் விறகு
நீராகும்.
அதிராத தந்தி
இசைக்குமா..?
ஆனாலும் அதிர்கிற தந்தியில்
தூசி குந்தாது.
கொசு
நெருப்பில் மொய்க்காது”.

அவரைப் பொறுத்தவரையில் அவர் தான் நெருப்பு. மற்றவர்கள் எல்லாம் வெறும் கொசுக்கள் தான்.
ஒளிக்கு நடுவிலே இருக்கக்கூடிய இருள் நான் என தன்னை அழைத்துக் கொண்ட அவர் தனித்துவமாக நிற்கவே வாழ்நாளெல்லாம் போராடிக் கொண்டிருந்தார்.

நவீன கவிதை உலகில் பிரமிளுக்கான இடம் ஒரு பேரரசனுக்கு உரியது. அவரது மொழி தமிழ்‌ அதுவரை அறியாதது.

“நிலவை மழித்தான்
தேவ நாவிதன்.
சிகையாய் முகில்கள்
வானில் விரிந்தன.
மனிதன் வியந்து
கவியானான்.”

என எழுதிய அவரது எழுத்து படைப்பாற்றல் உச்சங்களை தொட்ட வகைமையை கொண்டது.பிரமிள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு மற்றும் படைப்புகளின் தொகுப்பு ஆகியவற்றினை அவரது நெருங்கிய நண்பர் கால சுப்பிரமணியம் தொகுத்து அடையாளம் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது கவிதைகள் விடுதலைப்புலிகளின் இதழ்களில் வெளிவந்து இருக்கிறது.பிரமிள் தேர்ந்தெடுத்த கவிதைகள் என்கின்ற அவரது முக்கிய கவிதைகளின் தொகுப்பினை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்த நூலின் இறுதியில் “பிரமிள் ஒரு உரையாடல்” என்கின்ற தலைப்பில் படைப்பாளிகள் சுகுமாரனும், யுவனும் பிரமிள் கவிதைகள் படைப்புகளைப் பற்றி ஒரு முக்கியமான உரையாடலை நிகழ்த்தி பதிவு செய்திருக்கிறார்கள்.பிரமிள் உலக இலக்கிய படைப்புகளை மிக ஆர்வமாக வாசித்து வந்தவர். கலில் ஜிப்ரான், எஸ்ரா பவுண்ட், ஜோசப் ப்ராட்ஸ்கி, பாப்லோ நெருடா, என பல உலக கவிஞர்களின் கவிதைகளில் தனக்குப் பிடித்த கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அதன் தொகுப்பு சூரியன் தகித்த நிறம் என்ற பெயரில் நற்றிணை வெளியீடாக வெளிவந்துள்ளது.
ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவார்த்த தேடல்களின் மீது ஆர்வம் கொண்ட பிரமிள் அவர் எழுதிய பாதை என்கின்ற சிறு கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறார்.

அவர் மொழி பெயர்த்த அனைத்துப் படைப்புகளும் அவரது தீவிர மனநிலையை படம் பிடித்துக் காட்டுகின்றன.
எஸ்ரா பவுண்ட் எழுதிய ஒரு கவிதையை
“அதிரடி” என்ற பெயரில் இவ்வாறாக பிரமிள் மொழிபெயர்த்திருக்கிறார்.

“உன் மீது உள்ள தங்கள் வெறுப்பை
வெளியிட பயந்தவர்கள் பலர்.
என்னைப் பொறுத்தவரை
உனது வெறுப்புப் புழுக்கள்
பாதங்களை சுற்றிச்சுற்றி
கிச்சுக் கிச்சு மூட்டட்டும்.
எனது பூட்ஸின் ருசியாக வேண்டும்?
இதோ என் பூட்ஸின் ருசி!
தடவு,! நக்கு”

பிரமிளின் தமிழ் நெருப்பை உட்செரித்து சூரியனை பிரசவிக்கும் ஆற்றல் கொண்டதாக நவீன கவிதை உலகில் மதிக்கப்படுகிறது.

எழுத்து என்பது வெறுமனே எழுதுவது என்று நினைப்பவர்கள் முகத்தில் தனது படைப்புகள் மூலம் பிரமிள் காறி உமிழ்கிறார். தோன்றியதை எல்லாம் எழுத எழுத்து ஒன்றும் எடுக்கும் வாந்தி அல்ல என சாடுகிறார்.

எனக்கெல்லாம் எழுதும்போது என் முதுகுக்குப் பின்னால் கையில் ஒரு பிரம்பு வைத்துக்கொண்டு பிரமிள் நிற்பது போன்ற ஒரு தோற்றப் பிறழ்வு எப்போதும் நேர்வதுண்டு.எந்தப் பட்டங்களையும் தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளாத பெரும் கவிஞர் பிரமிள் தமிழ் சமூகத்திற்கு உரிய பெரும் சாபக்கேடான படைப்பாளிகளை வாழும் காலத்தில் மதிக்காமல் கடந்து அவமதித்த குணத்தினால் தனிமையில் உழன்று 1997-ஆம் ஆண்டு உதரவிதான புற்றுநோயால் மரணமடைந்தார்.

மொழி எதையும் செரிக்கும் வல்லமை கொண்டது. என் கண் முன்னால் காதலின் பெருங்காயத்தால் உதிரம் வழிய வழிய அலைந்த என் நண்பன் குமார் தனது ஆற்றாமையை செரிக்க பிரமிளின் மொழியை உக்கிரமாக பருகி தனக்கான சிறகை தானே தயாரித்துக் கொண்டு எங்கோ பறந்து போனான். அவன் கொடுத்த பிரமிள் கவிதைகள் தொகுப்பினை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அதிலிருந்து என்னை நோக்கி வீசுகிற வெவ்வேறு விதமான அர்த்த அலைகளில்
என்னை நானே முழ்கடித்துக்கொண்டு காணாமல் போய்க் கொண்டிருக்கிறேன்.

இலக்கியம் என்பது தொலைப்பதை மீட்டெடுப்பது மட்டுமல்ல. தொலைந்து போவதும் தானே…